போரின் போது வன்னியில் கொல்லப்பட்ட மக்களது எலும்புக்கூடுகளை அகழ்ந்து எரித்தழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் தீவிரம் பெற்ற 2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதிகளில் புதுமாத்தளன், மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்கள் செறிந்துவாழ்திருந்தனர்.
அந்தப் பகுதிகளில் வீழ்ந்த எறிகணைகள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது பத்து உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறு கொல்லப்பட்ட மக்களின் சடலங்கள் அந்த அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டன.
களப்புவெளி, கடற்கரைப்பிரதேசங்கள், மக்கள் வாழிடங்கள் என வேறுபாடின்றி அனைத்து இடங்களிலும் மக்களது சடலங்கள் புதைக்கப்பட்டன.
இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்கான மீள்குடியேற்றத்தினை தாமதப்படுத்திவருகின்ற அரசு இராணுவத்தினரின் துணையுடன் அங்கு உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களைத் தோண்டி எடுத்து அவற்றினை எரித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்குற்ற விசாரணையினை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், சடலங்களும் அகழப்படலாம் என்ற அச்சம் காரணமாவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக கருத முடிகின்றது என்கின்றனர் நோக்கர்கள்.