புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

மிஸ்டர் கழுகு : அமைச்சரவை மாற்றம்... விரைவில் தேர்தல்...ஜெ... ஜே !
‘‘போயஸ் கார்டன்ல இருக்கேன். வெடிச்சத்தம் அதிகமாக இருக்கு. நீங்க பேசுறது கேட்கலை. ஆன் தி வே டு ஆபீஸ்!’’ என்று கழுகாரிடம்
இருந்து வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது. சற்று நேரத்தில் கழுகாரும் வந்து சேர்ந்தார்!நன்றி விகடன் 

‘‘தீர்ப்புக்கு முந்தைய மூன்று நாட்களும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் அமைச்சர்களே கிட்டதட்ட பூசாரிகளாக மாறிவிட்டார்கள்! அதில் ஹைலைட், வழக்கம்போல செந்தில்பாலாஜிதான்! கடந்த 5-ம் தேதி மாலை கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் ‘அம்மா’ என்ற எழுத்துகள் இருப்பதுபோல ஒரு லட்சத்து எட்டு விளக்குகள் வைத்து பூஜை நடத்தினார். இதற்காக 7,200 லிட்டர் நெய் வாங்கப்பட்டிருக்கிறது. கோயில் வளாகத்தில் நடக்கவே இடம் இல்லாத அளவுக்கு விளக்குகளால் நிரம்பியிருந்தது. விடியவிடிய அந்த விளக்குகள் அணையாமல் எரிய... மறுநாள் 6-ம் தேதி காலை நவக்கிரஹ சாந்தி ஹோமம், அஸ்திர ஹோமம் என்ற பிரமாண்ட ஹோமங்களையும் நடத்தினார் செந்தில்பாலாஜி. தீர்ப்புக்கு முதல் நாள் தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்கள் அனைத்திலும் அணையா விளக்கு ஏற்றிவைக்கச் சொல்லியும் உத்தரவு பறக்க... அதன்படி அணையா விளக்கும் ஏற்றப்பட்டிருக்கிறது.’’
‘‘ம்!’’
‘‘தஞ்சாவூரில் உள்ள பிரதாப வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் தொடர்ந்து ஹோமம் நடத்தி வந்தவர் அமைச்சர் வைத்திலிங்கம். முதல்நாள் இந்தக் கோயிலில் சிறப்பு யாகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் வைத்திலிங்கம். ‘யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கக்கூடிய ஆற்றல்படைத்தவனே... என்னுடைய காரியங்களையும் சாதித்துத்தருவாயாக!’ என்று ஆஞ்சநேயரிடம் மனமுருக வேண்டி இருக்கிறார் வைத்திலிங்கம். அந்த ஆஞ்சநேயர்தான் நேரில் வந்து அருள் பாலித்துவிட்டதாக நினைக்கிறார் வைத்திலிங்கம். கோவை மாவட்டம் ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கோயிலில் விளக்குபூஜை, தென்கயிலை என்று சொல்லப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் 108 திரவியங்களுடன் சத்ரு சம்ஹார ஹோமத்தை நடத்தியிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இப்படி ஒவ்வொரு அமைச்சர்கள் தொடங்கி கட்சியில் அடிமட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் வரை யாரும் ஒரு கோயிலையும் விடவில்லை.!’’
‘‘நீதிமன்றத்தை நம்பியதைவிட கடவுளைத்தான் அதிகம் நம்பினார்கள்போல!’’
‘‘அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் எந்த நேரமும் ‘ஓம்.. க்ரீம்... க்ரீம்!’ என்று மந்திரவாதி வீடுபோல சத்தம் கேட்டபடியே இருந்தது. பால்குடம், காவடி என்று செல்லூர் ராஜு வேண்டாத தெய்வம் இல்லை! போகாத கோயில் இல்லை. திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு அமைச்சர் காமராஜ் தலைமையில் 6,667 பெண்கள் பால்குடம் தூக்கி வந்தனர். வருடத்துக்கு ஒருமுறை திருவிழா நடந்த கோயில்கள் எல்லாம் தினம் தினம் திருவிழா ஆனது. ஒவ்வொரு அமைச்சரும் தங்களது பவரைக் காட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு விதவிதமான பிரார்த்தனைகளைச் செய்தனர்.!”
‘‘வேண்டுதல் பலித்துவிட்டது அல்லவா!”
‘‘ஆமாம்! கடந்த 10 நாட்களாக ஜெயலலிதா பதற்றமாகத்தான் இருந்தார். பவானி சிங்கை அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்கியது முதல் இவரது பதற்றம் அதிகம் ஆகிவிட்டது. பவானி சிங்கை நீக்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பல உத்தரவுகளைப் போட்டது. அதனை ஜெயலலிதா தரப்பு ரசிக்கவில்லை. ‘ஊழல் என்பது இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும். முன்னேற்றத்தை முடக்கும். நாம் அடைய வேண்டிய லட்சியத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும். மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அரசியல் சாசனத்தின் நேர்மையை சீரழிக்கும். எனவே, ஊழல் வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது நீதிபதி உறுதியான மனப்பான்மையோடு தீர்ப்பளிக்க வேண்டும்’ என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள். ‘ஒரு வழக்கில் இப்படித்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இப்படி கட்டளையிடலாமா?’ என்று ஜெயலலிதா தரப்பு கோபம் ஆனது. ஜெயலலிதாவுக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனிடம் இதுபற்றி ஜெயலலிதா பேசியதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதாவை சந்திக்க பாலி நாரிமன் சென்னை வர இருப்பதாகவும் கடந்த வாரத்தில் ஒரு தகவல் கசிந்தது. ‘தீர்ப்பு ஒருவேளை மாறாக வந்தால் இதைச் சுட்டிக்காட்டி அம்மா அறிக்கை விடுவார்’ என்றே சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஜெயலலிதாவிடம் நூற்றுக்கணக்கான கையெழுத்துகள் வாங்கப்பட்​டன!”
‘‘எதற்காக?”
‘‘தீர்ப்பு மாறானதாக இருந்தால் அப்பீல் செய்ய வேண்டும் அல்லவா? அதற்காக பல மாதிரியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அவரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. தீர்ப்பு தேதியான 11-ம் தேதி அஷ்டமி என்பதால் பதற்றம் இன்னும் அதிகம் ஆனது. பல நாட்களாகவே சுந்தரகாண்டம் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். தீர்ப்பு அன்று காலையிலும் சுந்தரகாண்டம் படிக்க ஆரம்பித்துவிட்டார். தீர்ப்பு சக்ஸஸ் என்பதை அவரிடம் சொன்னபோதும் சுந்தரகாண்டம் படித்துக்கொண்டுதான் இருந்தார். அதைப் பாதியில்விட்டு எழக்கூடாது என்பதால் முழுமையாக முடித்துவிட்டுத்தான் எழுந்தார்!”
‘‘அப்படியா?”
‘‘போயஸ் கார்டனில் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்! மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான முஸ்தீபுகள் ஆலோசனைகள் உடனடியாகத் தொடங்கிவிட்டன!!”
‘‘அதைச் சொல்லும்!”
‘‘2011 மே 16-ம் தேதி அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள். சரியாக நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வகைக்கும் நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 2011 மே 13-ம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியாயின. போயஸ் கார்டனே திருவிழா கோலமாக அப்போது காட்சி அளித்தது. பால்கனியில் நின்று தொண்டர்களுக்கு நன்றி சொன்னார் ஜெயலலிதா. அதைவிட உற்சாகம் இந்த மே 11-ம் தேதி அரங்கேறியது. ஜட்ஜ்மென்ட் டே ரிசல்ட் டேவை தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. ஜாமீனில் இருந்த ஜெயலலிதா 200 நாட்களுக்கும் மேல் போயஸ் கார்டனை விட்டு வெளியில் வராமல் அமைதியாக இருந்தார். இப்போது அவர் எம்.எல்.ஏ ஆவதற்கு எந்தத் தடையும் இல்லை. எம்.எல்.ஏ-வாக இல்லாமல்கூட முதல்வர் ஆக முடியும். முதலில் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்க வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு ஆறு மாதங்களுக்குள் எம்.எல்.ஏ ஆகிக்கொள்ள முடியும் என சட்டம் சொல்கிறது. முதல்வர் ஆனபிறகு ரங்கம் அல்லது வேறு எதாவது ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ ஒருவரை ராஜினாமா செய்துவிட்டு இடைத் தேர்தலில் நிற்க முடியும்!”
‘‘சொல்லும்!”
‘‘டான்சி வழக்கில் முன்பு ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது 2001 தேர்தலில் அவரால் போட்டியிட முடியாமல் போனது. தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்ற போதிலும் ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ-வாக முடியவில்லை. ஆனாலும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ‘எம்.எல்.ஏ-வாக முடியாத ஒருவர் முதல்வராக பதவி வகிக்க முடியாது’ என உத்தரவிட்டது. அதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா. அதன் பிறகு ஓ.பி முதல்வராக பதவியேற்றார். டான்சி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா பிறகு விடுதலை செய்யப்பட்ட பிறகுதான் அவர் முதல்வராகப் பதவியேற்றார். இந்தத் தீர்ப்புக்கு முன்பே ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த தங்க தமிழ்செல்வன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு தொகுதியில் 
எம்.எல்.ஏ-வோ அல்லது எம்.பி-யோ ராஜினாமா செய்தாலோ, இறந்துவிட்டாலோ ஆறு மாதங்களுக்குள் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் விதி. அந்த ஆறு மாத காலக்கெடுவுக்குள் ஜெயலலிதா அப்போது முதல்வர் ஆவதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள். அதன்படி 2002 பிப்ரவரி 21-ம் தேதி ஆண்டிபட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடந்தது. அதாவது ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்றுதான் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் ரிசல்ட். ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயித்தார் ஜெயலலிதா. அதனால் டபுள் கொண்டாட்டம் அரங்கேறியது. அதன் பிறகு ஓ.பி மந்திரிசபை கலைக்கப்பட்டு ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது!”
‘‘இந்த கடந்த கால வரலாறுக்கும் இப்போதைய சூழ்நிலை மாறுபட்டது ஆச்சே?”
‘‘முதலில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பார்.  பிறகு ரங்கம் இடைத்தேர்தலில் ஜெயித்த வளர்மதி ராஜினாமா செய்வார். அதன் பிறகு ஆறு மாதங்களுக்குள் ஜெயலலிதா ரங்கம் தொகுதியில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகிவிடுவார் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா முதல்வர் ஆகும்போது அவர் மட்டும் முதல்வர் ஆக மாட்டார். ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையே கலைக்கப்பட்டு ஜெயலலிதா தலைமையில்தான் புதிய அமைச்சரவை பதவியேற்பார்கள். இதில் சில அமைச்சர்கள் கழற்றிவிடப்படலாம். புதியவர்கள் சேர்க்கப்படலாம். புதிய அமைச்சரவை பதவி ஏற்பை ஐந்தாம் ஆண்டு ஆட்சி தொடங்கும் நாளான மே 16-ம் தேதி வைத்துக்கொள்ள முதலில் முடிவு செய்தார்களாம். ஆனால் அன்று சனிக்கிழமை கரிநாள் என்பதால் அதற்கு அடுத்த நாள் பதவியேற்பு நடைபெறும் என முடிவு செய்திருக்கிறார்கள். விடுதலைக் கொண்டாட்டத்தைத் தாண்டி புதிய அமைச்சரவை தேதியும் அமைச்சர்கள் பட்டியலும்தான் தீர்ப்பைவிட அதிக எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது. எல்லோருடைய பார்வையும் இப்போது கவர்னர் மாளிகையான ராஜ்பவனை நோக்கி திரும்பியிருக்கிறது... மேலும்...!”
‘‘என்ன மேலும்...?”
‘‘தனியாக இடைத்தேர்தல் நடத்துவதைவிட இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் சூட்டுடன் பொதுத்தேர்தலை நடத்திவிட்டால் என்ன என்றும் ஜெயலலிதா நினைக்கிறார். இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக முன்பே நான் சொல்லியிருக்கிறேன் அல்லவா? அதுவும் நடக்கலாம்! எனவே, ஜெயலலிதா பதவி ஏற்பு, அமைச்சரவை மாற்றம், சட்டசபைத் தேர்தல்... என்று தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கப் போகிறது!” என்று கழுகார் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே நமக்கு மெயிலில் ஜெயலலிதாவின் அறிக்கை வந்தது.
அறிக்கையை படித்துவிட்டு நிமிர்ந்த கழுகார், ‘‘தீர்ப்பு தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவரே உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டார் போல! ‘என்னையும், அ.தி.மு.க-வையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதிவரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அழித்துவிடலாம் என்ற காழ்ப்பு உணர்வை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்!’ என்று அறிக்கையில் கோபத்துடன் எச்சரித்திருக்கிறார். இனி அரசியல் ஆடுகளம் சூடாகத்தான் இருக்கும்!’’ என்று சொல்லிவிட்டு சிறகை விரித்தார்.
படங்கள்: சு.குமரேசன், வீ.நாகமணி, ஆ.முத்துக்குமார், ஜே.வெங்கடராஜ், தி.குமரகுருபரன்


போயஸ் கார்டனில்...
முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்தில் தீர்ப்பை எதிர்பார்த்து நகம் கடித்துக் கொண்டிருந்தனர். ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் விடுதலை என்று ஒற்றை வரியில் தகவல் வந்ததுதான் தாமதம். போயஸ் கார்டன் அருகே வெடிக்கத் தொடங்கிய பட்டாசு சத்தம் அடங்க பல மணிநேரம் ஆனது. இனிப்புகளை ஓடி ஓடி விநியோகம் செய்தனர். தலைமைக் கழகத்தில் இருந்த அமைச்சர்களின் கார்கள் போயஸ் கார்டனை நோக்கி அணிவகுக்கத் தொடங்கின. முதல் ஆளாக வந்தவர் ஓ.பி.எஸ்-தான். அவரும் பின்னி சாலைக்கு அருகில் இறங்கி கையில் மலர்க் கொத்துடன், நடந்தே சென்றார். அவர் சென்றபோது, ‘கருணாநிதி ஒழிக..’ என்ற கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து, மகாலிங்கம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒரே காரில் வந்திறங்கி போயஸ் கார்டன் தெருவுக்குள் அணிவகுத்தனர். அதன் பிறகு வரிசையாக மற்றவர்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து, சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி ராமானுஜம் உள்ளிட்ட உயர் காவல் துறை அதிகாரிகள் வந்து குவிந்தனர். ஆனால், காவல் துறை அதிகாரிகளில் யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் செல்லவில்லை. அமைச்சர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி தலைமையில் இரண்டு கோயில் குருக்கள் பிரசாதத்துடன் வந்தனர். பார்த்தசாரதி கோயில் பிரசாதம் அங்கிருந்து நேராக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அதன் பிறகு போயஸ் கார்டனுக்கு வந்தது.
அவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. அதற்குக் காரணம், பார்த்தசாரதி கோயிலில் மூலவருக்கான பாலாலயம் நடந்ததையடுத்து, அங்கு மூலவர் சிலை முழுவதுமாக மூடி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக மூலவர் முகம் தெரியும்படி சிறிய கதவு ஒன்றை அமைத்து அதை திறந்தே வைத்தால் விடுதலை நிச்சயம் என்று சொல்லி, அதை திறந்தே வைக்க வீரசண்முகமணி ஏற்பாடு செய்திருந்தார். அது உரிய முறையில் போயஸ் கார்டனுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் அவர்களுக்கு உடனே அனுமதி கொடுக்கப்பட்டு அவர்களும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

டெல்லியில்...
அ.தி.மு.க எம்.பி-க்கள் கடந்த வாரம் கட்சி மேலிடத்தைத் தொடர்புகொண்டு, ‘தீர்ப்பு நாளன்று நாங்கள் சென்னையில் இருக்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். நீங்கள் டெல்லியிலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டார்களாம். அதையடுத்து, எம்.பி-க்கள் அனைவரும் டெல்லிக்கு கிளம்பிப்போனார்கள். தீர்ப்பு வெளியானதும், லோக்சபா லாபியில் அ.தி.மு.க எம்.பி-க்கள் லட்டுகளை மற்ற கட்சி எம்.பி-க்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். அப்போது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வந்திருக்கிறார். அவரிடம் லட்டு கொடுத்திருக்கிறார்கள். ‘இந்தியாவில் ஜனநாயகம் நல்லபடியாக நடக்கிறது. அதற்கு நல்ல உதாரணம்... தமிழகத் தலைவருக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு. இதைவைத்தே, நீதி சரியான பாதையில்தான் போகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். ஜெயலலிதா, சிறந்த தலைவர். அவருக்குக் கிடைத்த நல்ல தீர்ப்பு. அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு’ என்று சொல்லியிருக்கிறார் அருண் ஜெட்லி. அ.தி.மு.க எம்.பி-க்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து அவர்களை நோக்கி வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வாய் நிறைய வாழ்த்துகளை சொல்லிவிட்டுப் போனார். இதைபோல் சிலர் சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு ஸ்வீட் கொடுக்கத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

கோபாலபுரத்தில்...
காலை 10 மணிக்கே ஸ்டாலின், பொன்முடி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டவர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு வந்தனர். தீர்ப்பு வெளியாகும் வரை உள்ளே தீவிரமான ஆலோசனை நடந்திருக்கிறது. ‘ஜெயலலிதா உட்பட 4 பேரும் விடுதலை!’ என்ற தகவல் வந்ததும் கருணாநிதி, ‘என்ன இப்படி பண்ணிட்டாங்க!’ என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாராம். அதன் பிறகு யாரிடமும் அவர் பேசவில்லையாம். வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களையும் யாரும் சந்திக்கவில்லை. கருணாநிதி கொடுத்த அறிக்கையை மட்டும், வீட்டில் இருந்தவர்கள் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தனர். உடனடியாக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். 

ad

ad