புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2016

பேரறிவாளன், முருகன், சாந்தனுடன் பெ. மணியரசன் வேலூர் சிறையில் சந்திப்பு!



ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, வாழ்நாள் சிறையாளிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர்  வேலூர் சிறையில் நேற்று (15.03.2016) நேரில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலைக்காக தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது குறித்தும், இந்திய அரசு ஏழுதமிழர் விடுதலைக்கு ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தி வருவது குறித்தும் பேசினார்கள்.


சந்திப்பில், கி. வெங்கட்ராமன் எழுதிய, “ஏழுதமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” நூலையும்,  ம. இலட்சுமி எழுதிய “லட்சுமி எனும் பயணி” நூலையும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர்க்கு நேரில் வழங்கினர்.

சந்திப்பின் போது, தலைமைச் செயற்குழு உறுப்பினர்  அ. ஆனந்தன், மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் ம. இலட்சுமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை மையக்குழு உறுப்பினர் பாவலர் செம்பரிதி, ஒசூர் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை தோழர்கள் கதிர்வேலு, விநாயகமூர்த்தி, தமிழக இளைஞர் முன்னணித் தோழர் பா. வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.

தந்தையார் குயில்தாசனின் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு, சிறை விடுப்புக் கோரி மனு அளித்து காத்திருக்கும் செய்தியை பேரறிவாளன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு, இவருக்கும் மற்றவர்களுக்கும் குறைந்தது ஒரு மாத சிறை விடுப்பு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் அனைவரும் வலியுறுத்துவதாக தலைவர் பெ.ம. தெரிவித்தார்.

“விரைவில் விடுதலையாவீர்கள், வெளியில் அனைவரும் சந்திப்போம்” என்று நம்பிக்கை வார்த்தைகளுடன்,  விடை பெற்றனர்.

ad

ad