5 ஏப்., 2014

புலிகளுக்கு ஆதரவான 500 பேரில்! 100 பேர் இருப்பிடங்கள் கண்டு பிடிப்பு 20 பேர் கைதாகினர் 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இயங்கி வந்த இருபது பேரை கைது செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்களில் பத்து பேர் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்று, மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாட்டு;க்குள் பிரவேசிக்க முயற்சித்த போதே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருந்தது. இந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் 500 பேர் வரையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 100 பேரின் இருப்பிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 20 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. வெளிநாடுகளில் இயங்கி வரும் இந்த அமைப்புக்கள் லட்சக் கணக்கான ரூபா பணத்தை குறித்த நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்களுக்கு பணம் அனுப்பி வைத்து அவர்கள் பயங்கரவாத தலைவர்களுக்கு வழங்கி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் யுத்தம் நிறைவடைவதற்கு முன்னதாக ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் மறைத்து வைத்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அமைப்புக்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிக் கைதிகளுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு பேணியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது