புதன், ஏப்ரல் 02, 2014

எந்த நாட்டுக்கு எதிரான விசாரணையையும் இந்தியா ஆதரித்தது இல்லை! ஐ.நா. இந்தியப் பிரதிநிதி தடாலடி
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. சபையில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்து ஒதுங்கிக் கொண்டது இந்தியா.
ஜெனீவா ஐ.நா. சபைக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது கருத்து தெரிவித்த இந்தியப் பிரதிநிதி திலீப் சின்கா,  இலங்கை மீது சர்வதேச சுதந்திர விசாரணை இப்போது வேண்டாம் என்பதால், இந்தியா இந்த வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறது என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, அனைத்து நாட்டு பிரதிநிதிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கூட்டம் முடிந்ததும் இலங்கையின் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, வெளிப்படையாக இந்தியப் பிரதிநிதி திலீப் சின்காவுக்குக் கைகுலுக்கினார்.
இந்த நிலையில் இந்தியப் பிரதிநிதி திலீப் சின்காவைச் சந்தித்து தொடுக்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும்,
ஈழத்தில் நடந்த போரில் இலங்கையோடு இந்தியாவும் பங்கு பெற்றதனால் தான், ஐ.நா-வில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட 'சர்வதேச சுதந்திர விசாரணை’யை இந்தியா ஆதரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறதே?
மற்ற பிரச்னைகளோடு இதனை ஒப்பிடக் கூடாது. குறிப்பிட்ட இந்த முடிவு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான இந்தியாவின் முடிவு. சர்வதேச சுதந்திர விசாரணையைத் தள்ளிப்போட வேண்டும் என்பது தான் இந்தியாவின் கருத்து. மற்றபடி எதனையும் நான் சொல்ல விரும்பவில்லை.
அப்படி எனில், கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு என்ன நீதியை இந்திய அரசு கொடுக்கப் போகிறது?
அதை இந்தியா கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவை எங்கு, எப்படி கவனிக்க வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்து முடிவுகள் எடுக்கும். ஐ.நா. ஆணையாளர் அவருக்குக் கிடைத்த தகவலின்படி செயல்படுகிறார். அப்படித்தான் இந்தியாவும்.
அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில், ஈழப் போரில் இந்தியாவின் இராணுவப் பங்களிப்பை விசாரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே?
அதற்குள் வர நான் விரும்பவில்லை. அது இந்த மனித உரிமைகள் சபையில் விவாதிக்கப்படவும் இல்லை.
இந்தியா இந்தப் போரில் பங்குப் பெற்றதால்தான் குறிப்பாக சர்வதேச விசாரணையை மட்டும் வேண்டாம் என்கிறதா?
அப்படியில்லை. நீங்கள் கடந்த காலங்களில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்தீர்கள் என்றால் புரியும். இந்தியா எந்த நாட்டுக்கு எதிரான சர்வதேச விசாரணையையும் ஆதரித்தது இல்லை. இதுதான் பல ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. அதே கொள்கைதான் இலங்கை விஷயத்திலும் உள்ளது.
அப்படி எனில் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை, 700 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்ற பின்பும் மாறாதா?
இதைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டியது நான் அல்ல.