சனி, ஏப்ரல் 05, 2014

மேல், தென் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம்
* ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்.பிக்களும் பங்கேற்பு
* தென் மாகாணத்துக்கு விரைவில் மற்றுமொரு அமைச்சர் நியமனம்

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்களும் அமைச்சர்களும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண வைபவத்தில் மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும் தென் மாகாண முதலமைச்சராக ஷான் விஜேலால் டி சில்வாவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
மேல் மாகாணத்திற்கான மேலும் நான்கு அமைச்சர்களாக உதய கம்மம்பில, ரஞ்சித் சோமவன்ச, உபாலி கொடிகார, நிமல் லான்சா ஆகியோரும், தென் மாகாண சபை அமைச்சர்களாக சந்திம ராசபுத்திர, தயாவன்ச ஆரியதிலக, டீ. வி. உபுல் ஆகியோரும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். தென் மாகாணத்திற்கான மேலும் ஒரு அமைச்சர் பின்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய நிகழ்வில் அறிவித்தார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னி லையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களில் முதலமைச்சர்கள் இருவரும் அமைச்சர்கள் ஏழு பேரில் அறுவரும் கடந்த மாகாண சபையிலும் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களே என்பதும் மேல் மாகாண சபை அமைச்சர்களின் ஒருவரான ரஞ்சித் சோமவன்ச மாத்திரமே புதிதாக இம்முறை அமைச்சர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
நேற்றைய சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இரு மாகாணங்களினதும் ஆளுநர்களின் பங்கேற்றலுடன் நடைபெற்றது. அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டவர்களை ஜனாதிபதி வாழ்த்தியதுடன் அவர்களுடன் இணைந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
நேற்றைய தினம் ஜனாதிபதியின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டவர்களில் மேல் மாகாண சபையின் முதலமைச்சராகவும் நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி, கல்வி, மாகாண மற்றும் தொழில் வாய்ப்பு, பொறியியல் சேவை மற்றும் தகவல்துறை அமைச்சராகவும் பிரசன்ன ரணதுங்க பதவியேற்றுக் கொண்டார்.
உதய கம்மம்பில மேல் மாகாண சபையின் விவசாயம், கமநல அபிவிருத்தி, சிறிய நீர்ப்பாசனம். கைத்தொழில், சுற்றாடல், கலை மற்றும் கலாசாரம், அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ரஞ்சித் சோமவன்ச சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியத்துறை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாரமரிப்பு மற்றும் மாகாண சபை அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
உபாலி கொடிக்கார மேல் மாகாண சபைக்கான எரிபொருள் மற்றும் மின்சக்தி, மாகாண வீதிகள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு, சமூக நலன்புரி, நகர மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
நிமல் லன்சா மேல் மாகாண சபைக்கான போக்குவரத்து, விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகாரம், மகளிர் விவகாரம், உணவு விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு கூட்டுறவு அபிவிருத்தி, குடும்ப பொருளாதார மேம்பாடு, கடற்றொழில், கிராமிய அபிவிருத்தி, சுற்றுலா, முதலீட்டு ஊக்குவிப்பு இணைப்பு, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
தென் மாகாண சபை முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஷான் விஜேலால் டி சில்வா நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, உள்ளூராட்சி, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் சுதேசிய மருத்துவத்துறை, சுற்றுலா மற்றும் பொறியியல் சேவை அமைச்ச ராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
சந்திம ராசபுத்ர தென் மாகாண சபைக்கான கல்வி, காணி மற்றும் காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
தயாவன்ச ஆரியதிலக்க தென் மாகாண சபைக்கான விவசாயம், கமநல அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, உணவு விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
டீ. வீ. உபுல் தென் மாகாண சபைக்கான கடற்றொழில், கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, சுற்றாடல், கிராமிய கைத்தொழில், மின்சாரம், கிராமிய மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, தினேஷ் குணவர்தன. டக்ளஸ் தேவானந்தா, ஏ. எச். எம். பெளஸி உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள், ஏ. எச். எம். அஸ்வர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், கட்சித் தலைவர்களுடன் புதிய அமைச்சர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (ஸ)