புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது.

அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றும், முறைகேடு தொடர்பாக அவரையும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.



இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், ப. சிதம்பரம் எந்தவித கிரிமினல் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்கோ, நிதியமைச்சர் என்ற முறையில் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்தார் என்பதற்கோ பூர்வாங்க ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி சுவாமியின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அதே கோரிக்கையை வலியுறுத்தி, சுவாமி தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் நிராகரித்திருந்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் சுவாமி.

ஒரு முடிவெடுப்பதற்காக, தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர்கள் ஆ. ராசா மற்றும் சிதம்பரத்துக்கும் இடையே அப்போது நடந்த சந்திப்புக்கள் நடந்தததை அடிப்படையாக வைத்து, சந்தேகத்தின் அடிப்படையில் கிரிமினல் சதித்திட்டம் நடந்ததாக முடிவுக்கு வர முடியாது என்று ஜி.எஸ். சிங்வி மற்றும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்ட பலவீனமான மேலாண்மையை, கிரிமினல் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

சுப்ரமணியன் சுவாமியைப் போல, பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற தன்னார்வ அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

சுவாமி
தளராத போராட்டம்

மறு ஆய்வு மனு: சுவாமி அறிவிப்பு

தனது மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

''சதித்திட்டம் பற்றி நான் பேசவில்லை. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றித்தான் நான் வாதிட்டேன். உச்சநீதிமன்றம் எனது வாதத்தை நிறைவு செய்ய அனுமதிக்கவில்லை. இது மோசமான தீர்ப்பு’’ என்றார் சுப்ரமணியன் சுவாமி.

தான் எழுப்பாத பிரச்சினைகள் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும், நாட்டுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புக் குறித்து பரிசீலிக்கவில்லை என்றும் சுப்ரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்தார்.

நிம்மதிப் பெருமூச்சு

இரண்டாம் தலைமுறை ஒதுக்கீடு விவகாரத்தில், அப்போதைய அமைச்சர் ராசா, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததை சிதம்பரம் தடுத்திருக்க வேண்டும் என்றும், அந்த முடிவுக்கு அவரும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்றும் சுவாமியும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், சிதம்பரம் அதை ஆரம்பம் முதலே மறுத்து வருகிறார்.

இந்த வழக்கில் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ப. சிதம்பரத்துக்கு மட்டுமன்றி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மத்திய அரசுக்கும் பெரும் நிமமதியைக் கொடுத்திருப்பதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளில், பிரதமருக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி வருகின்றன. இந் நிலையில், 2ஜி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அரசுக்குக் கிடைத்த பெரும் ஆறுதலாகப் பார்க்கப்படுகிறது. thanks-bbc

ad

ad