புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


நடைபெற்று முடிந்திருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்திருக்கும் 4 ஆசனங்கள் தொடர்பிலும், முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதிலும் தற்போது பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்களிப்புத் தினமான செப்டம்பர் 08ம் திகதி மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரி ஆகிய இரண்டு வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான முகவர்களும், அதிகாரிகளும், போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் நிறைந்து காணப்பட்டனர்.

எல்லோர் மத்தியிலும் இம்மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் என்ன என்ற கேள்வி எழுந்திருந்தது.
எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்களிப்பு எத்தனை வீதம் என்பது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இருந்த போதிலும் காத்தான்குடியை மையப்படுத்தி இயங்கும் இணையதளமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அன்றைய வாக்களிப்பு வீதம் காலை 09:00 மணி வரை 10 வீதமாகவும், நண்பகல் 12:00 மணி வரை 20 வீதமாகவும், பிற்பகல் 01:00 மணி வரை 50 வீதமாகவும் இருந்ததாக உத்தியோகபூர்வமற்ற செய்திகளை வெளியிட்டிருந்தது.
இம்மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் எத்தனை என்பதை பொறுப்பு வாய்ந்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்களோ அல்லது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உதவித் தேர்தல் ஆணையாளர் அஸங்கா ரத்நாக்கா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் போன்றவர்களோ ஏன் அன்றைய தினம் வாக்களிப்பு முடிவுற்ற பி.ப. 04:00 மணி தொடக்கம் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இரவு 08.00 மணி வரையான 4 மணித்தியால காலப்பகுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை? என்ற கேள்வி அங்கு குழுமியிருந்தோர் மத்தியில் எழுந்தது நியாயமானதேயாகும்.
இதிலிருந்து இந்தத் தேர்தல் முடிவில் ஏதோவொரு பாரிய தில்லுமுல்லு இடம்பெறப் போகின்றதென்கிற எதிர்பார்ப்பு பலரிடம் காணப்பட்டது.
இவ்வாக்கெண்ணும் நிலையங்களில் அமைந்திருந்த வாக்கெண்ணும் நிலையங்களில் இரவு 2:00 மணிக்குள்ளாக முதலாம், இரண்டாம் கட்ட வாக்கெண்ணும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் பெற்றிருந்த முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் வாக்கெண்ணும் நிலையங்களில் சமூகமளித்திருந்த முகவர்களின் தகவல்களின்படி வெளியில் கசிந்திருந்தன.
இதனடிப்படையில் த.தே. கூட்டமைப்புக்கு 6 ஆசனங்களும், ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு மூன்று ஆசனங்களும், ஸ்ரீ.ல.மு. காங்கிரஸுக்கு ஒரு ஆசனமும், எஞ்சிய மீதித் தொகையில் கிடைக்கும் இறுதி ஆசனம் சுயேட்சைக்குழு – 08க்கும் கிடைப்பதற்கான சாத்தியம் நிலவுவதாகவும் அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும், அரச புலனாய்வுப் பிரிவினர் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டன.
இவ்வாறுதான் அவ்வேளையில் ஆசனப் பங்கீட்டு நிலைமைகள் காணப்படுவதாக சுயேட்சைக்குழு 08ன் தலைவர் பொறியியாளர் எம்.எம். அப்துர் ரஹ்மானை நேரில் சந்தித்த ஸ்ரீ.ல.மு.கா.வின் சார்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் ஐ.ம.சு. கூட்டமைப்பின் சார்பிலான வேட்பாளர்களுக்குள் 4ம் இடத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் அவரிடம் உறுதியாகத் தெரிவித்திருந்ததோடு மீதி வாக்குகளின் அடிப்படையில் இறுதி ஆசனம் சுயேட்சைக்குழு – 08க்கு கிடைக்கும் சாத்தியம் உள்ளதாகக் கூறியிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
அதிகாலை 4:30 மணி வரையும் ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பில் இம்மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.எஸ். சுபைர், பொறியியலாளர் எம்.எப்.எம். ஷிப்லி, ஏறாவூர் நகரபிதா அலிசாஹிர் மௌலானா ஆகியோரே விருப்பு வாக்குத் தர வரிசையில் முன்னிலையில் இருக்கும் நிலவரம் காணப்பட்டது.
எனினும் அந்நேரம் வரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் வாக்களிப்பு வீதமோ அல்லது தேர்தல் முடிவுகளோ உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இரவு 10:00 மணிக்குள்ளாக வெளியிடப்படும் என முன்னறிவிப்புச் செய்யப்பட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகளும் கூட மறுதினம் 09ம் திகதி அதிகாலை 02:30 மணி பிந்தியே அறிவிக்கப்பட்டது.
அந்த தபால் மூல வாக்களிப்பு முடிவின்படியும் இம்மாவட்டத்தில் வாக்களித்த 3238 அரச பணியாளர்கள் த.தே.கூட்டமைப்புக்கே வாக்களித்திருந்தனர். 1428 அரச பணியாளர்கள் மாத்திரமே அரசுக்கு ஆதரவாக ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, பட்டிருப்பு மற்றும் கல்குடா தொகுதிகளின் சில வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகள் உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகபூர்வமற்ற முறையிலும் வெளியாகியிருந்தன. அவற்றில் சிலவற்றை கீழே அவதானிப்பதோடு இவ்வாறு வெளியான முடிவுகளில் த.தே.கூட்டமைப்புக்கும் ஐ.ம.சு. கூட்டணிக்கும் இடையில் காணப்பட்ட வாக்களிப்பு நிலைமையையும் நாம் சற்று அவதானிக்கலாம்.
வாக்கெண்ணும் நிலைய இல: 12:- TNA : 3527 – UPFA: 1730
வாக்கெண்ணும் நிலைய இல: 34:- TNA : 3740 – UPFA: 1717
வாக்கெண்ணும் நிலைய இல: 38:- TNA : 3832 – UPFA : 929
வாக்கெண்ணும் நிலைய இல: 26:- TNA : 4098 – UPFA: 1209
வாக்கெண்ணும் நிலைய இல: 11:- TNA : 3715 – UPFA: 1819
வாக்கெண்ணும் நிலைய இல: 05:- TNA : 3180 – UPFA : 1601
வாக்கெண்ணும் நிலைய இல: 22:- TNA : 1151 – UPFA: 2267
வாக்கெண்ணும் நிலைய இல: 12:- TNA : 4065 – UPFA: 1449
வாக்கெண்ணும் நிலைய இல: 29:- TNA : 4396 – UPFA: 1125
வாக்கெண்ணும் நிலைய இல: 31:- TNA : 3543 – :UPFA 2309
வாக்கெண்ணும் நிலைய இல: 20:- TNA : 4567 – UPFA: 970
வாக்கெண்ணும் நிலைய இல: 15:- TNA : 4048 – UPFA: 1377
இவ்வாறு பெரும்பாலான வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து வெளியான முடிவுகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்புக்கு அதிகளவான தமிழ் மக்கள் வாக்களித்திருந்ததையும், ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு குறைவான தமிழ் மக்கள் வாக்களித்திருந்ததையும் அவதானித்த நிலையில் அங்கிருந்தவர்கள், அருகிலிருந்த மட்டக்களப்பு நகரப் பள்ளிவாசலில் சுபஹ் தொழுகைக்கான ‘அதான்’ சொல்லப்பட்டது.
அந்நேரத்தில் வின்சன்ட் மகளிர் கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்திற்கு வந்த ‘பிக்அப்’ வாகனமொன்றில் இருந்து இறங்கிச் சென்ற வாகனச் சாரதியொருவரால் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளிக்கப்பட்ட வாக்கெண்ணும் முடிவு அறிக்கையொன்றின்படி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதன்படி த.தே. கூட்டமைப்பு 104,682 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும், ஐ.ம.சு. முன்னணி 64,190 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், ஸ்ரீல. மு.காங்கிரஸ் 23,083 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட அறிவிப்பானது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் கல்குடா தேர்தல் தொகுதியில் மாத்திரமே ஐ.ம.சு.முன்னணி 22,965 என்ற அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தது.
பட்டிருப்பு தொகுதியில் 8,603 வாக்குகளையும், மட்டக்களப்பு தொகுதியில் 31,194 வாக்குகளையும் இம்முன்னணி பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் 64,190 வாக்குகளை இம்மாவட்டத்தில் பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஐ.ம.சு. முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 22,338 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவதாகவும், அமீர் அலி 21,271 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாவதாகவும், எம்.எப்.எம். ஷிப்லி 20,407 விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாவதாகவும், எம்.எஸ்.எம். சுபைர் 19,303 விருப்பு வாக்குளைப் பெற்று நான்காவதாகவும் வந்துள்ள தர வரிசையின்படி அவர்கள் நால்வரும் ஐ.ம.சு. முன்னணியின் மாகாண சபைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
அதிகாலை 4:00 மணி வரை நாலாயிரம் விருப்பு வாக்குகளையும் பெறாத நிலையில் பின்தள்ளப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான், இறுதியாக ‘பிக்அப்’ வாகனத்தில் வந்த சாரதி தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்த வாக்கெண்ணும் நிலைய முடிவறிக்கையின் பின்னர் அதிகாலை 06:00 மணியளவில் வெளியிடப்பட்ட இம்மாவட்டத்திற்கான இறுதியான தேர்தல் முடிவின்போது முதலிடத்திற்கு ஏறியிருந்ததுடன், அதுவரை 3 ஆசனங்களையே பெறும் என்ற நிலையிலிருந்த ஐ.ம.சு. முன்னணிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டதானது அதுவரை பலருக்கும் இருந்து வந்த பலத்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
ஐ.ம.சு. முன்னணிக்கு கல்குடா, மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் ஏறத்தாள 25,000த்திற்கும் அதிகமான வாக்குகளை வழங்கியிருப்பார்கள் என்பதை அமீர் அலிக்கு கிடைத்துள்ள அதிகூடிய 21,271 விருப்பு வாக்குகளைக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஏனெனில் ‘வெற்றிலை’ச் சின்னத்திற்கு வாக்களித்த கல்குடா மற்றும் மட்டக்களப்புத் தொகுதி முஸ்லிம்கள் தமது வாக்குச் சீட்டுக்களில் 1,2,3 என்ற மூன்று விருப்பு இலக்கங்களுக்கும், 2,3,4 என்ற மூன்று விருப்பு இலக்கங்களுக்குமாகவே இத்தேர்தலில் பரவலாக வாக்களித்திருந்தனர் என்பதை வாக்கெண்ணும் நிலைய முகவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இவ்வாறு இம்மாவட்ட முஸ்லிம்கள் 25,000 வாக்குகளை தமது ஐ.ம.சு. முன்னணியில் போட்டியிட்ட நான்கு முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமாக தமது விருப்பு வாக்குகளை அளித்து உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஐ.ம.சு. முன்னணிக்கு இம்மாவட்டத்தில் கிடைத்ததாக அறிவிக்கப்பட்ட 64,190 மொத்த வாக்குகளில் எஞ்சிய சுமார் 39,000த்திற்கும் அதிகமான வாக்குகளை தமிழ் மக்களே அளித்திருக்க வேண்டும் எனக் கருதினாலும் அங்கேயும் பெரும் குழப்பம் பலருக்கு ஏற்படுகின்றது.
ஏனெனில் ‘வெற்றிலை’ச் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு 22,338 விருப்பு வாக்குகளை வழங்கிய தமிழ் மக்கள், அவரது கட்சியின் பொதுச் செயலாளரான அதே கட்சியில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தனுக்கும் அதேயளவு விருப்புவாக்குகளை ஏன் அளிக்கவில்லை? என்ற கேள்வியை பலரும் வினவினர்.
இக்கேள்வி மிகவும் நியாயமான ஒரு கேள்வியாகவே அங்கிருந்த பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த மாகாண சபைக் காலத்தில் ஒரு உறுப்பினராகவும், முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் வலது கையாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செலாளராகவும் இருந்து மண்முனைப்பற்று பிரதேச தமிழ் மக்களுக்கு அதிகூடிய அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கிச் செயற்பட்ட பூ. பிரசாந்தன், இத்தேர்தலுக்கான பிரச்சாரக் காலத்திலும் முதலமைச்சரின் வெற்றிக்காகவும், தனது வெற்றிக்காகவும் மட்டக்களப்பு மாவட்டமெங்கும் கடுமையாகப் பிரச்சாரம் செய்தும் வந்தவர்.
அப்படிப்பட்ட முக்கியமான ஒருவருக்கு முதலமைச்சர் பிள்ளையானுக்கு 22,338 விருப்பு வாக்குகளை தமது வாக்குச் சீட்டுக்களில் அடையாளப்படுத்திய தமிழ் மக்கள் ஏன் அதேயளவில் அல்லது அதற்குச் சற்று குறைவாக என்றாலும் வாக்களித்திருக்கவில்லை? என்று அங்கு கூடியிருந்தோர் கேள்விகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மொத்தத்தில் முன்னாள் முதலமைச்சரின் தோல்வியை நிச்சயமாக்கிய வாக்கெண்ணும் நிலைய முகவர்களின் கூற்றுக்கு மத்தியில் தேர்தல் ஆணையாளர் ‘சுபஹு’க்குப் பிந்தி அறிவித்திருக்கும் ஐ.ம.சு. முன்னணிக்கு 4 ஆசனங்கள் என்ற அறிவிப்பும், பிள்ளையான் 22,338 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்தைப் பிடித்துள்ள ‘காதை’யும் ‘ஆசியாவின் ஆச்சரிய’மாகவே அரசியல் அவதானிகள் பலராலும் பார்க்கப்படுகின்றது.
‘சுபஹு’க்குப் பின்னரான இந்த இறுதி நேர உத்தியோகபூர்வமான அறிவிப்பானது இரண்டு விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒன்று:- முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் இல்லாமல் அரசாங்கத்தினால் கிழக்கில் ஆட்சியை ஏற்படுத்த முடியாதென்பது.
இரண்டு:- புதிய முஸ்லிம் மாற்று அரசியல் சக்தியாக கிழக்கில் பரிணாமம் பெற்று வரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் (சுயேட்சைக்குழு இல: 08) குரலை கிழக்கு மாகாண சபை ஊடாக சர்வதேசத்தின் காதுகளில் ஒலிக்கச் செய்து விடக்கூடாதென்பது.

ad

ad