புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2018

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - ஜெயக்குமார்


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - ஜெயக்குமார்
கோப்புப்படம்
புதுடெல்லி:

தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக விரைவு கோர்ட்டில் நடந்த விசாரணையில் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் அந்த மனு மீது எந்த ஜனாதிபதியும் முடிவு எடுத்து அறிவிக்கவில்லை. இதற்கிடையே கருணை மனு தாக்கல் செய்து நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது.

அந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருப்பதால் தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் மத்திய அரசு ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தண்டனை பெற்ற 7 பேரும் விடுதலையாவதில் சிக்கல் நீடித்தப்படி இருந்தது.


இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். இதற்காக சட்டசபையில் அவர் தீர்மானமும் கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால் அதில் தமிழக அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள உரிமைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:-

ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம்.

இது தொடர்பாக தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். 2016-ம் ஆண்டு தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் கவர்னரே முடிவு செய்யலாம்.

எனவே மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.

சுப்ரீம்கோர்ட்டின் இன்றைய பரபரப்பு தீர்ப்பு காரணமாக ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் விரைவில் விடுதலையாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்பார். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். அநேகமாக 7 பேரை விடுவிக்க கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரறிவாளன் வக்கீல் பாபு இதுகுறித்து கூறுகையில், “தமிழக அரசு கவர்னரை சந்தித்து பேசி 7 பேர் விடுதலைக்கு உதவ வேண்டும்” என்றார்.

இதனை அடுத்து, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

ad

ad