சனி, ஏப்ரல் 05, 2014

உதைபந்தில் தலையீடா? ; மறுக்கிறார் டெனீஸ்வரன்
news
உதைபந்தாட்ட கழகங்களின் செயற்பாட்டில்  வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்  தேவையற்ற தலையீடுகளை மேறகொள்வதாக உள்ளுர் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு போக்குவரத்து துறை அமைச்சர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
 
உதைபந்தாட்ட கழகங்களின் செயற்பாட்டில்  வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர்  தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதாக மாவட்ட உதைபந்தாட்ட லீக் கவலை வெளியிட்டுள்ளதாக கடந்த 30 திகதி உள்ளுர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிப்பதுடன் குறிப்பிட்ட உதைபந்தாட்ட லீக்கிற்கு வலுவான கண்டனத்தையும் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துகொள்கிறது.
 
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்டத்திலே கடந்த பல வருடங்களாக உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மேற்பார்வையின் கீழ் மன்னார் லீக் இயங்கி வருகின்றது. 
 
இந்த உதைபந்தாட்ட லீக்கிலே மன்னாரிலுள்ள ஐந்து பிரதேசசெயலகப்பிரிவுகளையும் சேர்ந்த கழகங்கள் அங்கம் வகித்து வருகின்றன.  இந்த விளையாட்டு கழகங்களை வைத்து பலர் அரசியலும் சிலர் வியாபாரமும் செய்யத் தொடங்கியுள்ளனர், அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலே ஒரு உதைபந்தாட்ட லீக் மட்டும்தான் இருக்க வேண்டும் அதுவும் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்று சிலர் நினைக்கின்றனர்.
 
கடந்த காலங்களிலே மன்னார் மாவட்டத்திலே ஒரு லீக் மட்டுமே இயங்கி வந்தது. தற்போது யுத்தம் முடிவுற்றபின் மன்னார் மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வருகின்றமை யாவரும் அறிந்தது. 
 
மன்னார் மாவட்டத்திலே இரண்டு உதைபந்தாட்ட லீக் இயங்குவதில் எந்த தடையும் இருக்காது ஏனெனில் யாழ் மாவட்டத்திலே நான்கு லீக்குகள் உள்ளன. மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு லீக்குகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவே அது ஒரு தடையாக அமையாது. 
 
எனவே பெருநிலப் பரப்பை அண்டி ஒரு லீக் உருவாகுவதற்கு மன்னார் மாவட்ட லீக் நிர்வாகமும் அதனோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறைப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன் அதற்கு பூரண ஒத்துழைப்பை சகலரும் வழங்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றோம். இதில் அமைச்சருக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்திருக்கவேண்டியது அவசியமானது.
 
எமது மாவட்டத்திலோ, மாகாணத்திலோ அவசர அவசியமான தேவைகள் பல இருக்கும் போது எந்த விதமான நிதிகளோ சரியான அதிகார நிர்வாக பகிர்வுகளோ இன்றி எமது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கமுடியாது பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கும் வேளையில் சிலர் குறுகிய ஒரு வட்டத்திற்குள் நின்றுகொண்டு தமது சுய இலாபம், அதிகார மோகம், பதவி ஆசைகளுக்காக விளையாட்டுக் கழகங்களையோ பொது அமைப்புக்களையோ பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
 
அத்தோடு உண்மை நிலைமைகளை அறியாது அறிக்கை விடுவோர் அல்லது செய்திகள் பரப்புவோர் மீது தேவையேற்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.