உரிமையையும், சுதந்திரத்தையும் பெற தமிழர்கள் த.தே.கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும்!- சந்திரநேரு
தமிழர்களின் உரிமையை, சுதந்திரத்தை கோருகின்ற ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்கள் ஆதரிப்பதன் மூலமே அதைனை உறுதிபடுத்த முடியும். இது எமக்கான கடைசி சந்தர்ப்பம். இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் (ரோகான்) தெரிவித்தார்.
தமிழர்களின் உரிமையை, சுதந்திரத்தை கோருகின்ற ஒரே கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்கள் ஆதரிப்பதன் மூலமே அதனை உறுதிபடுத்த முடியும். இது எமக்கான கடைசி சந்தர்ப்பம். எமக்கு பக்க பலமாக புலம் பெயர்ந்த எமது உறவுகள் உள்ளன.
கடந்த வியாழனன்று கல்முனையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய சந்திரநேரு சந்திரகாந்தன் அவர்கள்,
தமிழர்களே! நீங்கள் நேர்மையாகவும், தமிழ் தேசிய பற்றுடனும், எமது கொள்கைகளில் இருந்து மாறுபடாமலும், எமக்காக வித்தாகிய எமது மாவீர்களை மனதில் நிறுத்தி, வருகின்ற தேர்தல் தினத்தன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும்.
எமக்கு உரிமை வேண்டும், எமது தேசியம் வேண்டும், எங்களது காணி எமக்கு வேண்டும், எம்மை நாமே ஆள வேண்டும். எமது நியாயமான போராட்டத்தின் வெற்றி, வெகு தொலைவில் இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்துவோம், எமது உரிமையை வென்றெடுப்போம்.
வாழ்க தமிழ்! இவ்வாறு தமது உரையில் குறிப்பிட்டார்.