புதன், ஜூன் 03, 2015

சுவிஸில் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னைபூபதியின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் 27வது ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 19ம் ஆண்டு நினைவு விளையாட்டுப் போட்டிகள், கடந்த 31ம் திகதி லவுசான் மாநிலத்தில் Dorigny மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில், விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்ட போட்டிகளானது, பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது.
எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த் தேசிய உணர்வை, ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கவும், தாயகம் நோக்கிய தேடலை உண்டு பண்ணும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இப் போட்டியில் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வன்மையாளர் போட்டிகளுடன், பார்வையாளர் போட்டிகளும் நடைபெற்றது.
வளர்ந்தோருக்கான உதைபந்தாட்டத்தின் இறுதியாட்டத்தில் பேர்ண் றோயல் விளையாட்டுக்கழகம் புளுஸ்ரார் விளையாட்டுக்கழகத்தினை வென்றது.
மென்பந்து துடுப்பாட்ட இறுதிப்போட்டியில் லவுசான் புளுஸ்ரார் விளையாட்டுக்கழகம் சூரிச் கிங்மேக்கர் விளையாட்டுக் கழகத்தினை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியீட்டியது.
5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பேர்ண் “எ” விளையாட்டுக்கழகம் லவுசான் புளுஸ்ரார் “பி” விளையாட்டுக்கழகத்துடன் மோதி; வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்குமான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிமீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன.