29 ஆக., 2018

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் 2 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை எதிர்வரும் செப்ரெம்பர் 11ஆம் திகதி வரை நீடித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தினார் என பாதிக்கப்பட்ட சிறுமிகளால் வாக்குமூலங்கள் வழங்கப்பட்டன. அதனடிப்படையில் ஆசிரியர் கடந்த ஜூன் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில் கடந்த மாதம் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டு அவரது சட்டத்தரணியால் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தி.அர்ஜூனா, ஆசிரியரைப் பிணையில் விடுவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது விளக்கமறியல் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த ஆசிரியரை எதிர்வரும் செப்ரெம்பர் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.