புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

அம்மாவைத்தராவிட்டால் நான் தற்கொலை செய்வேன் மகளின் கதறல்; இராணுவத்திற்கு எதிராகவே அதிக குற்றச்சாட்டு 
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் இருவர் இன்று இரகசிய சாட்சியமளித்தனர்.




காணாமல்போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குழுவின்  வவுனியா மாவட்டத்திற்கான பதிவுகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இருவர் தங்களுடைய கணவன்மாரைக் காணவில்லை என்பது குறித்தும் அது சார்ந்த சாட்சியங்களை இரகசியமான முறையில் வழங்கினர்.

எனினும் இவர்கள் இருவரது கணவர்மாரும் தமிழீழ  விடுதலைப்புலிகளது முக்கிய தளபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பான மூன்றாம் நாள் சாட்சியப்பதிவில் வவுனியா பிரதேச செயலகத்தை சேர்ந்த 5கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 61 பேர் ஆணைக்குழுவால் அழைக்கப்பட்ட நிலையில் 56 பேர் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.



மேலும்  129 பேர் தங்களுடைய உறவுகள்தொடர்பிலும் தேடித்தருமாறு புதிய பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சாட்சியமளித்தவர்களை வைத்துப்பார்க்கின்றபோது விடுதலைப்புலிகள்  மற்றும் ஏனையவர் மீதான  குற்றச்சாட்டை விட 30 ற்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் இராணுவத்தின் மீதே இருந்தது.

இவர்களுடன் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டனர், இனந்தெரியாத நபர்கள் கடத்தினர் போன்ற குற்றச்சாட்டுக்களும் இன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

முக்கிய சாட்சியங்களாக , 

பொலிஸ்நிலையம் சென்ற மருமகன் வீடு திரும்பவில்லை

2008.31.08 அன்று செட்டிகுளம் பொலிஸ் நிலையத்திற்கு போன எனது மருமகனை தந்திரிமலை இராணுவம் பிடித்துச் சென்றுவிட்டது.

பின்னர் நாங்கள் போய்க்கேட்டபோது இல்லை என்று கூறிவிட்டனர். இவர்களை துஷார என்ற சீ.ஐ.டியும் மஞ்சுள என்பவரும் தான் பிடித்துக் கொடுத்ததாக அறிந்தேன்.

மகன் இருக்கிறார் விடுவோம் என்றும் எல்லாரையும் விடும் போது விடுவோம் என அனுராதபுரத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சீ.ஐ.டி கூறியது ஆனால் இன்னும் விடவில்லை என்றார். 


அம்மா இல்லாவிட்டால் தற்கொலை செய்து சாவேன்; கையெடுத்து கும்பிட்டு கதறிய மகள்

இறுதிக்கட்ட யுத்தத்தில் காயப்பட்ட எனது அம்மாவை தூக்கிவந்து இராணுவத்திடம் ஒப்படைத்தேன் ஆனால் இன்றுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.

நான் எல்லா இடமும் தேடிவிட்டேன். எனக்கு அம்மா வேணும் எங்கே என்றாலும் தேடித்தாங்கோ அம்மா வராவிட்டால் நான் தற்கொலை செய்து செத்து விடுவேன் என கதறியழுதார்.

புலி உடுப்பில் வந்த இராணுவமே  கணவரைக் கடத்தியது

புலி சீருடையுடன் இருவரும் பொலிஸ் உடுப்பில் ஒருவருமாக 3பேர் வீட்டுக்குவந்து கணவரிடம்  அடையாள அட்டை கேட்டனர்.

அவரும் அடையாள அட்டையை காட்ட விசாரித்துவிட்டு விடுவதாக கூறி இழுத்துச் சென்று பவளில் ஏற்றிச்சென்றனர்.

பின்னால் நான் அழுதுகொண்டு சென்றேன் விடவில்லை என்னை தொடர்ந்தும் செல்ல. இராணுவமே மாற்றுடையில் வந்தது.

2009.10.16 ஆம் திகதி வந்த வீரகேசரி பத்திரிகையில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருப்பவர்களின் விபரங்கள் என பெயர்ப்பட்டியல் இருந்தது. அதில் எனது கணவர் ரவீந்திரனது பெயரும் இருந்தது 
என்றார்.

லைசென்ஸ் எடுக்கபோன மகன் வீடு திரும்பவில்லை

வாரிக்குட்டியூர் பஸ் நிலையத்தில நின்ற எனது மகனை இராணுவம் பிடித்துச் சென்றதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அன்று வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்னால் 2பொலிஸாரைச் சுட்டுவிட்டனர் ஆனால் எனது மகன் சம்பவம் தெரியாது வெளியில் சென்றுவிட்டார்.

அங்கு நின்றபோது தான்  கைது செய்து சென்றனர். மகன் சாரதி அனுமதிப்பத்திரமும் எடுக்கவரவில்லை எனவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர் என்றார்.



கொழும்புக்கு சென்றமகனை மதவாச்சியில் வைத்து பிடித்துவிட்டனர்


நண்பனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு கொழும்பிற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போது மதவாச்சியில் வைத்தே மகன் காணாமல் போயுள்ளார்.

வரும்போது என்னுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் வந்தார். தான்  மதவாச்சிக்கு வந்துவிட்டதாகவும் வந்துவிடுவேன் விரைவாக என்றார்.

பின்னர் தொலைபேசி எடுத்து என்னை யாரோ மிரட்டுகின்றனர் . நான் இப்போது வீட்டிற்கு வரமாட்டன் என்றும்  தெரிவித்தார்.

அப்போது சிங்களத்தில் பேசிக்கேட்டது. இன்றும் வீட்டிற்கு மகன் வரவில்லை என்றார்.

பால் வாங்க சென்ற கணவரை வெள்ளைவான் கடத்தியது

பம்பைமடுவில் பால் வாங்கச் சென்ற எனது கணவரை வெள்ளைவான்  கடத்திச் சென்றது.

அவரது சைக்கிள் பக்கத்தில் இருக்கும் பற்றைக்குள் இருந்து எடுத்தோம். ஆனால் இச்சம்பவம் 2009.05ற்குப் பின்னர் தான்  நடந்தது என்றார்.

தழிழர் புனர்வாழ்வு கழகம் பண உதவி வழங்கியதற்காக எனது மகன் கடத்தப்பட்டார்


எனது மகனுக்கு கிட்னி பிரச்சினை . சிகிச்சை கண்டியில் நடைபெற்றது . அதற்கான பணம் என்னிடம் இல்லை.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்  இவ்வாறு உதவி செய்வதை அறிந்து அவர்களுடன் பேசி ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா  பணம் பெற்று சிகிச்சையை முடித்துக் கொண்டேன்.

நாங்கள் அப்போது கண்டியில் தான் இருந்தோம் .பணம் பெற்ற விடயம் அறிந்த பொலிஸார் ஒரு முறைவீட்டிற்கு வந்து தேடுதல் மேற்கொண்டனர்.

அத்துடன் எவ்வாறு குறித்த அமைப்பினருடன் தொடர்பு என்றும் கேட்டுச் சென்றனர் சென்றனர் . பின்னர் கண்டியில் வைத்தே மகன் கடத்திச் செல்லப்பட்டார் என்றார்.



மோட்டர் வாங்க வந்ததாக கூறிய இராணுவத்தினர் கணவரைப்பிடித்துச் சென்றுவிட்டனர்

2009.02.26 அன்று மோட்டர் வாங்கவதாக கூறி பூவரசங்குளத்தில் உள்ள வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் கணவனைப்பிடித்துச் சென்றுவிட்டனர்.

4பேர் முச்சக்கரவண்டியல் வீட்டிற்கு வந்து மோட்டர் கேட்டனர். நாங்களும் கொடுத்தோம். அப்போதும் அவர்கள் போகாது நின்றனர் .

பின்னர் வெள்ளைவான் ஒன்று வந்து வீட்டிற்கு முன்னால் நின்றது. அப்போது குறித்த இராணுவத்தினர் நால்வரும் போய்விட்டனர்.

கணவரான பிரபாகரனை இழுத்து 2146 என்று இலக்க வெள்ளைவானில் போட்டுக்கொண்டு சென்றனர்.



இந்திய இராணுவத்தினாலேயே எனது மகன் பிடித்துச் செல்லப்பட்டார்

88 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறையில் நாங்கள் வீட்டில் இரவு இருக்கும்போது வந்த இந்தியன் இராணுவம் 17 வயதுடைய எனது மகனைப்பிடித்துச் சென்றுவிட்டனர்.

அப்போது நாங்கள் பிடிக்கவேண்டாம் என்று தடுத்து அழுதோம். அவர்கள் எங்கள் எல்லோரையும் தாக்கிவிட்டு மகன் பத்மநாதனைக் கொண்டுபோய்விட்டனர் என்றார்.

இதேவெளை, இன்றைய சாட்சியத்தில் இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் பவளில் வந்தார்கள், மோட்டார் சைக்கிளில் , முச்சக்கரவண்டியில், வெள்ளைவானில் வந்து கடத்திச் சென்றனர் என்ற முறைப்பாடுகள் அதிகமாக உள்ளது. 


அத்துடன் வீட்டில் வைத்துப் பிடித்துச் சென்றவர்களைவிட வெளியில் செல்லும் போது பிடிக்கப்பட்டவர்கள் தான் அதிகமாகவுள்ளனர்.

இன்றும்  சாட்சியத்திற்கு வந்தவர்கள் தங்கள் உறவுகள் யாரால், எந்த இராணுவ முகாம் இராணுவம் பிடித்துச் சென்றது என்ற விபரங்களையும் பிடித்தவர்களது பெயர் விபரங்களையும் அச்சமின்றி தெரிவித்திருந்தனர்.

இரண்டாம் நாள் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த துஷார மற்றும்  மஞ்சுள ஆகிய இருவருக்கும் இடையில் இன்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

மேலும் தங்கள் உறவுகள் உயிருடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது மரணச்சான்றிதழ் அவசியமில்லை என்றும் உறவினர் ஆணைக்குழு முன் தெரிவித்திருந்தனர்.



இறுதி நாளான நாளை வவுனியாவில் 4 கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 60 பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.

ad

ad