ஞாயிறு, டிசம்பர் 28, 2014

முஸ்லிம் காங்கிரசின் உத்தியோகபூர்வ தீர்மானம் நாளை அறிவிப்பு


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாளை காலை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆராய்வதற்காக இன்று மாலை கூடிக்கலைந்த முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீட கூட்டத்தில் எதுவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
மாறாக நாளை காலை பத்து மணிக்குள் இது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை பெற்றுக் கொள்வது தொடர்பில் பஷீர் சேகு தாவூத் மற்றும் ஹரீஸ் ஆகியோரை அரசாங்க தரப்பு பூரணமாக நம்பியுள்ளது.
இதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கவும், தேவையான ஆதரவை ஏற்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு அரசாங்கத்தின் விசேட அனுசரணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பெரும்பாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் அறிவிக்கலாம் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.