புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2015

வடக்கும் தெற்கும் இரண்டு நாடுகளா? இரண்டு சட்டமா அதிபர்களா?: சிரேஸ்ட சட்டத்தரணி கே வி தவராசா


வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமென சட்டமா அதிபர் கோருவது வடக்கும் தெற்கும் இரண்டு நாடுகளா? வடக்கிற்கும் தெற்கிற்கும் இரண்டு சட்டமா அதிபர்களா? என்ற சந்தேகம் உருவாகின்றது.
2004ம் ஆண்டு இராணுவத்துடன் சேர்ந்து கடமையாற்றிய கருணா கூட்டத்தின் உறுப்பினர் நால்வரை கொலை செய்ய புலிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக,
சட்டமா அதிபரினால் கணேசரட்னம் சாந்ததேவன், முருகையா கோமகன் இருவருக்கும் எதிராக குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை சான்றாகக் கொண்டு வவுனியா மேல் நீதிமன்றில் தனித்தனியாக இரண்டு வழக்கும் கொழும்பு மேல் நீதிமன்றில் இருவருக்கும் எதிராக ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிரிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில்,
வவுனியா மேல் நீதிமன்றில் கணேசரட்னம் சாந்ததேவன் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2013ம் ஆண்டு தை மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணையில் எதிரியினால் சுயவிருப்பில் வழங்கப்பட்டதாக சட்டமா அதிபரினால் சான்றாக முன் வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் எதிரிக்கு எதிராக வேறு சான்றுகள் இல்லையெனவும் வழக்கை தொடர்ந்து நடாத்தவில்லையெனவும் அரச சட்டவாதி நீதிமன்றிற்கு தெரிவித்ததையடுத்து, எதிரியான கணேசரட்னம் சாந்ததேவனை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ வி. சந்திரமணி விடுதலை செய்தார்.
இந்த நீதிமன்றில் கணேசரட்னம் சாந்ததேவன், முருகையா கோமகன் இருவருக்கும் எதிராக குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை சான்றாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கிலும் உள்ள ஒரேயொரு சான்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியால் நிராகரிக்கப்பபட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் மட்டுமேயாகும்.
மேலும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ வி. சந்திரமணி அவர்களினால் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிராகரிக்கப்பட்டு, வழக்கிலிருந்து எதிரியான கணேசரட்னம் சாந்ததேவன் விடுதலையான தீர்ப்பின் அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஒரு பிரதியை அரச சட்டத்தரணிக்கும் இந்த நீதிமன்றிற்கும் கையளித்த போதிலும்,
சட்டமா அதிபர் இந்த வழக்கை வாபஸ் பெறாமல் தொடர்ந்து நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையேற்ற இந்த நீதிமன்றம் இந்த வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த வழக்கில் இரண்டாம் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருகும் முருகையா கோமகன் மீது வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்ட நிலையில்,
எதிரிக்கு எதிராக வேறுசான்றுகள் இல்லையெனவும் வழக்கை தொடர்ந்து நடாத்தவில்லையெனவும் அரச சட்டவாதி நீதிமன்றிற்கு தெரிவித்ததையடுத்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ அ.பிரேம் சங்கர் எதிரியை விடுதலை செய்துள்ளார்.
சட்டத்தரணி மேலும் தனது வாதத்தில் ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் பல குற்றச்சாட்டுப் பத்திரங்களை சட்டமா அதிபர் பல மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தால் வேறு சான்றுகள் இல்லாதவிடத்து, மற்றைய மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சட்டமா அதிபர் மீளப்பெறுவதுதான் 2013ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது அந்த சட்டரீதியான நடைமுறைகள் இங்கே மீறப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் எதிரிகளால் சுயவிருப்பில் வழங்கப்பட்டவையல்லயென நிராகரித்த பின்னர் அதே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்வது சட்ட ரீதியானதா?
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை விசாரணையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய கட்டளைகளுக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவை தாக்கல் செய்யவில்லையென்பதுடன்,
நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர வேறு சான்றுகள் இல்லையென அரச சட்டத்தரணி நீதிமன்றிற்கு அறிவித்த பின்னரே எதிரிகள் வவுனியா மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.
நிர்வாகத்தின் இவ்வாறான செயல்பாடுகளே இன்று அரசியல் கைதிகள் சட்டரீதியாக விடுதலை செய்யப்படாமல் வருடக்கணக்கில் தடுத்தும் அடைததும் வைக்கப்பட்டுள்ளமைக்கு முக்கிய காரணங்களாகுமென சிரேஸ்ட சட்டத்தரணி தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
இதையடுத்து அரச சட்டத்தரணி சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றிற்கு தெரிவிக்க கால அவகாசம் கோரியதையடுத்து கார்த்திகை மாதம் 26ம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ad

ad