புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2012


அப்பாவி இளைஞர்கள் புலிகள் என முத்திரை குத்தப் பொறுப்பான அதிகாரிகள் ஆண்டவனுக்குக் கணக்குகொடுக்க வேண்டியவர்கள் வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிவக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'முன்னாள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த போராளிகள் 2500பேரை சிவில் சமூக பாதுகாப்பு திணைக்களம் மூலமாகத் தெரிந்தெடுத்து பல்வேறு உப கொடுப்பனவுகளுடன் கூடிய நல்ல வேதனம்
கொடுப்பதாக அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு நல்ல முயற்சியாக இருந்தபோதிலும் இந்த இளைஞர் யுவதிகளில் அனேகர் விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக அவர்களின் இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பாடசாலைகளில் பயின்று கொண்டிருந்த நன்கு படிக்கக்கூடியவர்களாவர். யுத்த முடிவில் - யுத்த முனையிலும் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் இராணுவ அதிகாரிகள் சிறுவிசாரணையின் பின் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற வார்த்தையை நம்பி சரணடைந்தவர்களாவர்.
துரதிர்ஷ்டவசமாக அவர்கள் ஒருவரேனும் விடுதலை செய்யப்படாது அவர்களது கல்விக்குப் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் 12000 இளைஞர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு உயர்கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டு புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். ஆகவே 2500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது ஒன்றுமில்லாத நிலையிலும் பார்க்க மேலானது.
ஆனால் அப்பாவி இளைஞர்கள் புலிகள் என முத்திரை குத்தப் பொறுப்பான அதிகாரிகள் ஆண்டவனுக்குக் கணக்குகொடுக்க வேண்டியவர்கள் ஆவர். ஒரு முக்கியமான விடயம் தங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை அல்லது தங்களின் கவனத்திற்கு எவராலும் கொண்டுவரப்படவில்லை.

அதுதான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் பரிதாபகரமான நிலையாகும். பலதலைமுறையாக சேகரித்துவைத்திருந்த அத்தனை சொத்துக்களையும் இழந்து இரவோடு இரவாகப் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டவர்கள் - எதுவுமின்றி புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றவை – பானை, சட்டி, துவாய், சாரம், நுளம்பு வலை போன்றவை மட்டுமே! சில தகரங்களும், சில மரத்துண்டுகளும் குடிசைகள் அமைப்பதற்கு வழங்கப்பட்டன. யுத்தம் முடிந்து 3 வருடங்களின் பின்பும்கூட பாதகமான சுவாத்தியமற்ற சூழ்நிலையால் பாதிக்கப்படுகிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கோப்பாப்புலவில் மனிக் முகாம் மூடப்பட்டு அங்கிருந்த 175 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் அவசர அவசரமாக கொண்டுவந்து பெரும்பகுதி காடாக இருக்கும் யாரோ ஒருவருக்குச் சொந்தமான காணிக்குள் குவிக்கப்பட்டுள்ளனர். கறையான் புற்றுக்கள் நிறைந்த பாம்புகள் குடியிருக்கும் பாதுகாப்பற்ற இடமாகும். இவர்களை அங்கே குவிப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பே அக்காடுகள் புல்டோசரினால் துப்பரவு செய்யப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் என்னவெனில் இராணுவத்தினர் பெற்றிருந்த நற்பெயர் கோப்பாபுலவுடன் அற்றுப் போய்விட்டது.
இவை தவிர அதிகாரபூர்வமான 90000க்கும் மேற்பட்ட விதவைகள் 1000க்கும் மேற்பட்ட அநாதைகளும் ஆதரவற்றவர்களும் உள்ளனர் என நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. மேலும் முகாம்களிலுள்ள 10க்கு ஒருவர் அங்கவீனர்களாக இருக்கிறார்கள். அனேகர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென்ற காரணத்தால் அந்த ஷெல் துண்டுகளை உடலில் சுமந்தபடி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்களால் எந்த வேலையும் செய்யமுடியாது. இத்தகையோருக்கு அரசாங்கம் என்னத்தைச் செய்திருக்கிறது? பாடசாலைகளுக்குப் போகாமல் வேலைவாய்ப்பு எதுவித வருமானமோ இன்றி வாழும் இளைஞர்களால் என்ன செய்ய முடியும்? கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டும் வாழும் இளைஞர்களைத் திருப்திப் படுத்துவதால் எதுவித பலனுமில்லை. அது யாருக்கும் மகிழ்ச்சி தராது. இருக்கின்ற பிரச்சனையை ஒன்றாக எடுத்து – எந்த அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்கு முன்பு மக்களின் பசியை இல்லாது செய்யுங்கள். கிளிநொச்சியில் விளையாட்டு மைதானம் யார் கேட்டார்கள்? கச்சேரிக்கோ பொலிஸ் நிலையத்திற்கோ புதிய கட்டடம் தேவை என்று எவரும் அலுத்துக் கொள்ளவில்லை. மக்கள் பசியால் வாடுகிறார்கள். முதல் அவர்களுக்கு உணவு அளியுங்கள். அதுதான் உங்களுடைய முதற்கடமையாகும்.

அவர்களுக்குத்தான் வீடுதேவை. இராணுவத்திற்கு அல்ல. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டாம் என்று நான் கூற வரவில்லை. மத்திய கிழக்கு கொரியா இத்தாலி போன்ற நாடுகளில் 15000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்களோ அன்றி வடக்கு கிழக்கு இளைஞர்களோ வெளிநாட்டில் எத்தனைபேர் வேலைவாய்ப்புப் பெற்றனர்? கிளிநொச்சி முல்லைத்தீவு இளைஞர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை நான் நன்றாக விளங்கிக்கொண்டேன். அதை நான் பாராட்டவும் விரும்புகின்றேன். கிழக்கை மறந்து விடாதீர்கள்.
அங்கேயும் நிலைமை சிறப்பாக இல்லை. கிழக்கில் இந்த வகையைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கேனும் இந்தத் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நியமனங்கள் முறைப்படி செய்யப்படாமையினால் இந்நியமனங்களை எவரும் குழப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆகவே தயவுசெய்து இவ்விளைஞர்களின் வேலைக்கு உத்தரவாதத்தை உறுதிப்படுத்துங்கள். இந்தத் தீமைகள் எல்லாவற்றுக்கும் நான் தங்களுக்கு கூறக்கூடிய ஆலோசனை தயவுசெய்து கடந்த காலத்தைப் போல உணவுப் பங்கீட்டுப் புத்தகத்தை வழங்கி அதன்மூலம் ஏழைகள் அனைவரும் ஒரு நாளைக்கு ஓர் பொழுதாவது நிறைவாக உண்ண வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad