புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

சென்னை தோல்வி .3-3 சமநிலை நீடிக்க மேலதிக நேரம் 30 நிமிடங்களில் கேரளா 1  கோல் போட்டு 4-3 என்றரீதியில்  வெற்றி பெற்றது 
 
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 2–வது அரைஇறுதியில் சென்னை அணி ஜெயித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. கோல் வித்தியாசத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் இறுதிவாய்ப்பை தட்டிச் சென்றது.
கால்பந்து திருவிழாமுதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெ
ருங்கி விட்டது. சென்னையின் எப்.சி. – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2–வது சுற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கேரளா 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் 4 கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும் என்ற உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூர் அணியான சென்னையின் எப்.சி. களம் இறங்கியது.
25 ஆயிரம் ரசிகர்களுடன் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகனும், சென்னை அணியின் உரிமையாளருமான அபிஷேக் பச்சன், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி போன்ற வி.ஐ.பி.க்கள் பட்டாளமும் திரண்டிருந்தது.
ஆக்ரோஷ ஆட்டம்
சென்னை வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டனர். ஆவேசமாக ஆடிய சென்னை அணியின் வசமே பந்து அதிகமான நேரம் சுற்றிக்கொண்டிருந்தது. 11–வது நிமிடத்தில் சென்னை வீரர் மவுரிஸ் அடித்த ஷாட்டை கேரளா கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
இதற்கிடையே 8–வது நிமிடத்தில் மஞ்சள் அட்டை பெற்ற கேரள வீரர் ஜமி கலிங்ஸ்டர் 28–வது நிமிடத்தில் சென்னை வீரர் மென்டியை காலை வாரி விட்டதற்காக 2–வது முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார். இரண்டு மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைமைக்கு கேரளா தள்ளப்பட்டது. இது சென்னை அணிக்கு சாதகமான அம்சமாக மாறியது. 42–வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் சென்னை வீரர் மார்க்கோ மெட்டராசி அடித்த பந்தை, மிக்கேல் சில்வஸ்ட்ரே தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் முதல் பாதியில் சென்னை 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
வீணான பெனால்டி
மேலும் தீவிரமான பிற்பாதியில் 48–வது நிமிடத்தில் சென்னை வீரர் மவுரிசை கோல் பகுதியில் கேரளா வீரர் ஜின்கான் தள்ளிவிட்டதால் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சென்னை வீரர் மெட்டராசி எளிதாக கோலுக்குள் செலுத்தினார். ஆனால் அவர் அடிப்பதற்கு முன்பாக சக வீரர் மவுரிஸ் கோல் பகுதிக்குள் ஓடி வந்து விட்டதால் அதை செல்லாது என்று அறிவித்த நடுவர் மீண்டும் பெனால்டி வாய்ப்பை உதைக்கும்படி கூறினார். அப்போது பதற்றத்தில் மெட்டராசி பந்தை வெளியே அடித்து சொதப்பினார். பொன்னான பெனால்டி வாய்ப்பை வீணானதும் ரசிகர்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
சென்னை அணி இனி தேறுமா? என்று ரசிகர்கள் பயந்தவேளையில் 75–வது நிமிடத்தில் அதிர்ஷ்ட தேவதையின் கருணைப்பார்வை விழுந்தது. சென்னை வீரர் நீண்ட தூரத்தில் இருந்து அடித்த ஷாட்டை, கேரள வீரர் சந்தீஷ் ஜின்கான் அதை தடுக்கும் விதமாக மார்பால் தட்டிவிட்டார். ஆனால் அந்த நேரத்தில் கேரள கீப்பரும் முன்னேறி வெளியே வந்து விட்டதால், பந்து நேராக கோலுக்குள் சென்று சுயகோலாக மாறியது. இதனால் சென்னை அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 90–வது நிமிடத்தில் ஜெஜெ சக வீரர் மென்டியின் உதவியுடன் சென்னை அணிக்கு 3–வது கோலை பெற்றுத்தந்தார். இருப்பினும் ‘ரீப்ளே’யில் ஜெஜெ பந்தை நெஞ்சால் வலைக்குள் தள்ளியபோது, அவரது கையிலும் பந்து பட்டது தெரிந்தது. அதை நடுவர் கவனிக்காமல் விட்டு விட்டார்.
வழக்கமான ஆட்டம் முடிவில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதலாவது சுற்றில் கேரளாவும் 3 கோல் அடித்திருந்ததால் அரைஇறுதி சுற்று 3–3 என்று சமநிலையை அடைந்தது.
கூடுதல் நேரத்தில் முடிவு
இதையடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணியை தேர்வு செய்ய தலா 15 நிமிடங்கள் வீதம் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. இதன் 13–வது நிமிடத்தில் சென்னை முன்னணி வீரர் மெட்டராசி 2–வது முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் கடைசி நேரத்தில் சென்னை அணியும் 10 வீரர்களுடன் ஆடியது.
ஒவ்வொரு மணித்துளியும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்த ஆட்டத்தில், 117–வது நிமிடத்தில் கேரள வீரர் பியர்ஸ்சன் சூப்பராக கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களின் இதயங்களை சுக்கு நுறாக்கினார். எஞ்சிய மூன்று நிமிடங்களில் சென்னை அணி முயற்சித்து பார்த்து பதில் கோல் திருப்ப முடியவில்லை. சென்னை அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போதிலும் பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது.
இரண்டு அரைஇறுதியின் முடிவில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் கேரளா (4 கோல்) சென்னையை (3 கோல்) பின்னுக்கு தள்ளிவிட்டு இறுதி சுற்றை எட்டியது.
புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடம் பெற்ற சென்னை அணி அரைஇறுதியில் ஏமாற்றி விட்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களையும், குளிர்பான பாட்டில்களையும் மைதானத்திற்குள் வீசி எறிந்து கோபத்தை கொட்டித்தீர்த்தனர்.
இன்றைய ஆட்டம்
இன்றிரவு 7 மணிக்கு கோவாவில் நடைபெறும் இன்னொரு அரைஇறுதியின் 2–வது சுற்றில் எப்.சி.கோவா–அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது ஆட்டம் 0–0 என்ற கணக்கில் டிராவில் முடிந்திருப்பதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ad

ad