புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2014


பன்னீர்செல்வம் ஒரு பக்கடா பார்ட்டி: வைகோ நையாண்டி
 பன்னீர்செல்வம் தலைமையில் இருப்பது பேச்சுவார்த்தைக் குழு அல்ல, அது ஒரு பக்கடா பார்ட்டி என்று சென்னையில் பிரசாரம் செய்த மதிமுக வைகோ நையாண்டியுடன் பேசினார்.


பாஜக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று மதிமுக பொதுச்செயலலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "நாள்தோறும் படி வாங்கும் படிக்காசுப் புலவர்கள் சிலர் ஜெயலலிதா பிரதமர், ஜெயலலிதா பிரதமர் என்று மேடைக்குமேடை முழங்கி வருகிறார்கள்.

ஒருவேளை அனைத்திந்தியக் கட்சி என்று பெயர் வைத்துக் கொண்டு இருப்பதால், அனைத்து இந்தியாவிலும் போட்டியிடுகிறாரா? தமிழ்நாட்டில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தி வைத்துக் கொண்டு பிரதமர் கனவோடு பிரசாரத்தைத் தொடங்கினார். நாளுக்கு நாள் அந்தக் கனவு தகர்ந்து வருகிறது. இப்போது அப்படிச் சொல்லுவதை விட்டுவிட்டார். ஆனால், அவரது அமைச்சர் அடிப்பொடிகள் இன்னமும் முழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

வேண்டுமானால், போயஸ் தோட்டத்தில் ஒரு செட் போடலாம். நாடாளுமன்றக் கட்டடம், லோக்சபா, ராஜ்யசபா, சென்ட்ரல் ஹால் போன்ற அரங்குகளை அமைத்துக் கொண்டு, அங்கே ஒரு நாற்காலியைப் போட்டு, அதில் பிரதமர் என்று எழுதிவைத்துக் கொண்டு, அதில் வேண்டுமானால் அமர்ந்து அழகு பார்த்துக் கொள்ளலாமே தவிர, ஜெயலலிதா ஒருக்காலும் பிரதமர் ஆக முடியாது.

இப்போது அவர், அண்ணா தி.மு.க. அங்கம் வகிக்கும் அமைச்சரவை என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றார். சரி. அதற்கும் வழி இருக்கிறதா? காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உதவியோடு ஆட்சி அமைத்து விடலாம் என்று கருதுகிறாரா?

அதற்கு வழியே இல்லை. பேச்சுவார்த்தை நடத்த வந்த கம்யூனிஸ்டுகளை அவமதித்து வெளியேற்றி விட்டார். காங்கிரஸ் கட்சி இந்த முறை இரண்டு இலக்கங்களைத் தாண்ட முடியாது. அதிகபட்சமாக 99 இடங்கள்தான். 100 கூட வராது. எனவே, அதற்கு வாய்ப்பே இல்லை.

அப்படியானால், பாரதிய ஜனதா கூட்டணிக்குப் பெரும்பான்மைக்கு இடங்கள் தேவைப்பட்டால், அப்போது அண்ணா தி.மு.க. ஆதரவு தேவைப்பட்டால், அங்கே வந்து ஒட்டிக் கொள்ளலாம் என்று கருதுகின்றாரா?

அதற்கும் வாய்ப்பு இல்லை. கடந்த முறை வாஜ்பாயும், அத்வானியும் ஜெயலலிதாவிடம் பட்டபாடு தெரியாதா? மறக்க முடியுமா அவர்களால்?

பாரதிய ஜனதா கட்சி மட்டுமே தனித்து 272 தொகுதிகளைக் கைப்பற்றும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 320 இடங்கள் கிடைக்கும். இதுதான் நிலைமை. நாளுக்கு நாள் நரேந்திர மோடி அலை பெருகிக் கொண்டே போகிறது. தமிழகம், புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் நமது அணியே வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

'பன்னீர்செல்வம் பக்கடா பார்ட்டி'

அண்ணா தி.மு.க.வோடு இடதுசாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வெளியில் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள். அண்ணன் தா.பாண்டியன் வெளியே வந்தார். பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கின்றது. மீண்டும் பேசுவோம் என்று சொல்லிவிட்டுப் போவார். ஆனால் உள்ளே என்ன நடந்தது தெரியுமா?

இவர்கள் பேச்சுவார்த்தை என்று போவார்கள். ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பார். முந்திரிப்பருப்பு, பக்கோடா தருவார். வடை தருவார். காபி தருவார். அவர் ஒரு எண்ணிக்கையைச் சொல்லுவார். இவர்கள் சில இடங்களைக் கேட்பார்கள். அம்மாவிடம் கேட்டுச் சொல்லுகிறோம் என்று அனுப்பி விடுவார்கள். இதுதான் பேச்சுவார்த்தை.

எனக்கு அந்த அனுபவம் இல்லை. ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற எங்கள் கட்சிக்குழுவுக்கும் இதுதான் கிடைத்தது.

பன்னீர்செல்வம் தலைமையில் இருப்பது பேச்சுவார்த்தைக் குழு அல்ல. அது ஒரு பக்கடா பார்ட்டி.

தமிழ்நாட்டில் நாளுக்குநாள் நமது கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மோடி அலை கிராமப்புறங்களிலும் வீசுவதாக, பிரபல வாரஇதழ் ஒன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

இதைக்கண்டு, அண்ணா தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் இப்போது, கிராமப்புறங்களில் போய், மோடி பிரதமர் ஆக வேண்டுமானால், எங்களுக்கு வாக்கு அளியுங்கள். தேர்தலுக்குப் பிறகு அம்மா மோடியை ஆதரிப்பார் என்று கூறி வருகிறார்கள்.

எங்கள் ஊர் கிராமத்து வழக்கில் சொல்வதானால், இதுதான் மொள்ளமாரித்தனம்.

நாங்கள் உழுதோம், விதைத்தோம், பயிர் வளர்த்தோம், பாதுகாத்தோம். ஆனால், விளைச்சலைத் திருடிக் கொண்டு போகின்ற திருடர்கள் போல, இப்போது அண்ணா தி.மு.க.வினர் ஓட்டுகளைத் திருட முனைகிறார்கள். எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தோழர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்" என்றார்.
 

ad

ad