புதன், மார்ச் 13, 2019

தெரேசா மேயின் கடைசி நிமிட வேண்டுகோள்! சூடுபிடிக்குமா வாக்கெடுப்பு?


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உடன்படிக்கையுடன் வெளியேறுவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு இன்று நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே தெரேசா மேயின் பிரக்ஸிட் உடன்படிக்கை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்துவிலகுவது தொடர்பான பிரக்ஸிட் உடன்படிக்கை 149 மேலதிக வாக்குகளால் நேற்று தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்த உடன்படிக்கையை ஆதரிக்குமாறு பிரதமர் தெரேசா மே விடுத்த கடைசி நிமிட வேண்டுகோளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தனர்.

தெரேசா மேயின் இந்த உடன்படிக்கை தோற்கடிக்கப்பட்டமை குறித்து பல்வேறு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் உடன்படிக்கை ஏதும் இல்லாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறலாமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அதையும் நாடாளுமன்றம் ஏற்காவிடின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரீசா மே தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கை ஏதுமில்லாமல் வெளியேறலாமா என்பது குறித்து தமது ஆளும் கென்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது விருப்பப்படி சுதந்திரமாக வாக்களிக்கலாம் என்றும் தெரேசா மே கூறியுள்ளார்.

தெரேசா மே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து விமர்சனத்தை வெளியிட்டுள்ள எதிர்கட்சியான தொழிற்கட்சி, நாட்டை வழிநடத்துவதைப் போன்ற பாவனையைக் கூட பிரதமர் கைவிட்டுவிட்டார்' என்று சாடியுள்ளது.