புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014

சர்வதேச விசாரணை கோரி கொழும்பு நகரில் போராட்டம்; இம்மாத இறுதியில் காணாமற்போனோரின் உறவுகள் களத்தில் குதிப்பு
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் காணாமற்போன ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப்பெண்கள் ஆகியோரை மீட்டுத்
தருமாறு கோரியும், காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் இம்மாத இறுதியில் கொழும்பில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.
 
சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணாமற்போனோரைத் தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் ஜனநாயக ரீதியில் இந்தப் போராட்டம்   நடைபெறவுள்ளது. 
 
இந்தத் தகவலை காணாமற் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் நேற்று மாலை "உதயனி'டம் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
இலங்கையில் ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப் பெண்கள் எனப் பல ஆயிரக் கணக்கானோர் காணாமற் போயுள்ளனர். மஹிந்த அரசின் ஆட்சியில்தான் அதிகமானோர் காணாமற்போயுள்ளனர் என்பது உலகறிந்த உண்மை. 
 
எனவே, இந்த அரசு காணாமற்போனோரை மீட்டுத் தரும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச சமூகம் தான் இதில் உடன் தலையிட வேண்டும்; காணாமற் போனோரை மீட்டுத்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
 
படைகளினால கடத்தப்பட்டவர்கள், இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள், அரசின் அநீதிகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொணர்ந்த போது கடத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது இது வரைக்கும் தெரியாமல் உள்ளது. 
 
இவ்வாறு காணாமற்போனோரில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் உறவுகள் உள்ளன. 
 
இவ்வாறான நிலையில், காணாமற்போனோர் தொடர்பான முறையீடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதிமுதல் 21ஆம் திகதிவரை கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த விவரத் திரட்டில் எமக்கு நம்பிக்கை இல்லை.
 
ஏனெனில், எதிர்வரும் மார்ச் ஜெனிவா மாநாட்டில்  தமக்கு வரக்கூடிய நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவே இந்த விவரத் திரட்டில் அரசு ஈடுபடவுள்ளது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றி காலத்தைக் கடத்துவதில் மஹிந்த அரசு குறியாகவுள்ளது.
 
எனவே, காணாமல்போனோருக்கும் அவர்களைத் தேடும் அவர்களின் உறவுகளுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் காணாமல்போனோரைத் தேடியறியும் குழு உறுதியாகவுள்ளது. 
 
இந்நிலையில், வடக்கு, கிழக்கு உட்பட நாடு பூராகவும் காணாமற்போன ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப்பெண்களை மீட்டுத் தருமாறு கோரியும், காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் இம்மாத இறுதியில் கொழும்பில் மாபெரும் போராட்டம் நடத்த நாம் தீர்மானித்துள்ளோம். 
 
சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த ஜனநாயகப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு காணாமற்போனோரின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கவுள்ளோம் - என்றார். 
 
இந்த அரசு காணாமற்போனோரை மீட்டுத் தரும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச சமூகம் தான் இதில் உடன் தலையிடவேண்டும்; காணாமற்போனோரை மீட்டுத்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 


ad

ad