சனி, ஏப்ரல் 05, 2014

சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா உதவ வேண்டும் என்கிறது இந்தியா

சிறிலங்காப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்குப் பதிலாக, விரிவான, சுதந்திரமான, நம்பகமான தேசிய விசாரணை (உள்நாட்டு) ஒன்றை சிறிலங்கா நடத்துவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஊக்கமளிக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்தியத் தூதுவர் யஸ்வந்த் குமார் சின்கா, அளித்துள்ள செவ்வியிலேயே இந்தியாவினது இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு நாடும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து தேசியப் பொறிமுறை மூலம் பதிலளிக்க வேண்டும் என்று இந்தியா நம்புவதால் தான், அனைத்துலக விசாரணை கோரும் ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை.

மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும் அடிப்படை பொறுப்பு தேசிய அமைப்புகளுக்கே உள்ளது.

எனவே சிறிலங்காவுக்கு தேவைப்படும் எல்லா உதவிகளும் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுணர்வு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

உண்மையான தேசிய நல்லிணக்கத்தின் மூலம், இறுதியான அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கும், எல்லா மக்களும் மனிதஉரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்குமான கதவுகளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் திறந்து விட்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விரைவான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வும், அரசியல்தீர்வும், எல்லா மக்களும் திருப்தியடையும் வகையில் பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குத் தீர்வு காண உதவும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.