புதன், ஏப்ரல் 02, 2014

சென்னையில் சிலிண்டர் வெடித்து தம்பதி பலி
சென்னையில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி துளசி. இவர்களுக்கு பிரதீப் என்ற மகனும், முத்துசெல்வி என்ற மகளும் உள்ளனர்.

வாடகை வீட்டில் கீழ் தளத்தில் சுப்பிரமணி குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று அதிகாலை சுப்பிரமணியின் வீட்டில் இருந்து பயங்கர வெடிச்சத்தம்  கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

அப்போது சுப்பிரமணியன் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து  தீயணைப்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதில, இடுபாடுகளுக்குள் சுப்பிரமணியும், துளசியும் உடல் சிதைந்து கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். வீட்டு உரிமையாளர் கிருஷ்ணன் வீடும் சேதம் அடைந்தது அவரும் படுகாயம் அடைந்தார்.

சிலிண்டர் வெடித்து சிதறியபோது, முத்துசெல்வி கட்டிலுக்கு அடியில் படுத்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார். படுகாயமடைந்த கிருஷ்ணன் மற்றும் 13 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.