செவ்வாய், ஆகஸ்ட் 28, 2018

முல்லைத்தீவில் நில அபகரிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டனர்

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை துண்டாடும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை கண்டித்து, முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணியும், போராட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது. மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்று இந்த போராட்டம் இடம்பெற்றது.

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருனாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு மகாவலி அதிகார சபை காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் சிதைக்கப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும், தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்ய வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ‘தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு’, ‘அரசே வடக்கு – கிழக்கை பிரிக்காதே’, ‘வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆயிரக்கணக்கானோர் பேரணியிலும் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு பி டபிள்யூ டி சந்தியில் ஒன்றுகூடிய மதகுருமார்கள், பொதுமக்கள், சிவில் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் பேரணியாக முல்லைத்தீவு நகர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக சென்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு மகஜர் கையளித்தனர். அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக அமைந்துள்ள முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தை சென்று அங்கு கண்டன கூட்டம் ஒன்றையும் நடத்தினர்.