வெள்ளி, அக்டோபர் 18, 2013

ராமச்சந்திர ஆதித்தன் உடல் அடக்கம்

மாலை முரசு நிர்வாக ஆசிரியரும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனுமான பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.அவரது மறைவுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பா.ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு மத்திய, மாநில மந்திரிகள், அரசியல்


கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்றிரவு காயாமொழிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இன்று முன்னாள் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், நிர்வாகி சிவபால், இந்து முன்னணி மாநில தலைவர் அரசுராஜா, துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், தொழில் அதிபர்கள் தண்டுபத்து ஜெயராமன், வி.ஜி.பி.சந்தோஷம், தமிழ் நாடு மெர்க்கண்டைல் வங்கி துணை பொது மேலாளர்கள் ஆறுமுகபாண்டியன், குணசேகரன், நெல்லை –தூத்துக்குடி மாவட்ட அக்ரோ சேர்மன் மகபூப்ஜான், எஸ்.டி.காமராஜ், ஊர் தலைவர் சிவநேசஆதித்தன், கல்வீடு முருகன் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், சுரேஷ்ராம ஆதித்தன், வக்கீல் சுப்பிர மணிய ஆதித்தன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தையல்பாகுஆதித்தன், நெல்லை கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பா.ராமச்சந்திர ஆதித்தன் மகன்கள் ரா.கண்ணன் ஆதித்தன், கதிரேச ஆதித்தன், மகள் கீதாபிரேம்வெற்றி ஆகியோருக்கு முக்கிய பிரமுகர்கள் ஆறுதல் கூறினர்.   பின்னர் பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.