புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2014


வீட்டுப் பணிப்பெண்ணான சிறுமி தூக்கில் தொங்கினாரா? கொலையென பெற்றோர் சந்தேகம்
வறுமை காரணமாக சிங்களப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அந்தச்
சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்ணான 15 வயதுச் சிறுமி நந்தனி தூக்கில் தொங்கி இறந்துள்ளதாக எஜமான் கூறியுள்ளார். ஆனால் அப்படி தூக்கில் தொங்கி இறக்க வேண்டிய அவசியம் தமது மகளுக்கு இருக்கவில்லை. எனவே இம்மரணத்தில் சந்தேகமுள்ளது. நீதி பெற்றுத்தாருங்கள் என்று கேட்டு மனித அபிவிருத்தித் தாபனத்திடம் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலையகப் பகுதிச் சிறுமிகள் இவ்விதம் கல்வியை இடைநிறுத்தி வறுமை காரணமாக வீட்டுப் பணிப்பெண் வேலைக்குச் சென்று அநியாயமாகப் பலியான பட்டியலில் தற்போது தலவாக்கலையைச் சேர்ந்த 15வயதுச் சிறுமியான ஆனந்தன் நந்தனியும் இணைந்துள்ளார்.
மனித அபிவிருத்தி தாபனத்தின் சிவில் இணைப்பாளர் ஆர். நடராஜா தலைமையிலான குழுவினர் நேற்று தலவாக்கலையில் பாதிக்கப்பட்ட நந்தனியின் வீட்டுக்குச்சென்று தகவல்களை திரட்டினர்.
இது தொடர்பில் பிரபல சர்வதேச மனித உரிமை மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலரும் தாபனத்தின் தேசிய பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் தலைவியுமான திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசத்திடம் கேட்டபோது, அவர் இந்தச் சம்பவம் தொடர்பாக கூறுகையில்,
மலையகத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதும், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதும், மரணங்கள் சம்பவிப்பதும் தொடர்ந்து வரும் புற்றுநோயாகவே காணப்படுகின்றது.
மஸ்கெலியா - சுமதி, ஜீவராணி, போகாவத்தை – லிங்கேஸ்வரன், ஹட்டன் - லோகநாதன், லுல்கந்தர – குமுதுலி இவ்வாறு ஒரு நீண்ட பட்டியல் காணப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் மே, 19ஆம் திகதி தலவாக்கலை மில்டன், யூசி வீடமைப்புத் திட்டத்தை சேர்ந்த ஆனந்தன் நந்தனி என்ற சிறுமி கண்டி அக்குரணை பிரதேசத்தில் வீடொன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இடத்தில் தூக்கிட்டு இறந்துள்ளார்.
மேற்படி ஆனந்தன் நந்தனி வயது 15 வருடங்கள் 2 மாதங்கள் ஆகின்றன. இவர் குடும்ப வறுமை காரணமாக கல்வியை இடை நிறுத்தியுள்ளார். அதன் பின்பு கடந்த 1 மாத காலமாக அக்குரணை, நிரல்ல பிரதேசத்தை சேர்ந்த வீடோன்றில் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த மே, 19ம் திகதி திடீரென நந்தனிக்கு சுகயீனம் இல்லை என்று தகவல் பெற்றோருக்கு வந்துள்ளது. அதை தொடர்ந்து அவளின் பெற்றோர் அக்குரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு நந்தனி பற்றி தெளிவான தகவல் இன்றி அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. என்றாலும் நந்தனியின் தாயார் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார்.
அடுத்த நாள் 20ஆம் திகதி கண்டி வைத்தியசாலை சென்ற பொழுது தான் நந்தனி இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நந்தனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவே குறிப்பிடப்பட்டு பூதவுடல் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
மகளின் பூதவுடலை தலவாக்கலைக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதே அவர்களுக்கு முக்கிய நோக்கமாக இருந்ததேயன்றி, சட்ட ரீதியான விடயங்கள் பற்றி அவர்கள் கவனம் செலுத்த வில்லை. நந்தனியின் பூதவுடல் மே 22 ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டது. 
இதன் பின்பே இவ்விடயம் சம்பந்தமாக மனித அபிவிருத்தி தாபனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பெற்றோர்களான ஆனந்தன், வெல்லையம்மா என்போர் தற்பொழுது இம்மரணம் சம்பந்தமாக பல்வேறு சந்தேகங்களை கொண்டுள்ளனர்.
தங்களுடைய மகள் நந்தனி தற்கொலை செய்ய கூடிய மனோநிலையைக் கொண்டவர் அல்ல. அவர் எவ்வாறான பிரச்சினைகளையும் வீட்டிலிருந்து போகும் போது கொண்டிருக்கவில்லை. எனவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு இல்லை.
எனவே இவரின் மரணத்தின் பின்னணியில் ஏதாவது விபரீதங்கள் நடந்து இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். நந்தனியை வீட்டு வேலைக்கு அமர்த்துவதில் அப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இடைத்தரகராக செயல்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே தங்களின் மகளுடைய மரணத்திற்கு நியாயத்தை பெறுவதற்கு வழிகாட்டுமாறு மனித அபிவிருத்தி தாபனத்தை அவர்கள் அணுகியுள்ளனர்.
மலையகத்திலே மீண்டும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட இடங்களில் பலியிடப்பட்டு வருகின்ற அவலம் தொடர்கின்றது. மலையக மக்கள் தொடர்ந்தும் நவீன அடிமைகளாகவே வாழ்ந்து வருவதும், இந்த நாட்டிலே பல்வேறு சிறுவர் உரிமைகள் சம்பந்தமாக கடுமையான சட்டங்கள் காணப்பட்ட போதும்,
தொடர்ந்தும் அந்த சட்டங்களுக்கு சவால் விடும் வகையில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, அதுவும் குறிப்பாக மலையக சிறுவர்கள் அடிமைகள் போல் வேலைக்கு அமர்த்தப்படுவதும், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதும், சித்திரவதைகளுக்கும், மரணங்களுக்கும் உள்ளாக்கப்படுவது தொடர்ந்த வண்ணமேயே காணப்படுகின்றது.
கல்வி விருத்தியடைந்து வருகின்ற போதும் தொழிற்சங்க அரசியல் பலம் அதிகரித்துள்ள போதும், பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றத்திற்கு செல்லும் அங்கத்தினர்கள் அதிகரித்துள்ள போதும், அடிமைத்தனம் ஒழிந்து சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது கேள்விகுறியாகவே இருந்து வந்துள்ளது.
சிவில் அமைப்புகளும், அரச அமைப்புகளும் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். என்றாலும் சட்டரீதியான நியாயப் பிரசாரம் மற்றும் சட்ட ரீதியான தலையீடு மிக மட்டுப்படுத்தபட்டதாகவே இருக்கின்றது.
இவ்வடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டு வீட்டு வேலைக்கு சென்ற தெல்தோட்ட லூல்கந்துரையை சேர்ந்த சிறுமி, ஆர். குமுதிலியின் மரணம் இவ்வாறான ஒரு சந்தேகத்தையே ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மனித அபிவிருத்தி தாபனம் கடந்த 4 வருடங்களாக வழக்காடி, குற்றம் செய்தவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பெற்றோருக்கு நட்டஈடும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதும், சட்டங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகும். அதுவும் குறிப்பாக மலையக மக்கள் மேற்படி சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்ல வேண்டிய பாரியதொரு பொறுப்பில் காணப்படுகின்றனர் என தெரிவித்தார்.

ad

ad