புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014





13-ஆம் தேதி... காலை 9 மணி. ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் ஏரியா. பகலில் கொலை செய்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் துளியும் இல்லாத நான்கு பேர் இரண்டு டூ வீலர்களில் வந்து சாவகாசமாக டீ குடித்தபடி காத்திருந்தார்கள். வழக்கம் போல தனது அலுவலகத்துக்கு வந்த மீனாட்சி சுந்தரத்தை ஜனசந்தடி அதிகம் உள்ள மதுரை சாலையில் வெட்டிச் சாய்த்தார்கள். கை, கால், கழுத்து, தலை என மொத்தம் 17 இடங்களில் வெட்டு விழுந்திருக்கிறது. உயிர் பிரிந்து ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த நிலையிலும் ஆத்திரத்தோடு மாறி மாறி வெட்டியிருக் கின்றனர். 
யார் இந்த மீனாட்சிசுந்தரம்? 

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நகர செயலாளராகவும், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராகவும் இருந்த மீனாட்சி சுந்தரம் ராஜபாளையம் 17-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரும் ஆவார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் படு நெருக்கமாக இருந்தாலும், செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதர வாளராகவும்  இருந்தார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் போது தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் மீனாட்சிசுந்தரத்தின் அலுவலகத்தில் உட்கார்ந்து டீ குடித்து விட்டுப் போயிருக்கின்றனர். இந்த அளவுக்கு அமைச்சர்களிடம் இவர் வைத்திருந்த தொடர்புகள்தான் தே.மு.தி.க.வில் இருந்து கட்சி மாறிய இவருக்கு கட்சி பொறுப்புக்கள் எளிதில் கிடைக்கக் காரணமாக இருந்திருக்கிறது. 


பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்தவரான மீனாட்சிசுந்தரம், வழக் கறிஞரும் நகர்மன்ற உறுப்பினருமான முருகேசனிடம் நட்பு வைத்துக்கொண்டு பலமான பின்னணி உள்ளவராக தன்னை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். கட்டப் பஞ்சாயத்திலெல்லாம் ஈடுபட்டு, அரசியல் ரீதியாகவும் பலரது பகை யைச் சம்பாதித்திருக்கிறார். ஒன்றரை கோடி ரூபாய் பெறு மான ஒரு ‘டாகு மெண்ட்’ விவகாரத் தில் கமிஷனாக   25 லட்ச ரூபாய் இவர் கைக்குப் போய்விட, "யார் தலை முதலில் விழும்? நீயா? நானா? பார்த்துவிடுவோம்' என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் மீனாட்சிசுந்தரத்திடம் சவால் விட்ட சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. இந்த எம்.பி. தேர்தலுக்காக "வீட்டுக்கு ஒரு பை... ஓட்டுக்கு ஒரு கவர்'’என தள்ளுவண்டியில் மஞ்சள் பைகளை வைத்து தள்ளியபடி பகிரங்கமாக இவர் பணப் பட்டுவாடா செய்த போது, தகவலறிந்து துரத்தி யிருக்கிறார் தேர்தல் அலுவலரான துணைத் தாசில்தார். ஆனாலும், அவருக்கு ‘பெப்பே’ காட்டிய மீனாட்சிசுந்தரம், "முடிந்தால் என்னைக் கைது செய்து கொள். தேர்தல் முடியட்டும்... உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்'’’ என்று உறும...  இவரது அரசியல் செல்வாக்கினை அறிந்த தேர்தல் அலுவலர் பின்வாங்கியிருக்கிறார்.  

இன்னொரு பொட்டு சுரேஷ்!

""அப்போது தி.மு.க. ஆட்சி. தற்போது அமைச்சராக இருக்கும் அவர் அப்போது அ.தி.மு.க. மாநில பொறுப்பில் இருந்தார். திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்கு ஆயத்தமான நிலையில், வழித் துணைக்கு ஒருவர் தேவைப்பட்டிருக்கிறார். அவரின் தேவையை நிறைவேற்றுவதற்காக, மாநில அளவில்  கட்சிப் பொறுப்பு வாங்க துடித்துக்கொண்டிருந்த செவத்த தோலு’ என்றழைக்கப்படும் பெண் வழக் கறிஞர் ஒருவரை  இவர் அழைத்துச் சென்றிருக் கிறார்.  ராஜபாளையத்தில் இருந்து கிளம்பிய கார் மதுரை - மேலூர் அருகே   அதிகாலையில் ‘வாக்கிங்’ போய்க் கொண்டிருந்தவர்கள் மீது மோதியிருக்கிறது. சம்பவ இடத்திலேயே மூவர் பலியானார்கள். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஆத்திரத்தில் காரை எரித்து விட்டார்கள்.   அங்குள்ள கட்சிக்காரர்களின் உதவியோடு இவர் தப்பியிருக்கிறார். நெருக்கடியான அந்தச் சூழ் நிலையிலும்,  அந்தப் பெண் வழக்கறிஞரை பத்திரமாக திருச்சிக்கு ரயிலேற்றி அனுப்பி வைத்திருக்கிறார். அந்த வழக்கில் இவரைச் சிக்க விடாமல் காப்பாற்றியது பொட்டு சுரேஷின் சாதிப் பாசமும் இவர் வீசி எறிந்த கரன்ஸிக் கட்டுக்களும்தான். மூன்று வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. இவரை இன்னொரு பொட்டு சுரேஷ் என்றே சொல்லலாம்...''’என்று ஆளும் கட்சியினரே இவரது மகாத்மியங்களைச் சிலிர்த்தபடி  சொல்கின்றனர்.  

கொலை செய்தவர்கள் யார்?


கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் என ஆளும் கட்சியினர் சாலை மறியல் நடத்தினார்கள். அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர், அரசியல் பகையா? பார் டென்டர் தகராறா?  ரியல் எஸ்டேட் தொழில் விவகாரமா? பெண் விவகாரமா? என்று பல கோணத் திலும் துருவிக் கொண்டிருந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நீரார்த்தலிங்கம், சீனி என்ற சீனிவாசன், ரமேஷ் ஆகிய மூவர் சரண டைந்தனர். அதே கட்சியைச் சேர்ந்த நாதன் என் பவரையும் அள்ளிக் கொண்டு போய் விசாரித்தது போலீஸ். கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் தலைமறைவாகிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மா.செ. தமிழ் வளவனை காக்கிகள் தேடி வரும் நிலையில், மேற்கண்ட நால்வரும்  ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டிருக்கின்றனர். 

கொலைக்கான காரணம் என்ன?


விசாரணையின்போது ""மீனாட்சிசுந்தரம் கவுன்சிலர் ஆவதற்குமுன் சீனியின் மனைவி ஜெயா 17-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். அதற்கு பின் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து சீனியே அந்த வார்டில் போட்டியிட்டார். ஒரு தடவை கூட வெற்றி பெற முடியவில்லை. மேலும், சீனியின் கொழுந்தியாவிடம் தனிப்பட்ட முறையில் மீனாட்சி சுந்தரம் பாசம் காட்டி வந்ததும் சர்ச் தெரு பெண்களில் சிலருடன் நெருக்கமாகப் பழகியதும் சீனிக்கு அறவே பிடிக்கவில்லை. அ.தி.மு.க. நகர செய லாளர் பாஸ்கரன் சிபாரிசில் இரண்டு ஒயின் ஷாப் பார்களை நடத்தி வந்தார் சீனி. அந்த டாஸ்மாக் பார்களுக்கான லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டிய நிலையில்,  அமைச்சரின் செல்வாக்கை வைத்து  சீனிக்கு பார் கிடைக்கவிடாமல் பண்ணுவதாக மிரட்டினார் மீனாட்சிசுந்தரம். சீனியின் உறவுக்கார பெண்கள் குறித் தும் ஆத்திரமூட்டும் வகையில் பேசினார்'' என்றெல் லாம் விவரித்தார்களாம். ""கொழுந்தியாவுடனான மீனாட்சிசுந்தரத்தின் தொடர்பு சீனியை ரொம்பவே டென்ஷன் ஆக்கியது. அவன்  கோபத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்தோம்.  அவனோடு சேர்ந்து மீனாட்சிசுந்தரத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். கொலையும் செய்தோம்''’என்கிற ரீதியில் வாக்குமூலம் தந்திருக்கின்றனராம். 

உயிரைப் பறித்த பெண்கள் தொடர்பு!


கொடுத்த வாக்குமூலத்தில்,  காக்கிகள் ரெக்கார்ட்’ செய்யாமல் தவிர்த்த விஷயங்கள் குறித்து சர்ச் தெரு வாசிகள் இப்படிச் சொன்னார்கள் ""மீனாட்சிசுந்தரத்தின் பேரீச்சம்பழ கம்பெனியில் சீனியின் கொழுந்தியா உட்பட எங்களது ஏரியா பெண்கள் சிலர் வேலை பார்த்தார்கள். எங்கள் தெருவுக்கு அடிக்கடி வருவான் மீனாட்சிசுந்தரம். அந்த வகையில் இளம் பெண்கள் சிலரிடம் தொடர்பு ஏற்படுத் திக்கொண்டான். அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையைப் பயன் படுத்தி அவர்களை தன் வழிக்கு கொண்டு வந்தான். ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிர முகர்களைக் குஷிப் படுத்தும் காரியங் களில் இறங்கினான். இப்படித்தான், இரண்டு பெண்களை ஆட்சி அதிகாரத்தில் அதிமுக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றான். அந்தப் பெண்கள் வீடு திரும்பவே இல்லை. அங்கிருந்து மும்பை சிவப்பு விளக்குப் பகுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டதாகச் சொல்கிறார்கள். தவறான தொழிலில் இறக்கிவிட்டு தங்களது சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை மீனாட்சிசுந்தரம் சீரழித்ததும் கொலைக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று''’என்கிறார்கள். காக்கிகள் வட்டாரமோ, ""தனது ஏரியா பெண்களை சீரழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக கொலை செய்யத் துணிய மாட்டான் சீனி. அந்த அளவுக்கு சமுதாய அக்கறை கொண்டவனாக சீனியையோ மற்ற நால்வரையுமோ சொல்ல முடியாது. கொலையின் பின்னணியில் நிச்சயம் ‘அரசியல்’ இருக்கும். பணம் விளையாடியிருக்கும். அதனால்தான், வழக்கினை எதிர்கொள்வதற்கான  மனநிலையோடு தாங்களாகவே வந்து மாட்டியிருக்கிறார்கள்''’என்கிறது. 

‘மீனாட்சிசுந்தரம் கொலை குறித்து என்னவெல்லாமோ பேசுகிறார்களே..?’ என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் கேட்டோம். 

""கொலைப்பழி யாரையும் சும்மா விடாது. கொலை செய்தவர்கள், கொலைக்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்துக்கு முன்பாக நிறுத்தப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார். 

ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளோடு வைத்திருக்கும் அரசியல் தொடர்புகள் உச்சத்துக்கு கொண்டு போவதும், அதிகார பலத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுவதும், பகையைச் சம்பாதிப்பதும், எதிரிகளால் அத்தகையவர்கள் உயிர் இழப்பதும் தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது. 

ad

ad