புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014





""முக்கால் நூற்றாண்டுகால பொதுவாழ்வு அனுபவத்தினால் வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக ஜீரணிக்கக்கூடியவர் கலைஞர். ஆனால், மு.க.ஸ்டாலினால் அவ்வளவு எளிதாக இந்த தோல்வியை எடுத்துக்கொள்ள முடியவில்லை. 15 தொகுதிகளுக்குக் குறையாமல் ஜெயிப் போம் என நினைத்தவருக்கு ஒரு தொகுதியும் கிடைக்க வில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்த அந்த அப்செட்டி லிருந்து அவரால் மீளவே முடியவில்லை. வேட்பாளர் தேர்விலிருந்து பிரச்சாரத்தை வழிநடத்துவது வரை அனைத்தையும் இம்முறை முன்னின்று மேற்கொண்ட அவர் இதைத் தனது சொந்தத் தோல்வியாக நினைக்கிறார்'' என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமான மாவட்டச் செயலாளர்கள். 

தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, தி.மு.க.வின் தோல்வியை விமர்சித்தும், ஸ்டாலினை மறைமுகமாக சாடியும் அழகிரி அளித்த பேட்டியை சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பின. மறுநாள் (மே 17) கலைஞரை துரைமுருகன், ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங் கோவன், கனிமொழி ஆகியோர் சந்தித்து, தோல்வி ஏன் ஏற்பட்டது என விவாதித்தபோது, "மாவட்டச் செயலாளர் கள் சரியாக செயல்படுவதில்லை. அதுதான் தோல்விக்கான முக்கிய காரணம். கட்சியை நிறையவே சீரமைக்கணும். பல மா.செ.க்களை மாற்றணும்' என பல சம்பவங்களை சுட்டிக்காட்டி கலைஞரிடம் எடுத்துச்சொன்னார்கள். 

அப்செட்டில் இருந்த ஸ்டாலினுக்கு இந்த விவரங்கள் தெரியவர, அவரது பதட்டம் அதிகமானது. தேர்தல் தோல்விக்கானப் பொறுப்பை தன் மீது போடுவது போதா தென்று, தன் வசமுள்ள கட்சியின் பிடியைத் தளர்த்தும் விதத்தில், தனக்கு ஆதரவாக இருக்கும் மாவட்டச் செய லாளர்கள் பலரையும் மாற்றுவதற்கான ஆலோசனையை யும் கலைஞரிடம் சொல்லிவருகிறார்களா என டென்ஷ னானார். யாரிடமும் ஸ்டாலின் அதிகம் பேசவில்லை.

ஞாயிறு (மே 18) காலையில் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்திக்க பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோர் வந்திருந்தார்கள். ""வாங்க.. தலைவரைப் பார்க்கப் போகலாம்'' என்று சொன்னபடி அவர்களை அழைத்துக்கொண்டு கோபாலபுரத் துக்குப் புறப்பட்டார் ஸ்டாலின். வழியில் யாரிட மும் எதுவும் சொல்லவில்லை. கோபாலபுரம் வீட்டில் சண்முகநாதன் இருந்தார். அவரிடம், "தலைவரை ஒரு 10 நிமிஷம் பார்த்துப் பேசணும்' என்று ஸ்டாலின் சொல்ல, "உங்களுக்கு என்ன தம்பி பர்மிஷன். நீங்க போங்க' என்று மாடிப்படி நோக்கிக் கைகாட்டினார் சண்முகநாதன். 


மாடியில் கலைஞரை சந்தித்துவிட்டு 10 நிமிடம் கழித்து கீழே வந்த ஸ்டாலினின் கண்கள் கலங்கியிருந்தன. துடைத்துக்கொண்டே வந்தவர் காரில் ஏற, அவருடன் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் ஏறிக்கொண்டனர். கலைஞரை சந்தித்துவிட்டுச் செல்லலாம் என ஆ.ராசா நினைத்திருக்க அப்போது இன்டர்காமில் சண்முகநாதனைத் தொடர்புகொண்ட கலைஞர், ""நீங்க ஸ்டாலின்கூடப் போங்க. கோபமா போறாரு'' என்று சொல்ல, அதற்குள் கோபால புரத்திலிருந்து ஸ்டாலினின் கார் புறப்பட்டது. அது அவருடைய சித்தரஞ்சன் சாலை வீட்டில் போய் நிற்க, அவரைப் பின்தொடர்ந்து வந்தார் சண்முகநாதன். கொஞ்ச நேரத்தில், கலைஞர் உத்தரவுப்படி துரைமுருகனும் ஸ்டாலின் வீட்டுக்கு வந்தார்.

அப்போதுதான் ஸ்டாலினுடன் இருந்தவர் களுக்கே கோபாலபுரத்தில் என்ன நடந்தது என்பது தெரிய வந்தது. துரைமுருகனிடம் ஸ்டாலின், ""நான்தான் தலைவர்கிட்டே எல்லாத் தையும் சொல்லிட்டேனே.. தோல்விக்கு என்னைக் காரணம் காட்ட கட்சியில சில பேர் நினைக்கிற தால, நானே அதுக்கு பொறுப்பேற்று கட்சிப் பதவி யை ராஜினாமா செய்றதா தலைவர்கிட்டே சொன் னேன். அதற்கு அவர், "தேர்தல்னா வெற்றி-தோல்வி இருக்கத்தான் செய்யும். இதற்கெல்லாம் ராஜி னாமா செய்தால், கட்சியை எதிர்காலத்தில் எப்படி வழி நடத்தமுடியும்? போய் வேலையைப் பாரு'ன்னு சொன்னாரு. என்னால ஏத்துக்க முடியலை. 

எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைச்சும் ரிசல்ட் இப்படி வந்திடிச்சி. இதைக் கிண்டல் பண்ணி அவரு (அழகிரி) பேட்டி கொடுக்குறாரு. அதற்குத் தலைவர் கிட்டேயிருந்து எந்த பதிலும் இல்லை. அதோடு, எங்கே போனாலும் யார்கிட்டே பேசினாலும் தி.மு.கவை குடும்பக் கட்சின்னும் குடும்ப ஆட்சிதான் நடத்துனாங்கன்னும் சொல்றாங்க. அந்தப் பழியைத் துடைக்கிறதுக்காகத்தான், நான் ராஜினாமா செய்யும் கடிதத்தை தலைவர்கிட்டே கொடுத்தேன். மத்தவங்க வேணும்னா பதவியை அனுபவிச்சிக்கிட்டுப் போகட் டும்'' என்று படபடவென துரைமுருகனிடம் கொட்டிவிட்டார் ஸ்டாலின்.

தேர்தல் நேரத்தில் ஏட்டிக்குப் போட்டியாக பேட்டி கொடுத்து அழகிரி கொடுத்த குடைச்சல், 2ஜி வழக்கை எதிர்கொள்ளும் நேரத்தில் தொகுதி தொகுதியாக கனிமொழி மேற்கொண்ட பிரச்சாரம், மதசார்பற்ற ஆட்சி அமைய கை கொடுப்போம் என காங்கிரசுக்கு தூது அனுப்பும் விதத்தில் கலைஞர் செய்த பிரச்சாரம் இதெல்லாம் தி.மு.கவின் வெற்றியை பாதித்துவிட்டது என ஸ்டாலின் நினைப்பதாலும், இது தொடர்பாக தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட்டாக இருக்கும் என்பதாலும் அவர் இப்படி செய்திருக்கிறார் என்பது அவருடன் இருப்பவர்களுக்கே அப்போதுதான் தெரியவந்தது.

ஸ்டாலின் மனைவி துர்காவுக்கும் அப்போதுதான் ராஜினாமா விவகாரம் தெரியவர அவர் அதிர்ச்சியாகி, "என்ன இப்படி செய்திருக்கீங்க. ஒரு வார்த்தை கூட சொல்லலையே' எனக் கேட்க, "என்னால இதையெல் லாம் தாங்க முடியலை. அதனாலதான் யார்கிட்டேயும் சொல்லாமல் தலைவர்கிட்டே கடிதத்தை கொடுத்தேன்' என சொல்லியிருக்கிறார். 

ஸ்டாலினை சந்தித்துவிட்டுத் திரும்பிய துரைமுருகனை, வாசலில் திரண்டிருந்த மீடியாக்கள் முற்றுகையிட்டன. அவர்களிடம், ""தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கலைஞரிடம் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஒரு தோல்வியால் தி.மு.க அழிஞ்சிடாதுன்னும் கட்சியின் எதிர்காலத்தை வழிநடத்த வேண்டிய ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தேவை யில்லைன்னும் கலைஞர் சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு, ராஜினாமா முடிவை வலியுறுத்தப்போவதில்லைன்னு ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்'' என துரைமுருகன் பேட்டியளித்தார்.

ஸ்டாலின் வீட்டு வாசலில் மீடியாக்கள் குவிவதற்கு முன்பாகவே கட்சி நிர்வாகிகள் குவிந்துவிட்டனர். டென்ஷனுடன் இருந்த அவர்களும் துரை முருகன் பேட்டி கொடுப்பதை கவனித்தபடி இருந்தனர். பேட்டி முடிந்ததும் அங்கிருந்த ஆங்கில மீடியாக்கள், "ராஜினாமா டிராமா முடிவுக்கு வந்தது' என மைக்கில் லைவ் கமெண்ட் கொடுக்க, "ஸ்டாலின் நடத்தியது டிராமாவா' என்றபடி மீடியாக்கள் மீது பாய்ந்துவிட்டார்கள் கட்சிக்காரர்கள். 

இதில் ஆங்கில ஊடகங்களின் செய்தியாளர்கள், கேமராமேன்கள் தாக்குதலுக்குள்ளாக, தமிழ் ஊடகத்தினரும் தப்பவில்லை. கலைஞர் டி.வி. டீம் மீதும்கூட கோபத்தைக் கொட்டினார்கள் கட்சிக்காரர்கள். "தி.மு.கவின் தோல்விக்கு மீடியாக்களின் பிரச்சாரம்தான் காரணம்' என்றபடி சகட்டுமேனிக்கு அவர்கள் திட்டித் தீர்த்தனர். தி.மு.கவினரின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து பத்திரிகையாளர் அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டன. அத்துடன் புகாரும் தரப்பட்டது. இதனடிப்படையில் கைது நடவடிக்கைகளும் மறுநாள் மேற்கொள்ளப்பட்டன. மீடியாக்களைப் போலவே அழகிரியும், "ஸ்டாலினின் ராஜினாமாவை டிராமா' என்றார் ஞாயிறு மாலையிலேயே.

இந்நிலையில், ஸ்டாலினுடனான சந்திப்பு பற்றி கோபாலபுரத்தில் கலைஞரிடம் துரைமுருகன் எடுத்துச்சொல்ல, வீட்டிலிருந்து வெளியே வந்த கலைஞர் அங்கே குவிந்திருந்த மீடியாக்களை சந்தித்தார். "உடல்நலன் குன்றி வீட்டில் படுத்திருக்கும் தயாளு அம்மாவைத் தொந்தரவு செய்வது போல மீடியாக்கள் கூச்சல் போடாமல் அமைதியாக கேள்விகள் கேட்டால் பதில் தருகிறேன்' என கலைஞர் சொல்ல, "ஸ்டாலின் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா' என மீடியாக்கள் கேட்டன. ""அது பொய், கடைந்தெடுத்த பொய். தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக என்னிடம் நேரில் சொன்னார். கடிதமெல்லாம் கொடுக்கவில்லை'' என்றவரிடம், "தி.மு.க தோல்விக்கு என்ன காரணம்' என்று கேட்கப்பட, "வாக்குகள் குறைந்ததுதான் காரணம்' என்றார் தனக்கே உரிய இயல்புடன். "தேர்தல் தோல்வி பற்றி ஆராய தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூடும்' என்றும் சொன்னார். ஆனால், அழகிரி செய்து வரும் விமர்சனங்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது கலைஞரின் குரலும் தொனியும் மாறிவிட்டது.

""அவர் என் பிள்ளையே அல்ல. அவரை நானும் தி.மு.கழகமும் மறந்து பல நாட்கள் ஆகின்றன. அவர் கழகத்தில் இருக்கும் போதே தி.மு.க இரண்டு முறை தோற்றிருக்கிறது. அவ ரைப் பற்றி நான் இனியும் பேச விரும்பவில்லை'' என அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட் டார். ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் கட்சி நிர்வாகிகள் குவிந்தபடியே இருந்தனர். 

சில மா.செக்கள் ஸ்டாலினிடம், ""நீங்கள் ராஜினாமா செய்வதாக முடி வெடுத்ததன் மூலம் வரலாற்றில் பெரிய தலைவராகிவிட்டீர்கள்'' என்கிற லெவலுக்கு பேச ஆரம்பித்தனர். ""காங்கிரஸ் கட்சி சிண்டிகேட், இண்டிகேட்டாக உடைந்தபோது காமராஜர் எப்படி முடி வெடுத்தாரோ அப்படி நீங்க முடிவெடுத்திருக்கீங்க'' என்று தன் பங்குக்கு சொன்னார் திண்டுக்கல் ஐ.பெரியசாமி.  டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜா, "தளபதி.. நீங்க இப்பவே தலைவராகணும். அப்பதான் கட்சி மறுபடியும் வலிமையாகும்' என்று சொல்ல, சுற்றி நின்ற பலரும் "ஆமாமாம்' என்றனர். ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. 

கலைஞர்தான் கட்சியின் தலைவர் என்கிற மரியாதையுடன் ஸ்டாலின் இருக்கிறார். ஆனால், குடும்பத்து ஆட்களின் தலையீடு இல்லாத வகையில் க்ளியராக இருந்தால்தான் தன்னால் கட்சியை வழி நடத்த முடியும் என்பது அவரது எண்ண மாக இருக்கிறது. ஸ்டாலின் ஆதரவு மா.செ.க்களோ, ஸ்டாலின் விரைவாக தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரம் காட்டுகிறார்கள். சித்தரஞ்சன் சாலை வீட்டிற்கு வந்திருந்த மா.செ.க்களிடம் முன்னாள் அமைச்சரும் காஞ்சி மா.செவுமான தா.மோ. அன்பரசன், ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராஜினாமா கடிதங்களை கேட்டு வாங்கிக்கொண்டிருந்தார். 16 மா.செக்கள் கடிதம் கொடுத்தனர். 

இதனை கவனித்த பொன்முடி போன்ற சீனியர்கள், ""இதெல்லாம் தவறான அணுகு முறையாயிடும்'' என்று சொல்ல, இன்னும் சில மா.செக்களும், ""நாம இப்படியெல்லாம் செய்தால் தலைவருக்கு நெருக்கடி கொடுப்பதுபோலாகிவிடும்'' என்றார் கள். பதட்டமும் பரபரப்புமாக கோபாலபுரமும் சித்தரஞ்சன் சாலையும் இருக்க, அறிவாலயம் பக்கம் வந்த கட்சித் தொண்டர்களோ, ""இப்படிப்பட்ட நேரத்தில் ராஜினாமா பற்றி பேசுவதும் அப்புறம் சமாதானமாவதும் கட்சிக்கு நல்ல பெயரைத் தராது. டிராமான்னு சாதாரண ஜனங்ககூடப் பேசுவாங்க'' என யதார்த்தத்தை விவாதித்தபடி இருந்தனர். 

திங்களன்று சூடு கொஞ்சம் தணிந்ததுபோல இருந்தது. ஸ்டாலினைப் பார்த்த மா.செக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், கோபாலபுரத்திற்கு வந்து கலைஞரையும் சந்தித்தனர். ""உயர் நிலை செயல்திட்டக்குழுவுக்குப் பதில் பொதுக்குழுவைக் கூட்டலாம்'' என்றனர். பொதுக்குழு கூடினால்தான் தேர்தல் பணிகள் பற்றிய உண்மைகளை வெளிப்படையாக பேசமுடியும் எனப் பலரும் நினைக்கிறார்கள். வேலூர் மா.செவான ராணிப் பேட்டை காந்தி, ""எங்க மாவட்டத்தில் துரைமுருகன் வெளிப் படையாகவே வேலூரில் முதலியாரான ஏ.சி.சண்முகத்துக்கும், அரக்கோணத்தில் மாங்காய்க்கும் ஓட்டு கேட்டாரு. அவரோட ஓட்டு இருக்கிற பூத்திலேயே நமக்கு குறைவான ஓட்டுதான் கிடைச்சிருக்குது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்கணும்'' என்று கலைஞரிடமே சொல்லியிருக்கிறார். இதுபோலவே மற்ற மற்ற மாவட்ட நிர்வாகிகளும் ஆளாளுக்குப் பொருமிக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் இதுபற்றியெல்லாம் யோசித்து வரும் நிலையிலும், பொதுவான அரசியல் குறித்தும் ஜாலியாக அரட்டை அடிக்கத் தவறுவதில்லை. வைகோவின் தொடர் தோல்வி பற்றி பேச்சு வந்தபோது, ""அவர் இங்கே போட்டியிடுறதுக்குப் பதிலா இலங்கையில் போட்டியிட்டால் நிச்சயமா ஜெயிச்சிடுவாரு'' என்று கலைஞர் சொல்லியிருக்கிறார். அவரிடம், "நிச்சயமா ஜெயிச்சிடலாம்ங்கிற நம்பிக்கையோடு ரிசல்ட்டுக்கு முதல்நாள் வைகோ வாலிபால் விளையாடினார்' என்று தி.மு.க.வினர் சொல்ல, ""அப்படின்னா, "அவரு வருத்தப்படாத வாலிபால் சங்கத் தலைவர்'னு சொல்லுங்க'' என்றிருக்கிறார்.

அதேநேரத்தில், மற்ற கட்சியினரின் தோல்வியைவிட தன் கட்சி பெற்றுள்ள தோல்வியின் காரணங்களையும், அதைக் களைவதற்கான வழிகளையும் கலைஞர் யோசித்தபடியே இருக்கிறார். உயர்நிலை செயல்திட்டக்குழு அல்லது பொதுக் குழுவைக் கூட்டி ஆலோசித்தபிறகு, மா.செக்கள் மாறுதல் என்கிற ஆபரேஷனை கலைஞர் நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினரிடம் பலமாக இருக்கிறது. 

ad

ad