சனி, ஏப்ரல் 05, 2014

மல்வத்தை மகாநாயக்கருடன் மூடிய அறைக்குள் அமெரிக்கத் தூதர் 

இரகசியப் பேச்சு

மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரருடன், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் மூடிய அறைக்குள் பேச்சுக்களை நடத்தியுள்ளார். 

கண்டியில் நேற்றுக்காலை 9.45 மணி தொடக்கம் சுமார் ஒரு மணிநேரம் இந்த இரகசிய பேச்சுக்கள் இடம்பெற்றன.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அமெரிக்கத் தூதுவர், மல்வத்தை மகாநாயக்கருடன் வழக்கமான விவகாரங்கள் தொடர்பாகவே பேசியதாக குறிப்பிட்டார்.

எனினும், ஜெனிவா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா தொடர்பாக வெளிநாடுகளில் வெளியாகும் செய்தி அறிக்கைகள் பொய்யானவை என்று அமெரிக்கத் தூதுவரிடம் மல்வத்தை மகாநாயக்கர் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அத்தகைய ஊடக அறிக்கைகளில், ஏனைய சிறுபான்மை மதத்தினர் மீது சங்க சபா உறுப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொள்வதாக குறிப்பிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரையும் நேற்று சந்திக்க அமெரிக்கத் தூதவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அஸ்கிரிய மகாநாயக்கருக்கு சுகயீனம் ஏற்பட்டதால், அந்தச் சந்திப்பு நேற்று இடம்பெறவில்லை.