புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2014


திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை காலை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
தீர்மானம் : 1 

91வது பிறந்த நாள் காணும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்து! 
 இந்தியத் திருநாட்டின் தென்கோடி முனையில், சோழ சாம்ராஜ்யத்தின் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்த தஞ்சைத் தரணியில், திருக்குவளை என்ற கிராமத்தில், வேளாண் தொழில் ஈடுபாடும், இசைத் திறனும் கொண்ட மிகவும் பிற் படுத்தப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தன்மான உணர்வும், தமிழ் மொழிப் பற்றும் மிகக் கொண்டு, தந்தை பெரியாருக்குத் தொண்டனாகவும், அறிஞர் அண்ணாவுக்குத் தம்பியாகவும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்காக உழைக்கும் உடன்பிறப்பாகவும் தன்னை ஆக்கிக் கொண்டு - இப்போது 91வது வயதில் அடியெடுத்து வைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய 77 ஆண்டுக் காலப் பொது வாழ்வில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, அடக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வு ஒன்றையே அல்லும் பகலும் நினைவிற்கொண்டு, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” எனும் சபதம் என்றைக்கு நிறைவேறும் என்ற தன் ஏக்கத்தை துhக்கத்திலும் கனவாகக் கண்டு, அக்கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காகவும், தன் காலத்தில் அமைதியானதும், அரிய வளம் கொழிப்பதும், அறிவாற்றல் சிறந்து ஓங்குவதுமான தமிழ்ச் சமுதாயத்தைக் காண வேண்டுமென்ற தணியாத ஆர்வத்தின் காரணமாக இந்த வயதிலும் ஓயாது பணியாற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் 91வது பிறந்த நாளினையொட்டி இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தனது இதயம் நிறைந்த வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறது.
 
தீர்மானம் : 2

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தோருக்கு நன்றி அறிவிப்பு! 


 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது. மக்களின் இந்தத் தீர்ப்பை, “மக்கள் குரலே மகேசன் குரல்” என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வதென்றும், தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே தெரிவித்தவாறு, திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. “வெற்றி கண்டு வெறி கொள்வதுமில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியவாறு, வாட்டத்திற்கும், வருத்தத்திற்கும் சிறிதும் இடம் கொடாமல், வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் மக்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவது என்றும், இந்தத் தேர்தலில் கழகத்திற்கு வாக்களித்த 96 இலட்சத்து 36 ஆயிரத்து 430 வாக்காளர்களுக்கும் வணக்கமும் நன்றியும் தெரிவிப்பதோடு, கழக வேட்பாளர்கள் இந்த அளவுக்கு வாக்குகளைப் பெற உழைத்துப் பாடுபட்ட கழகத் தோழர்களுக்கும் தோழமைக் கட்சிகளின் நண்பர்களுக்கும், இதயமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதென்றும், உயர் நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கின்றது.

 
தீர்மானம் : 3

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு நன்றி. 


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.கழகம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக ஓய்வின்றிப் பாடுபட்டு, பல நுhறு மைல்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அன்றாடம் கழகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வாக்குகளைப் பெறுவதற்காகத் தீவிரமாக உழைத்த கழகத் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களான தமிழர் தலைவர் கி. வீரமணி, பேராசிரியர் காதர் மொய்தீன், ஆர்.எம். வீரப்பன், தொல். திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, பேராயர் எஸ்றா சற்குணம், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, கு. செல்லமுத்து, என்.ஆர். தனபாலன், பொன். குமார், திருப்பூர் அல்தாப், லியாகத் அலிகான், பி.என். அம்மாவாசி, எல். சந்தானம் மற்றும் தோழமைக் கட்சியின் முன்னணியினர், கழகச் செயல்வீரர்கள், கழகத்தின் பல்வேறு அணியினர், தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்கள், கழகத்தைச் சேர்ந்த திரையுலகக் கலைஞர்கள் ஆகிய அனைவர்க்கும் இந்த உயர் நிலைச் செயல் திட்டக் குழு நன்றி தெரிவிக்கின்றது. 
 திராவிட இயக்கத்தின் இரட்டைப் பெரியார்களான தலைவர் கலைஞர் அவர் களும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும்; 90 வயதைக் கடந்த நிலையிலும் அதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமலும் உடல் உபாதைகள் குறித்துக் கவலைப் படாமலும், தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது உள்ளபடியே பிரமிக்கத்தக்க செயலாகும் என்பதை உயர்
நிலைச் செயல் திட்டக் குழு பதிவு செய்திட விழைகிறது.


தீர்மானம் : 4

ஆளுங்கட்சிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கண்டனம்! 
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கியது முதல், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.; தோழமைக் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு கொண்டு இடங்களை ஒதுக்கிட முன் வராவிட்டாலும், தேர்தல் ஆணையத்தோடு எழுதப்படாத உடன்பாடு ஒன்றின் மூலமாக மிகப் பெரிய சதி செய்து; பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபட்டது. புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது முதலாக, திட்டமிட்டு தேர்தலுக்கு முதல் நாளன்று உள்நோக்கத்தோடு 144 தடை உத்தரவு பிறப்பித்தது வரை தேர்தல் ஆணையம், ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பாக அ.தி.மு.க. வினர் ஈடுபட்ட அடாத செயல்கள் அனைத்தையும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து முறையிட்டும், ஏடுகள் சுட்டிக்காட்டியும்கூட, சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆளும் அ.தி.மு.க. வினர், முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து கொண்டபடி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்கு ஏதுவாக, எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லாத நிலையில் தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக முன்வந்து, 144 தடை உத்தரவைப் பிறப்பித்து செயற்கையான பீதியைக் கிளப்பி விட்டு, பின்னர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியே முதலைக் கண்ணீருடன் வாக்குமூலம் வழங்கினார். எல்லா இடங்களிலும் தேர்தல் முறைகேடுகளும், அராஜகங்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்றதையும், பின்னணியில் அ.தி.மு.க. வே இருந்து இயக்கியதையும் தமிழ்நாடே நன்கறியும். “இந்தத் தேர்தலில் ஜனநாயகத்தை விட பணநாயகம் தான் வெற்றி பெற்றது” என்று பல வார இதழ்களே உறுதிபட எழுதின. ஆளுங்கட்சியின் இத்தகைய அடாவடி களையும், முறைகேடுகளையும்; அவற்றைத் தடுத்து நிறுத்திட வேண்டிய, தமிழக காவல் துறையும், தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அனைத்துக்கும் அனுசரணையாக இருந்து ஒத்துழைத்த பாரபட்சமான செயல்பாடுகளையும் இந்த உயர் நிலைச் செயல் திட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

 
தீர்மானம் 5 :

உடனடியாகத் தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள். 
 உலகத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகள் நீங்கலாக, ஏனைய நாடுகள் பலவும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைத் தான் கடைப்பிடித்து வருகின்றன. அந்த முறையைப் பின்பற்றி தேர்தல் நடைபெறும்போது, கட்சிகள் போட்டியிடும்; தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு வீதத்துக்கு ஏற்ப, ஆட்சி மன்றங்களில் அந்தந்தக் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும்; அந்த இடங்களுக்கான உறுப்பினர்களை, கட்சி தேர்வு செய்து ஆட்சி மன்றங்களுக்கு அனுப்பும். இப்படிப்பட்ட “விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை” தான் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று பேரறிஞர் அண்ணா அவர்கள் திரும்பத் திரும்ப அறிவித்தார்கள். இதுவரை ஏற்றுக் கொள்ளப்படாத அண்ணாவின் அந்த வாதம் இப்போது பல தேசிய கட்சிகளால் வலியுறுத்தப் படுகிறது. எனவே, அனைத்திந்திய அளவில் பல்வேறு முனைகளிலும், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பற்றி ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும், நமது ஜனநாயகம் தொடர்ந்து மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டும் என்றும்; மத்திய அரசையும், இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதென இந்த உயர்நிலைச் செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது.


தீர்மானம் 6 :

கழக அமைப்பில் சீர்திருத்தம்! 


கழகத்தின் ஆக்கப் பணிகளை விரைவாகவும், விரிவாகவும் ஆற்றுவதற்கும், தொடர்ச்சியான பணிகளுக்கு அனைத்துப் பகுதிகளையும் நேரடியான சிறப்புக் கவனத்தில் கொள்வதற்கும் ஏற்றவாறு, தற்போதுள்ள மாவட்டக் கழக எல்லைகளை மாற்றியமைப்பது குறித்து நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. அந்தக் கருத்துக்குச் செயல் வடிவம் கொடுத்திடும் வகையில், மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும், மேலும் வலிமைப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்ந்து முடிவெடுக்கவும், கழகத் தலைமைக்குப் பரிந்துரை செய்யவும், குழு ஒன்றினை அமைப்பது என்றும், அந்தக் குழுவின் பரிந்துரைகள் மீது தலைமைக் கழகம் முடிவெடுத்து அதனையொட்டி முறைப்படி கழகத்தின் அமைப்பு விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் இந்த உயர் நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது.

 
தீர்மானம் 7 :

வேட்பாளர்களிடமும், பொறுப்பாளர்களிடமும் அறிக்கை பெற்று, உரிய நடவடிக்கை!
 
 நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கழகத்தின் செயல்வீரர்கள் பலரும், கழகத்தின் வளர்ச்சியிலே அக்கறை கொண்ட நடுநிலையாளர்கள் பலரும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை கழகத்தின் தலைமைக்கு எழுதி வருகிறார்கள். அந்தக் கருத்துகளிலே உள்ள அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவியாக, இந்தத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களும், அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிக்கென்று தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களும் தனித்தனியே, நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய நடைமுறைகளில் தங்களுடைய அனுபவங்களைப் பற்றியும், அவர்கள் சந்தித்த பல்வேறு நிலைமைகளைப் பற்றியும், தோல்விக்கான காரணங்கள் குறித்தும், விருப்பு வெறுப்பகற்றி, நடுநிலையோடு நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்து 15-6-2014க்குள், தங்கள் அறிக்கையினை கழகத் தலைவர் கலைஞர் அவர்களிடம் நேரில் வந்து அளிக்க வேண்டுமென்று இந்த உயர் நிலை செயல் திட்டக் குழு கேட்டுக் கொள்கிறது. கழக வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் தரும் அறிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கழகத் தலைமைக்கு இந்த உயர் நிலை செயல் திட்டக் குழு பரிந்துரை செய்கிறது. 

ad

ad