புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014

பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. 7 தொகுதிகளில் வெற்றி பெறும்: வைகோ 


ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார். காலையில் கட்சி பிரமுகர்கள், தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.

விழாவில் வைகோ பேசியதாவது: 

இந்த ஆண்டில், மது ஒழிப்பிற்காக ஆயிரக்கணக்கான தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். 1989ல் இலங்கையில் பிரபாகரனை சந்திக்க சென்றபோது மிகுந்த சிரமங்களுடன் சென்று திரும்பினேன். நான் இலங்கை செல்வதற்காக, பட்டுக்கோட்டை அருகே ஒரு கடற்கரை கிராமத்தின் வழியே அதிகாலையில் தை அமாவாசையன்று கிளம்பிச்சென்றது இன்னமும் என் மனத்திரையில் நிற்கிறது. அத்தகைய தை மாதத்தில் இப்போது இங்கே மக்களை சந்திக்கிறேன். சென்னையில் புத்தக வெளியீடுகள், திருச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சுப்போட்டி என ஓயாது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். இருப்பினும் என் சொந்த ஊர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மனநிறைவு கொள்கிறேன்.

1990–களில் ஈழத்தில் போரில் காயம்பட்ட என் தம்பிமார்கள் 17 பேர் இங்கே வந்திருந்தார்கள். அவர்கள் கலிங்கப்பட்டியில் என் வீட்டில்தான் பாதுகாப்பாக இருந்தார்கள். மூன்று பேர் நெல்லையில் என் தம்பியின் வீட்டில் இருந்தார்கள். விடுதலைப்புலிகளை வைகோ தம் வீட்டில் தங்கவைத்துள்ளார் என கலிங்கப்பட்டி மக்கள் எப்போதாவது போலீசுக்கோ, சி.ஐ.டி.,க்கோ தகவல் தெரிவிக்கவில்லை.

எங்கள் கிராமத்தினர் சுயமரியாதை மிக்கவர்கள். கடந்த தேர்தலில் இங்கு ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தும் மக்கள் ம.தி.மு.க.,வை மட்டுமே ஆதரித்தனர். ஓட்டுக்கு பணம் கொடுக்க எங்களிடம் வசதி இல்லை. அப்படி கொடுக்க தேவையும் இல்லை. பணத்தை கொடுத்து ஓட்டு பெறவேண்டிய அவசியம் இல்லை. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது.

பாரதிய ஜனதா கூட்டணியில், எத்தனை தொகுதி என்பதை இப்போது சொல்லமாட்டேன். இருப்பினும் மதிமுகவில் இருந்து குறைந்த பட்சம் 7 எம்.பி.க்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வது உறுதி என அவர் பேசினார்.

ad

ad