சனி, ஏப்ரல் 05, 2014

இலங்கை மீதான அவுஸ்திரேலிய நிலைப்பாட்டில் அவசர மறுபரிசீலனை தேவை – கோர்டன் வைஸ்
 அவுஸ்திரேலியாவில் வீதிகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் இங்கு வாழும் பூர்விகக்குடிகளுக்கும்  [Aboriginals] அவுஸ்திரேலியாவின் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில்
மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இதனை இலங்கையில் மேற்கொள்ள முடியும் எனக் கூறுகின்றது.
 
இவ்வாறு இலங்கையில் போரின் இறுதி மூன்றாண்டுகள் ஐநாவின் பேச்சாளராக பணியாற்றியவரும், இலங்கையின் போரை விபரிக்கும் The Cage என்னும் நூலின் ஆசிரியருமான Gordon Weiss தனது கருத்தை The Newcastle Herald என்னும் ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டவை பின்வருமாறு,
 
2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பில் ஐ.நா வால் மேற்கொள்ளப்படும் குற்றவியல் விசாரணையானது எவ்வளவு தூரம் வினைத்திறன் மிக்கதாக இருக்கும் என்பது தொடர்பாக கடந்த வாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் விவாதித்தன.
 
போரின் இறுதி மாதங்களில் மட்டும் 40,000 தொடக்கம் 70,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கத்தின் குண்டுத் தாக்குதல்களிலேயே பெருமளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஐ.நா அறிவித்தது.
 
பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித பொறுப்பையும் அளிக்காது நான்கு ஆண்டுகளை இழுத்தடித்துள்ளது. இந்த அரசாங்கம் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றை வழங்க முன்வரவில்லை.
 
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை அவுஸ்திரேலியா எதிர்த்துள்ளது. இத்தீர்மானத்தைத் தனது நாடு எதிர்ப்பதாகவும், தமிழ்ப் புலிகள் பயங்கரவாதிகள் என்பதையும் சான்றுபடுத்தி அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் யூலி பிசப் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 
இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் நாட்டில் மீளிணக்கப்பாட்டை உருவாக்க முடியும் எனவும் இதன்மூலம் தமிழர் வாழும் பகுதிகளில் மீள்கட்டுமாணப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதுவே இலங்கையில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழியாகும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
எனது நூலில் திட்டமிட்ட ரீதியில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக நான் விவரித்துள்ளேன். இதற்கான காணொலிப் பதிவுகளை ‘போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலை வலயங்கள்’ என்கின்ற காணொலியில் காணமுடியும்.
 
எமது சார்பாக இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் நீதியற்ற நடவடிக்கையை எமது வெளியுறவு அமைச்சரால் மட்டுமே விளங்கப்படுத்த முடியும். அவுஸ்திரேலியர்கள் இந்தக் காணொலியை பார்ப்பதன் மூலம் இதிலுள்ள சாட்சியங்களைக் கொண்டு நல்லதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.