செவ்வாய், பிப்ரவரி 18, 201410 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்: திருமாவளவன்


பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகியோரின் தூக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளார்!

’’இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருடைய மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் பி.சதாசிவம் உள்ளிட்ட நீதியரசர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருணை மனுவைப் பரிசீலிப்பதில் காலதாமதம் நேரிட்டால் அதைத் தண்டனை குறைப்புக்குக் காரணமாகக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு முன்வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இதன் மூலம் இன்னும் பல மரண தண்டனைக் கைதிகள் மரணத்தின் பிடியிலிருந்து விடுபட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  இந்த மகத்தான தீர்ப்பின் காரணமாக உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயரும் என்பதில் அய்யமில்லை.
மரண தண்டனைக் கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது மிகப் பெரும் அவலமாகும்.  சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையே இதற்குக் காரணம்.   மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட கைதிகளுக்கு கருணை அடிப்படையில் தண்டனை குறைப்புச் செய்து விடுதலை செய்யப்படுவதற்குத் தகுதி இல்லை என தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.  அதன் காரணமாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்தவர்கள்கூட சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் ஆயுள் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.  இதற்குக் காரணம் தமிழக அரசின் மேற்கண்ட ஆணைதான். எனவே அந்த ஆணையை ரத்துச் செய்து 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வரவேண்டுமென வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.