புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2012


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய மாட்டார்கள் என்று கனவு காண்பது வேதனைக்குரிய விடயம்! யோகேஸ்வரன் பா.உ.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய மாட்டார்கள் என்று கனவு காண்பதெல்லாம் வேதனைக்குரிய விடயமாகும். சிலர் தங்களின் சுய இலாபத்திற்காக எங்கள் மக்களை குழப்புகின்றார்கள். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை
தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் வேட்பாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்த உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தமிழர்கள் ஏழு அல்லது எட்டு ஆசனங்களை பெறலாம். அதை முறியடிப்பதற்காக அரசாங்கம் பல சதிகளைச் செய்தது. இறுதியில் அவர்களின் சதி முயற்சியால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். நாங்கள் தோற்றவர்களல்லர். வென்றவர்கள். திட்டமிட்டு தோற்கடித்திருக்கின்றார்கள்.
எங்களது தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதில்லை என்று கூறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதிலிருக்கின்ற தலைமைகள் சேர்ந்து எங்களுக்கே தெரியாமல் தேர்தல் ஆணையாளரிடம் பதியச் சென்றார்கள். பின்னர் சில திருத்தங்களுடன் வாருங்கள் என்று அவை நிராகரித்து அனுப்பப்பட்டன. சில சட்ட வரையறைகளோடு செல்ல வேண்டிய சூழல் இருந்தது.
ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய மாட்டார்கள் என்று கனவு காண்பதெல்லாம் வேதனைக்குரிய விடயமாகும். சிலர் தங்களின் சுய இலாபத்திற்காக எங்கள் மக்களை குழப்புகின்றார்கள். கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்தில் வைத்த பற்றின் நிமித்தம் தான் வாக்குப் பிச்சைகளை வழங்கினார்கள். அவர்களை யாரும் தூக்கியெறியவோ துஷ்பிரயோகம் செய்யவோ முடியாது.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்ற ஐந்து கட்சிகளில் தமிழரசுக் கட்சி மாத்திரம் தான் கிழக்கு மாகாணத்தின் தலைமையை கொண்டிருக்கின்றது. ஏனைய நான்கு கட்சிகளும் வட மாகாணத்தில் தான் தலைமையை கொண்டிருக்கின்றது. அதில் ஆனந்த சங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் போன்ற கட்சிகள் சேர்க்கப்படும் போது இங்கிருக்கின்ற மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அனுமதி கேட்டார்கள்.
நாங்கள் அதற்கு அனுமதி கொடுக்க மறுத்தோம். ஆனாலும் இணைத்துக் கொண்டார்கள். ஆனாலும் நாங்கள் அதற்கு எதிராக பிரசாரம் செய்து விமர்சனம் செய்து தலைமையை தூக்கியெறியவில்லை. தலைமைக்கு கட்டுப்பட வேண்டுமென்று இன்று வரை அமைதியாக இருக்கின்றோம்.
வெளிநாடுகளில் பல சந்திப்புக்கள் நடைபெறுகின்றது. ஐந்து அல்லது ஆறு பேர் அதில் கலந்துகொள்ளச் செல்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திலிருந்து சம்பந்தன் ஐயா மாத்திரம் தான் செல்கின்றார். கிழக்கு மாகாணத்திலிருந்து மேலும் பலர் செல்ல வேண்டுமென்று நாங்கள் கேட்டோமா? இல்லை. ஏனென்றால் நாங்கள் ஒற்றுமையை விரும்புகின்றோம்.
எங்கள் தலைமைத்துவத்தின் கீழ் ஏதாவது நல்ல விடயம் நடைபெற வேண்டுமென்று நாங்கள் விரும்பிக்கொண்டிருக்கின்றோம். இன்று தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு நல்ல தலைமைத்துவம் சம்பந்தன் ஐயாவினுடைய தலைமைத்துவமாகும். அவரின் வழிகாட்டலின் கீழ் கட்சியை பதிவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அதாவுல்லாவின் கட்சி என பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. அவையெல்லாம் ஒரு சட்டதிட்டத்தின் கீழ் ஒரு வரையறையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது கூட கிழக்கு மாகாண முதலமைச்சரை நியமிக்கும் போது கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவரையே ஜனாதிபதி நியமித்தார்.
தமிழரசுக்கட்சியை தமிழ் மக்களிடமிருந்து அழிக்க முடியாது. வீட்டை 30வருடத்திற்கு முன்னர் முடக்கிப்போட்டார்கள். ஆனால் தற்போது அது திரும்ப வந்திருக்கின்றது. அப்போதும் மக்கள் அதற்கு வாக்களிக்கின்றார்கள். தமிழரசுக்கட்சியை மக்கள் இப்போதும் விரும்புகின்றார்கள். இதனால் பலர் அரசாங்கக் கட்சிகளால் பழிவாங்கப்பட்டார்கள். தமிழரசுக்கட்சியை தூக்கியெறிவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஆகையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவதற்கு நாங்கள் ஆதரவு கொடுக்கின்றோம். அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எங்கள் தலைவர் சட்டத்தரணிகளை கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றார். இவ்வாறான தருணத்தில் நாங்கள் ஊடகங்கள் மூலமும் எங்களது நடவடிக்கைகள் மூலமும் மக்களை குழப்பக்கூடாது.
மக்கள் எத்தனையோ பிரச்சனைகளின் மத்தியில் வாக்களித்திருக்கின்றார்கள். மக்கள் அளித்த வாக்குப் பிச்சையின் காரணமாக நாங்கள் வந்திருக்கின்றோம். நாங்கள் நிச்சயம் என்றும் சோரம் போக மாட்டோம்.
உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற அயராது பாடுபடுவோம். எங்களது மாகாண சபை உறுப்பினர்களை பொறுத்த வரையில் மிகவும் நிதானமாக நடவடிக்கைகளை முன்னேடுத்துச் செல்வார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படாதவர்;கள் தோற்றவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் எங்களுக்கு உரமூட்டியவர்கள். எதிர்காலத்தில் அரசியல் முன்னேற்றத்திற்கு வருவார்கள். இவர்கள் எல்லோரது வெற்றியையும் தான் நாங்கள் இன்று கொண்டாடுகின்றோம். நாங்கள் மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றோம்.
திட்டமிட்ட சதியால் முறியடிக்கப்பட்டோம். அனாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருந்தாலும் நிதானமாக முறையில் நடவடிக்கைகளை எடுப்போம். எங்கள் நோக்கம் கிழக்கு மாகாண சபையை பிடித்து வைத்திருப்பதல்ல. வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை பெறுவதாகும்.

ad

ad