03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், செப்டம்பர் 06, 2018

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம்- மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது


குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, இரண்டு நாட்களாக நடத்திய சோதனையின் முடிவில் குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ், அரசு அதிகாரி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். #GutkhaScam #CBIRaid
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம்- மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது
சென்னை:

குட்கா ஊழல் விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரும் பூகம்பத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

குட்கா விற்பதற்காக அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஆதாரத்தை நிரூபிக்க சி.பி.ஐ. நடத்தி வரும் அதிரடி சோதனைகள் மற்றும் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் தெரியவந்தது. அப்போது சிக்கிய டைரியில் யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்ற முழு விவரமும் இருந்தது.

முதலில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் முன்னேற்றம் இல்லாததால் ஐகோர்ட்டு உத்தரவு படி தற்போது இந்த லஞ்ச குற்றச்சாட்டு பற்றி டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதலில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து தகவல்களை பெற்ற டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் அது பற்றி தீவிர ஆய்வு நடத்தினார்கள். லஞ்சப் பணம் எப்படி கை மாறியது என்பதை கண்டு பிடித்து விட்டால் இந்த ஊழலை நிரூபித்து விடலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த வாரம் அவர்கள் சென்னை வந்து குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வைக்கு மேலும் ஒரு ரகசிய டைரி கொண்டு வரப்பட்டது. அந்த டைரியிலும் அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல்கள் இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து போலீசார் மாதவராவுக்கு சொந்தமான செங்குன்றம் அருகே உள்ள குடோனுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் என்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, பெங்களூர், மும்பை மற்றும் குண்டூர் ஆகிய 7 நகரங்களில் 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 13 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நேற்று மாலை பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவுக்கு வந்தது.

டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் சோதனை நடந்ததாக தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் ஏதேனும் ஆவணம் கைப்பற்றப்பட்டதா? என்பது பற்றி விசாரித்த போது தகவல்களை தெரிவிக்க சி.பி.ஐ. வட்டாரங்கள் மறுத்து விட்டன.

நொளம்பூரில் உள்ள முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீட்டில் நேற்று காலை 5 அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். இடைவிடாமல் சோதனை நீடித்தது. மற்ற இடங்களில் சோதனை முடிந்த நிலையில் ஜார்ஜ் வீட்டில் மட்டும் சோதனையை அதிகாரிகளால் விரைந்து முடிக்க இயலவில்லை.

ஜார்ஜ் வசிக்கும் நொளம்பூர் பங்களாவில் 32 அறைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பெரும்பாலான அறைகள் சொகுசு வசதிகள் கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால்தான் சோதனையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு அறையாக சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் நள்ளிரவையும் கடந்து விடிய விடிய சோதனை நீடித்தது. இன்று காலை 8.30 மணிக்கு ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனைகள் முடிவுக்கு வந்தன.

ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்ஜ் வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்புகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

ஜார்ஜ் வீட்டில் ஏதேனும் அறைக்கு சீல் வைக்கப்பட்டதா? என்பது பற்றி தெரியவில்லை. ஜார்ஜ் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்தபோது குட்கா ஊழலில் தொடர்புடையது பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித நகல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையே குட்கா ஊழல் தொடர்பாக கலால் வரித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குட்கா நிறுவன பங்குதாரர்களிடம் இருந்து லஞ்சப் பணத்தை அரசு அதிகாரிகளுக்கு வாங்கி கொடுத்தது யார் என்ற விவரங்கள் தெரிய வந்தது.

லஞ்சம் வாங்கி கொடுப்பதற்காகவே சென்னையில் உள்ள சிலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருவதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களை பிடித்தால்தான் உண்மை அனைத்தும் தெரியவரும் என்பதால் அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சுற்றி வளைத்தனர். அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் நந்த குமார், ராஜேந்திரன் என்று தெரிய வந்துள்ளது.

நந்தகுமார், ராஜேந்திரன் இருவரும் லட்சக்கணக்கான ரூபாயை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளனர். குட்கா விற்பதற்கு எந்த தடையும் வந்து விடக்கூடாது என்பதற்காக இவர்கள்தான் அடிப்படையாக அமைந்துள்ளனர்.

சென்னையில் ரகசிய இடத்தில் இவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தெடார்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணையின் முடிவில் அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா? என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வரும்.

35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்பார்த்த சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்தும் அடுத்தக்கட்டமாக விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

விசாரணைக்கு பிறகு யார்-யார் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் என்பது தெரியவரும்.