புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014

அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வளிக்க கோத்தபாய திட்டம்? - என்னைக் கைது செய்தால் பின்விளைவுகளையே ஏற்படுத்தும்-அனந்தி
வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து, விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கில நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சமூகத்துடன் இணைந்து பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் வெளியிடுகையில்,
வடக்கு மாகாணசபையின் உறுப்பினராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளரான எழிலனின் மனைவியாவார்.
2009 மே மாதம் போரின் முடிவில் கைது செய்யப்படாதவர்கள் அல்லது சரணடையாதவர்கள் அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டத்தை தவறவிட்டுள்ளனர்.
புனர்வாழ்வுத் திட்டத்தில் இருந்து தப்பியவர்களில் அனந்தியும் அடங்குகிறார். அவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும்.
ஒருவேளை அனந்தி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், அவர் அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்திருக்கமாட்டார்.
அனந்தியை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைப்பதால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஆனால், அனந்தியை புனர்வாழ்வுக்கு உட்படுத்தாவிட்டால், போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை சீரழிக்கும் அவரது நடவடிக்கைகள் தொடரும் என்று அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர், வடக்கு மாகாணசபை உறுப்பினராப் பதவியேற்ற பின்னர், கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அண்மையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப், அனந்தி சசிதரனை சந்தித்து காணாமற்போனவர்களின் நிலை மற்றும் இறுதிப்போர் குறித்த விபரங்களை கேட்டறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னைக் கைது செய்தால் பின்விளைவுகளையே ஏற்படுத்தும்! அனந்தி
என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் இலங்கை அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும், அனைத்துலக அளவில் இலங்கை அரசாங்கத்துக்கு பின்விளைவுகளையே ஏற்படுத்தும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தம்மைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் இலங்கை அரசாங்கத்தின் எந்த முயற்சியையும் தாம் எதிர்த்துப் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயற்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்புவது குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக, உள்ளூர் ஊடகங்களுக்கு அனந்தி சசிதரன் தெரிவித்ததாக, பிரிஐ நிறுவனம் தகவல் வெளியிடுகையில்,
என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் இலங்கை அரசின் எந்த நடவடிக்கையும், அனைத்துலக அளவில் இலங்கைக்கு பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.
நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருக்கவில்லை.
ஆனால், எனது கணவனுக்கும், போரில் காணாமற்போன ஏனையவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ளதாக பிரிஐ வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிட்டுள்ளது

ad

ad