திங்கள், ஆகஸ்ட் 19, 2019

வல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்! சட்டத்தரணி சயந்தன்

மரபுரிமைக்குரிய விளையாட்டு,மொழி, கலை, சமயம் பண்பாடு,கலாசாரம் போன்ற தனித்துவமான ஓர் அடையாளத்தை கொண்ட இனமாக தமிழினம் இருக்கின்றது. இவ்வாறு தனித்துவமான ஒரு இனமாக தமிழினம் தொடர்ந்தும் இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் குறி வைத்து தமிழினத்தின் தனித்துவத்தை குறைப்பதற்கு எல்லோரும் கங்கணம்கட்டி நிற்கிறார்கள். என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.கைதடி குமரநகர் சனசமூக நிலையத்தின் 63 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு குமரநகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான மாபெரும் தாச்சிச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இவ்வாறான ஒரு தருணத்தில் தான் இப்பொழுது எமது மக்கள் அடுத்தடுத்து மூன்று முக்கிய தேர்தல்களை எதிர் கொள்ளத் தயராக இருக்கின்றார்கள். இதில் ஜனாதிபதித் தேர்தல் தான் முதலில் வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இவ்வாறான நிலையில் இலங்கையினுடைய தலைவிதியையும், தமிழர்களினுடைய தலைவிதியையும் தீர்மாணிக்கப்போகும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்கிறார்களோ இல்லையோ வல்லரசுகள் தங்களுக்கு சார்பானவரை ஜனாதிபதி ஆக்கிவிட வேண்டும் என்று போட்டி போட்டுக்கொன்டு இருக்கின்றன. இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் அமெரிக்கா இந்திய கூட்டு வல்லரசுக்கும் சீன வல்லரசுக்கும் இடையிலான போட்டியாகத்தான் இருக்கப் போகின்றன. சர்வதேசத்தின் அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கைக்கு சார்பாக தமது வல்லரசுப் பலத்தைப் பாவிப்பதற்கு சீனாவும் ரஷ்யாவும் தயாராக இருக்கின்றன. இவ்வாறிருக்க அமெரிக்காவும் மேற்குலகமும் போர்க் குற்ற விசாரணை விடயத்தில் காத்திரமான பங்களிப்பை செய்திருக்கின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலானது சீன வல்லரசிற்கு சார்பான தலைவரை தேர்வு செய்வதா? அல்லது அமெரிக்கா இந்தியா மேற்குலகக் கூட்டு வல்லரசுகளிற்கு சார்பான தலைமையை தேர்வு செய்வதா? என்பதில் தான் முடிவடையப் போகின்றது என அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது