புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2012


டெசோ மாநாடு வெற்றி: கருணாநிதி அறிக்கை
டெசோ மாநாடு தொடர்பில் மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் எல்லாம் கரியை பூசுகின்ற அளவிற்கு மிகவும் சிறப்பாகவும், ஈழத் தமிழர்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெற்று முடிந்துள்ளதாக திமு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
12.8.2012 அன்று சென்னையில் மாலையில் நடைபெற்ற 'டெசோ' மாநாடு அதனையொட்டி காலையில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஆகியவை நடைபெறவே நடைபெறாது என்றும் அப்படியே நடைபெற்றாலும் வெளிநாட்டில் இருந்தோ, இலங்கையில் இருந்தோ, வடமாநிலங்களில் இருந்தோ இலங்கை தமிழர் பிரச்சினைகளில் ஆர்வமும், அக்கறையும் உடைய யாருமே வரமாட்டார்கள் என்றும், கருணாநிதி ஏமாறப் போகிறார் என்றும் மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் எல்லாம் கரியை பூசுகின்ற அளவிற்கு “டெசோ” மாநாடு மிகவும் சிறப்பாகவும், ஈழத் தமிழர்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெற்று முடிந்துள்ளது.
காலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆய்வரங்கத்தில் இந்தியாவின் வடமாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, சுவீடன், மொராக்கோ, சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா மற்றும் இலங்கை நாடுகளில் இருந்தும், வந்தால் இலங்கை கொடுங்கோல் அரசு என்ன செய்யுமோ என்ற அச்சத்தால் வராத ஒருசிலர் தவிர்த்து, வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட தமிழார்வலர்கள், ஈழத்தமிழர் பிரச்சினைகளில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருவோர் வரைவுத் தீர்மானங்களாக தயாரிக்கப்பட்டிருந்த 11 தீர்மானங்களின் மீது விலாவாரியாக தங்கள் ஆழ்ந்த கருத்துக்களையும், திருத்தங்களையும் எடுத்து வைத்து இறுதி தீர்மானங்களை வடிவமைத்து உருவாக்கியதோடு மட்டுமின்றி, புதிதாக மூன்று தீர்மானங்களையும் முன்மொழிந்து அவையும் விவாதிக்கப்பட்டு மாநாட்டிலே நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
குறிப்பாக கடைசி தீர்மானமான டெசோ மாநாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது என்று ஆணை பிறப்பித்த தமிழக அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டுமென்று கூறி, அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததே லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அரசின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நண்பர் ராம்விலாஸ் பஸ்வான்தான். அந்த 14 தீர்மானங்களைப் பற்றி இன்று தமிழகத்திலே உள்ள அனைத்து நாளேடுகளும் வரவேற்று நல்ல முறையில் வெளியிட்டுள்ளன.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மட்டுமின்றி, அங்கே நிகழ்த்தப்பட்ட உரைகளையும் வெளியிட்ட அந்த நாளேடுகளுக்கும், மாநாட்டிலே கலந்து கொண்டு சிறப்பித்த பன்னாட்டுத் தலைவர்களுக்கும், பார்வையாளராக வந்தவர்களுக்கும் “டெசோ” அமைப்பின் தலைவர் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளைக் கேட்பதற்காகவும், ஈழத் தமிழர் பிரச்சினையில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட உணர்வோடு இருக்கிறோம் என்பதை உலகிற்கு உணர்த்து வதற்காகவும் பல்லாயிரக் கணக்கில் திரண்டு வந்து கழகத்தின் தாரக மந்திரமாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எள்ளளவும், எள் முனையளவும் சிதைந்து விடாமல் இராணுவ வீரர்களைப் போல, எந்தவிதமான அசம்பா விதத்திற்கும் இடம் கொடுத்து விடாமல் மாநாட்டினை மாபெரும் வெற்றி மாநாடு என்ற சிறப்பினை உருவாக்கித் தந்த கழகக் கணிமணிகள்இ டெசோ அமைப்பில் இடம் பெற்ற மற்ற கட்சிகளின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் தலை தாழ்ந்த வணக்கங்களையும், இதயம் நிறைந்த நன்றியையும் குவிக்கின்றேன்.
“டெசோ” மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் “பொதுநலன் கருதி” மாநாடு அமைதியான முறையில் நடக்கும் விதமாக தகுந்த நடவடிக்கையை பொலிஸ் கமிஷனர் மேற்கொள்ள வேண்டும்'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த போதிலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கலந்து கொண்ட அந்த மாநாட்டுப் பந்தலிலோ, அல்லது வெளிப்பகுதிகளிலோ காவல் துறை எவ்வித பாதுகாப்புப் பணியையும் மேற்கொள்ளவில்லை.
ஒரு காவலர் கூட மருந்துக்கும் நம் கண்களில் தென்பட வில்லை. ஆட்சிக் கட்சி என்பது நிரந்தரமானதல்ல, ஜனநாய நாட்டில் கட்சிகள் ஆளுங்கட்சிகளாக வரும், மாறும், ஆனால் அதிகாரிகள் என்போர் நிர்வாகத்தில் நிரந்தரமானவர்கள். அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை கட்சி வேறுபாடு கருதாமல் நடு நிலையோடு நிறைவேற்ற வேண்டுமே அல்லாமல், ஆட்சிக் கட்சியின் விருப்பு வெறுப்புகளை மனதிலே கொண்டு செயல்படுவது என்பது ஜனநாயக வளர்ச்சிக்கு உகந்ததல்ல. மாநாட்டில் கலந்து கொண்ட 'இசட் பிளஸ்' பிரிவின் கீழ் வரும் தலைவர்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் பாதுகாப்பைத் தவிர, வேறு எந்த விதமான மாநிலக் காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது மட்டுமல்லாமல், கண்டிக்கத் தக்கதுமாகும்.
காவல்துறை பாதுகாப்பே இல்லாதது கண்டு மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள், குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தெரிவித்தார்கள். காவல் துறையினர் வாயிலாகவே அ.தி.மு.க. பிரமுகரை விட்டு நீதிமன்றத்திலே தடை பெறுவதற்கு மூன்று முறை முயன்று மூக்கறுபட்டவர்களுக்கு காவல் துறையின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது என்பதை தமிழக மக்கள் தெளிவாகவே உணர்ந்து கொண்டார்கள்.
“தடைக்கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு” என்று நான் நேற்று முன்தினம் குறிப்பிட்டபடி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எப்போதுமே விரோதப் போக்கினை கடைபிடித்து வரும் அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் தொடர்ந்து நமக்கு ஏற்படுத்திய தடைகளையெல்லாம் கடந்து காவல் துறையின் எவ்விதப் பாதுகாப்புமின்றி ''டெசோ'' மாநாடு வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த ''டெசோ'' இயக்கத்து கண்மணிகள் ஒவ்வொருவருக்கும் சிறப்பாகவும் குறிப்பாகவும் காலத்தே வழங்கப்பட்ட நீதியின் காவல்களுக்கும் ஆயிரம் ஆயிரம் முறை நன்றி சொல்லி அகம் மிக மகிழ்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad