புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

மக்கள் திலகம் மறைந்தபோது கவிஞர் வாலி அவர்கள் "ஆனந்த விகடன்" (3/1/1988) இதழில் எழுதிய அஞ்சலிக் கவிதை

நான் யாரைப் பாடுவேன்?
பொன்மனச் செம்மலே! என் பொழுது புலரக் கூவிய சேவலே!
உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில் தான் - உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது!
என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதை ஆயிற்று!
இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ!
என்னை வறுமைக் கடல்மீட்டு.., வாழ்க்கைக்கரை சேர்த்த படகோட்டியே!
கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!
நான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகுதான் நாடு பாடியது - ஏழை எளியவர்களின் வீடு பாடியது!
இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன் - இன்று
இல்லையென்று போனான் - இனி நான் யாரைப் பாடுவேன்?
புரட்சித் தலைவனே! நீ இருந்தபோது - உன் அடக்கத்தைப் பார்த்து நாடு தொழுதது..,
இன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து - நாடு அழுதது!
வைகை யாறும் பொன்னி யாறும் வற்றிப் போகலாம்;


நீ வற்றாத வரலாறல்லவா?
கலைத்தாயின் தலைமகனே! கோட்டையில் கொலுவிருந்தால் மட்டும்
நீ - 'சி.எம்' அல்ல..,
கோடம்பாக்கத்திலும் கர்ஜித்துக்கொண்டிருந்த சீயம்தான்!
இன்று படத்தை நிரப்பப் பலர் இருக்கிறார்கள்!
உன் இடத்தை நிரப்பத்தான் எவருமே இல்லை!
நான் மனிதர்களில் நடிகர்களைப் பார்த்திருக்கிறேன்..,
ஆனால், நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீதான்!
அதனால்தான்.. நீ நோயுற்றபோது - தங்களது வாழ்நாட்களின் மிச்சத்தை
உன் கணக்கில் வரவு வைத்துவிட்டு - எத்துணையோபேர்
தங்கள் கணக்கை முடித்துக்கொண்டு தீக்குளித்தார்கள்!
என் இதய தெய்வமே!
உன் இறப்பில் நான் இரண்டாவது முறையாக
என் தாயை இழந்தேன்!
இனி நான் யாரைப் பாடுவேன்?

ad

ad