புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2014

மரணத்தை வென்றவர்/வைரமுத்து

பாலன் அய்யா அவர்களின் மறைவு குறித்து நான் என்ன சொல்லி எழுத? 
உலகப் புகழ்பெற்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களின் தனிப்பெரும் புதல்வர்
தவறிவிட்டார் என்பேனா?
ஒரு மூத்த பத்திரிகையாளர் தன் மூச்சை நிறுத்திக்கொண்டார் என்பேனா?
ஒரு விஞ்ஞான விவசாயி கடைசியில் மண்ணைப் பிரிந்துவிட்டார் என்று புலம்புவேனா?
பறவைகளின் காதலரை மரண வானம் அழைத்துக்கொண்டுவிட்டது என்று உருகுவேனா?
'உன் கண்ணில் நீர் வழிந்தால்’, 'பேசும் பொற்சித்திரமே’ போன்ற நாவல்களின் படைப்பாளியைப் பறிகொடுத்துவிட்டோம் என்று வருந்துவேனா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 'சிரித்து வாழவேண்டும்’, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'மோட்டார் சுந்தரம்பிள்ளை’ படங்களின் இயக்குநர் மறைந்தாரே என்று இரங்குவேனா?
கலை,  எழுத்து,  பத்திரிகை, விவசாயம் என்று பல்துறையிலும் பங்களிப்புச் செய்த ஒரு முழு மனிதர் முடிந்துபோனார் என்று கண்கள் கசிவேனா?
ஒரு நூலகம் இறந்துவிட்டது என்று நொடிந்துபோவேனா?
நான் பாசமும் மதிப்பும் வைத்திருந்த என் மீது பேரன்புகொண்டிருந்த தந்தை போன்ற ஓர் உறவு முடிந்துவிட்டது என்று உடைந்துபோவேனா?
முதல்முறை பார்த்தபோது, என்னை நிறத்தால் கவர்ந்தார் அந்த எலுமிச்சை மனிதர். சலவைக்குப் போய் வந்த தங்கம் அவர் நிறம். கண்களைப் பார்த்து தீட்சண்யமாகப் பேசும் தெளிந்த பேச்சு.
'தண்ணீர் தேசம்’ எழுதுவதற்கு நான் கடலுக்குள் சென்று கொஞ்சம் வசித்து வரவேண்டும் என்ற என் ஆசையை ஏற்று, அவர் செலவில் என்னை படகு ஏற்றி கடலுக்குள் அனுப்பிவைத்தார். 'தண்ணீர் தேசம்’ வடிவம் பெற்றதற்கு அவர் கொடுத்த உற்சாகமும் ஒரு காரணம்.
என் எழுத்தில் ஏதேனும் ஐயம் வந்தால், தொலைபேசியில் அழைத்து என்னையே கேட்பார். என்னைக் கேட்காமல் ஓர் எழுத்தையும் அவர் திருத்தியதில்லை.
அவர் மிகவும் கண்டிப்பானவர்;  கட்டுப்பாடு மிக்கவர்; பிடிவாதக்காரர் என்றெல்லாம் அவரவர் அனுபவங்களைப் பலபேர் சொல்லுவது உண்டு. ஆனால் அவர் எவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
'கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலின் ஓர் அத்தியாயம் அச்சுக்குப் போவதற்கு முன் அவர் பார்வைக்குப் போனது. என்னைத் தொலைபேசியில் அழைத்தார். 'உங்கள் எழுத்தில் ஒரு வரியைக்கூடத் தொடுவதற்கு யோசிக்கிறவன் நான். ஆனால் இந்த அத்தியாயத்தில் ஒரு பத்தியையே எடுத்துவிடலாம் என்று தோன்றுகிறது. உங்கள் சம்மதம் வேண்டும்’ என்றார்.
நான் துடித்துப்போய் 'ஏன், எதற்கு?’ என்றேன்.
'கிணறு வெட்டப்போகும் பேயத்தேவர், பாறைகளை வெடிவைத்து உடைக்கிறார் என்று எழுதவந்த இடத்தில், வெடிமருந்து எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை மிக விவரமாக எழுதியிருக்கிறீர்கள். தயாரிக்கிற முறையில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால், தயாரிக்கிற முறையை வாசகனுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டுமா? சின்னச்சின்ன வன்முறைகள் பெருகிவருகிற காலகட்டத்தில், இது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடாதா? அதனால் அந்தப் பத்தியைத் தவிர்த்துவிடலாமா என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்றார்.
எழுத்தில் ஒரு பத்தியை இழக்கிறோம் என்பது வருத்தம்தான். ஆனால் அவர் சொன்ன காரணத்தின் சமூக அக்கறை எனக்குப் பிடித்துப்போனது. அதில் இருந்த மனிதாபிமானம் என்னை மறுத்துப் பேசவிடவில்லை. 'உடன்படுகிறேன். நீக்கிவிடுங்கள்’ என்று சம்மதித்தேன். அந்தப் பத்தி தொடராக வந்தபோது விகடனிலும் அது இடம்பெறவில்லை. நான் தயாரித்து வெளியிட்ட நூலிலும் அது இடம்பெறவில்லை. அது அவர் மீதும் சமூகத்தின் மீதும் நான் வைத்திருக்கும் மரியாதை.
'என் பறவைப் பண்ணைக்கு நீங்கள் வரவேண்டும். காலைச் சிற்றுண்டி என்னோடு. உங்களுக்கு உப்புமாவும் ஆம்லெட்டும் கொடுப்பேன்’ என்றார். ஏதோ காட்டுப் பறவைகளைக் கூட்டில் அடைத்துவைத்திருப்பார் என்று சென்று பார்த்தால், தெற்கு ஆசியாவிலேயே பெரிய பறவைப் பண்ணை அது என்ற உண்மை பிறகு விளங்கியது. இவர் பேசும் பாஷை மட்டும் பறவைகளுக்கெல்லாம் விளங்குகிறது. பறவைகள் பேசும் மொழியெல்லாம் அவருக்கு மட்டுமே புரிகிறது. அந்தோ! பறவைகளின் அரசர் மறைந்துவிட்டார். மனிதர்களைக்கூடத் தேற்றிவிட முடியும். அந்தப் பறவைகளை இனி யார் தேற்றுவார்களோ?
விவசாயத்தில் நவீனம் செய்து படப்பைப் பண்ணையையே ஓர் இலவச வேளாண்மைக் கல்லூரியாக விளங்கச்செய்த விஞ்ஞான விவசாயி அவர்.
'ஜூனியர் விகடன்’ மூலம் புலனாய்வுப் பத்திரிகை என்ற புதிய தளத்தைத் தொடங்கிவைத்தவரும் அவர்தான்; தூக்கி நிறுத்தியவரும் அவர்தான்.
'உன் பெயர் ஆனந்த விகடனில் வருமாறு நடந்துகொள்; ஜூனியர் விகடனில் வருமாறு நடந்துகொள்ளாதே!’ என்ற நவீன அறநெறிக்குத் தோற்றுவாய் செய்தவர் அவர்தான்.
படைப்பாளிகளில் ஒரு தலைமுறையை, பத்திரிகைகளில் ஒரு தலைமுறையை, பத்திரிகையாளர்களில் ஒரு தலைமுறையை என்று மூன்று தலைமுறைகளை உருவாக்கிய பெருந்தடம் அவர் பதித்தது.
அரசியல்,  கலை,  அறிவியல்,  ஆன்மிகம்,  தனிமனித ஆளுமை என்று எந்தப் பொருண்மை குறித்தும் அவரோடு ஆழமாக விவாதிக்கலாம். எந்தப் பொருள் குறித்தும் தெளிவான ஒரு முடிவைத் தீர்க்கமாக யோசித்தேவைத்திருப்பார்.
பத்திரிகை நிர்வாகத்துக்கு வரும் வரைக்கும் தமிழே படிக்கவில்லை என்று என்னிடம் சொன்ன அவர், அதன் பிறகு தமிழை ஆழக் கற்று எழுத்தாளர்களின் படைப்புகளில் இலக்கணப் பிழை திருத்தும் அளவுக்கு உயர்ந்து நின்றார்.
அவர் குரல் மெலிந்துபோன பிறகும்கூட எப்போதாவது என்னிடம் அவர் பேசிக்கொண்டேயிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருநாள் என்னை அழைத்த அவர், 'என் மகளின் திருமண அழைப்பிதழ் தர கலைஞரிடம்  நேரம் பெற்றுத்தர முடியுமா?’ என்றார். உடனே கலைஞர் அவர்களோடு தொடர்புகொண்டு மறுநாள் காலை அவர் சந்திப்பதற்கு நேரம் பெற்றுக்கொடுத்தேன்.  'மிக்க நன்றி; திருமணத்துக்கு நீங்களும் வரவேண்டும்’ என்றார். 'என் இரண்டு மகன்களின் திருமணங்களுக்கும் வந்து வாழ்த்தியவர் நீங்கள். தங்கள் வீட்டு விசேஷத்துக்கு வருவது என் கடமை அல்லவா. கலைஞர் உங்கள் மீது பேரன்புகொண்டவர். அவரை அழைத்துக்கொண்டு, அவரோடு நானும் வந்துவிடுவேன்’ என்றேன்.
அதுபோலவே நிகழ்ந்தது. கலைஞரைக் கண்டதும் வரவேற்க வந்த அவரின் முகத்தில் அடித்த புன்னகை வெளிச்சம், இன்னும் என் கண்களைவிட்டுக் கலையவில்லை. வரவேற்றபோது கலைஞரோடு இணைந்து வந்தவர், வழியனுப்ப வந்தபோது என் கரத்தைப் பற்றிக்கொண்டே வாகனம் வரைக்கும் வந்தார். அவரை வணங்கி விடைகொண்டு கலைஞரோடு காரில் திரும்பிவிட்டேன். அதுதான் அவரை நான் கடைசியாகக் கண்குளிரக் கண்டது.
எல்லா மனிதர்களையும் மரணம் வெல்கிறது. சில மனிதர்கள்தாம் மரணத்தை வெல்கிறார்கள். உடல்தானம் செய்ததன் மூலம் மரணம் தாண்டியும் அவர் உடல் வாழ்கிறது. மரணத்துக்குப் பிறகும் யார் செயல்களில் வாழ்கிறார்களோ, யார் மரிக்காதவர்களின் மனங்களில் வாழ்கிறார்களோ அவர்களே மரணத்தை வென்றவர்கள்.
பாலன் அய்யா, மரணத்தை வென்றவர்!

ad

ad