புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2014

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை: அரசின் வெட்கக்கேடான செயல்! உலகத் தமிழர் பேரவை கண்டனம்

'உலகத் தமிழர் பேரவை' உட்பட வெளிநாட்டில் இயங்கும் பதினாறு புலம்பெயர் அமைப்புகளை தோற்கடிக்கப்பட்ட தமழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என்று தெரிவித்து, அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என்று விமர்சித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகரும்
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான ஜோன் ரியன்.
இந்த நடவடிக்கை, இலங்கையில் யுத்தத்தின் போதும், தற்போதைய மனித உரிமை மீறல், துஷ்பிரயோகங்களை ஒட்டியும் உண்மைகளைக் கண்டறிந்து, நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்போரை அச்சுறுத்தி, மௌனிக்கச் செய்யும் முயற்சியின் பிந்திய வடிவம்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கடந்த மார்ச் 27 ஆம் திகதி நிறைவேற்றிய சில தினங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. ஏதோ இந்த இரண்டு சம்பவங்களும் தற்செயலாக ஏறத்தாழ ஒரே சமயத்தில் நடைபெற்றவை அல்ல. மேற்படி ஐ.நா. தீர்மானம், யுத்தத்தின் இறுதிக் காலத்தில் இரு தரப்புகளினாலும் சர்வதேச சட்டங்கள் மோசமாக மீறப்பட்டமை தொடர்பில் பல மனித உரிமை மீறல் கேள்விகளை எழுப்பி, சர்வதேச விசாரணையை முன்னெடுக்கின்றது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கில் புலிகளை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை நடவடிக்கை என்கிறது அரசு.

ஆனால், யாருமே மீண்டும் ஆயுதப் பிணக்குக்குச் செல்ல விரும்பவில்லை. அப்படிச் செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க மிக உண்மையான ஆதாரம் ஒன்றைக்கூட அரசினால் சமர்ப்பிக்க முடியாது. வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியதைப் போன்று இது, அரசியல் உள்நோக்கத்துக்காக நடத்தப்படும் வேட்டை என்பதோடு அப்பிரதேசத்தை இராணுவ மயப்படுத்தி, அடக்கு முறைக்குள் மூடி வைத்திருப்பதற்கான எத்தனமுமாகும். பிரதான புலம்பெயர் அமைப்புக்களை 'பயங்கரவாத அமைப்புகள்' எனக் குறியிடுவதன் மூலம் இலங்கைப் பிரஜைகள், சர்வதேச தொண்டர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்ற தரப்புகள் இந்த அமைப்புகளுடன் தொடர்பாடல் கொள்ளாது தடைசெய்யப்படுகின்றன. இந்த அறிவிப்பால் இந்த அமைப்புக்களுக்காகச் செயற்படும் பிரதிநிதிகளின் நண்பர்களும், உறவினர்களும் பெரும் ஆபத்துக்குள்ளாகின்றமையோடு, இலங்கைக்குச் செல்லும் புலம்பெயர் தேசத்தவர்கள் நுணுக்கமாக கண்காணிப்பு ஆய்வுக்கும் உட்படுத்தப்படும் நிலைமையும் நேர்ந்துள்ளது.

இலங்கை அரசு புலம்பெயர் அமைப்புகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைக் கொள்வதில் சிரத்தையுடன் இல்லை. திட்டமிட்டு தமிழ் மக்களை ஒதுக்கியமையே ஆயுத மோதலுக்கு மூல வேர். அதனைக் கவனித்து சீர் செய்யவும் அரசு தயாரில்லை. அரசின் இந்த நடவடிக்கை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீதான அப்பட்டமான தாக்குதல். இது இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேலும் மிக மோசமாக்கி, பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நல்லிணக்க செயற்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விடயங்கள் மிக முக்கியமாகக் கையாள வேண்டியவை என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மூலம் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றி, அது குறித்து நடவடிக்கை எடுக்கையில் இலங்கை அரசு இப்படி நடந்து கொள்வதை சர்வதேச சமூகம் பொறுத்துக்கொள்ளாது. இலங்கையில் தண்டனை விலக்களிப்பு முறைமை சவாலுக்கு உட்படுத்தப்படுவதும் சர்வதேச, சுயாதீன விசாரணையும் ஏன் அவசியமானவை என்பதை இலங்கை அரசின் தற்போதைய இந்த நடவடிக்கை வலியுறுத்திக் காட்டுகின்றது. - இப்படி அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad