புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


கிழக்கு மாகாண சபைக்கு அண்மையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேற்றிரவு சென்ற சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர்.  

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொழும்பிலிருந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்திருக்கிறோம் என கூறிக்கொண்டு சிலர் சென்றுள்ளனர்.

சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பேசிய இவர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்பதை தான் அவதானிக்க முடிந்ததாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினராக அண்மையில் தெரிவு செய்யப்பட்டவருமான கோவிந்தன் கருணாகரம் ( ஜனா )  தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்திலிருந்து தாங்கள் வந்திருக்கிறோம் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள் கிழக்கு மாகாணசபையில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அப்படி ஆதரவளித்தால் 5கோடி ரூபா பணம், வாகனம், உட்பட பல சலுகைகளை தருவதாக கூறினர். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் நீங்கள் பல நெருக்கடிகளை சந்திப்பீர்கள் என அச்சுறுத்தும் பாணியில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் நீங்கள் கூறும் பிரதேசத்திற்குரிய அனைத்து நிதியினையும் உங்கள் ஊடாக தருவோம். வசதியாக இருக்கலாம் என்றெல்லாம் கூறியுள்ளனர்.  வந்தவர்களில் சிலர் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களாவர்.
நாம் சலுகைகளுக்கு பின்னால் செல்பவர்கள் அல்ல. இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே நாம் தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். தனித்தனியாக எங்களிடம் பேசுவதை விடுத்து ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்து பேசி இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வையுங்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தெரிவு செய்யப்பட்ட எவரும் இந்த சலுகைகளை கண்டு மயங்கி வரக் கூடியவர்கள் அல்ல. இதை உங்களை அனுப்பியவர்களிடம் கூறுங்கள் என தான் தெளிவாக கூறியதாக கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பிரசன்னாவின் வீட்டிற்கு இவர்கள் வந்திருப்பதை அறிந்த தான் அங்கு சென்று அவர்களுக்கு இதை கூறியதாக கருணாகரம் ( ஜனா) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை, இந்திரகுமார் பிரசன்னா, நடராசா, திருகோணமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் ஆகியோரின் வீடுகளுக்கு இவர்கள் சென்றுள்ளனர்


ad

ad