18 அக்., 2013

வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்!- உறுப்பினர் கமலேந்திரன
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வழிமுறையே வெற்றியளிக்கக் கூடியதென உணர்ந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
மக்களுக்கான சேவைகளை பொறுப்புடன் உணர்த்;தும், நடைமுறை அரசியல் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டும் வடமாகாண சபையில் எங்களின் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
கடந்த காலங்களில் வடமாகாண சபை ஒன்று இல்லாத சூழலில் எமது கட்சி மத்திய அரசின் இணக்கப்பாட்டுடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டு எமது மக்களுக்கும், எமது மாகாணத்துக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்து வந்தது.
அன்று எமது கட்சி கூறிய யதார்த்தத்தை இன்று முதலமைச்சர் கூறுவதை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். அதனூடாகவே எமது மக்களின் வாழ்வை தூக்கி நிறுத்த முடிவதுடன் அழிந்துபோன எமது வாழ்விடங்களையும் புதுப்பொலிவுடன் மீளக் கட்டியெழுப்ப முடியும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வழிமுறையே வெற்றியளிக்கக் கூடியதென உணர்ந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்.
எமது அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கும், மத்திய அரசுடன் பகையைத் தவிர்த்து எமது மக்களுக்கான தேவைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் முக்கியமானது.
வடமாகாண ஆளும் கட்சி இவ்வழி முறையில் பயணிக்கும்போது எமது ஆதரவினையும் வெளிப்படுத்துவோம். இந்தவேளையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பதன் மூலம் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.