புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

காவியக் கவிஞர் வாலி (1931 - 2013) முற்றுப்புள்ளி அல்ல காற்புள்ளி! 
 

‘ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்’
-இது 1950-களில் கவிஞர் வாலி எழுதி, டி.எம்.எஸ். அவர்கள் மனமுருகப் பாடிய முருகப்பெருமானைப் பற்றிய பாடல்.


வாலிக்கு வந்த தீராத வினையையெல்லாம் தீர்த்து, வாராத நிலைக்கும் அவரை வரவைத்த முருகப் பெருமானின் திருவடியை 18-07-2013 அன்று சரணடைந்துவிட்டார் வாலி.
1931-ல் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்த ரங்கராஜன், வாலியாகி ‘அழகர்மலைக் கள்ள’னில் முதல் பாட்டெழுதினாலும் அந்தப் படம் வெளிவரவில்லை. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் வெளிவந்த ‘கற்பகம்’தான் வாலிக்கு வெளிச்சம் வழங்கிய படம். அந்தப் படத்தின் ‘அத்தைமடி மெத்தையடி’ முதற் கொண்டு அத்தனை பாடல்களும் அற்புதப் பாடல்கள். கற்பகத்துக்குப் பின் வாலிக்கு வாய்த்ததெல்லாம் கற்பக விருட்சம் தான்.
முத்துராமனுக்கு, ஜெமினிகணேசனுக்கு, ஜெய்சங்கருக்கு, ரவிச்சந்திரனுக்கு, நாகேசுக்கு என பாட்டுக்கட்டி வந்த வாலியின் புகழ்க் கொடி, எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்கு எழுத ஆரம்பித்ததும் மேலும் பட்டொளிவீசிப் பறக்க ஆரம்பித்தது. அதன் பின் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என நீ.........ண்ட அவரது திரைப்பாடல் இன்றைய தனுஷ் வரை தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது.
அதே போல டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனில் தொடங்கி இப்போதைய ஷங்கர் வரை அனைத்து இயக்குனர்களுடனும் ஐக்கியமானவர் வாலி. திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இப்படி புகழ் பெற்ற இசை அமைப்பாளர்களுடன் மட்டுமல்ல, புகழ் பெறும் லட்சியத்தோடு வந்த புதுமுக இசை அமைப்பாளர்களுடனும் பேதம் பார்க்காமல் கீதம் வளர்த்தவர் வாலி.
ஐயராத்துப் பெண் ஒருத்தி, தாழ்த்தப்பட்டவள் என சர்டிபிகேட் வாங்கி கலெக்டரும் ஆகிவிடும் கதையுடன் வந்த படம், ‘ஒரே ஒரு கிராமத்திலே’. அந்தப் படத்திற்கு கதை-வசனம்-எழுதிய வாலியும்  கலெக்டராகும் கதாநாயகியாக நடித்த லட்சுமியும் தங்கள் வேலையைக் காட்டிவிட்டார்கள் என்று அப்போது பெரிய சர்ச்சை கிளம்பியது. அதே போல் ‘சமஞ்சது எப்படி’ என்ற பாட்டெழுதியும் சர்ச்சையில் சிக்கினாலும் ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு ரயிலே எழுதி இளைஞர்களின் மனசில் வாலிபக் கவிஞன் ஆனார் காவியக் கவிஞர் வாலி.
“அழகர்மலைக் கள்ளனில்  முதல் வாய்ப்பு வாங்கிக் கொடுத்து, எனக்கு விலாசம் தந்த விசால மனதுக்குச் சொந்தக்காரன் வி.கோபாலகிருஷ்ணன்“ என அந்தக் குணச்சித்திர நடிகரை இன்றும் நன்றி மறவாமல் தன் இதயத்தில் சித்திரமாய் பதிய வைத்திருக்கும் ஓங்கி உயர்ந்த குணசீலர் வாலி.
“மரணம் என்பது மனித வாக்கியத்தின் முற்றுப் புள்ளி தான். ஆனால், வெற்றுப் புள்ளிகளுக்குத்தான், அந்த முற்றுப் புள்ளி பொருந்தும். 
அரும்புள்ளி, பெரும்புள்ளி என்றெல்லாம் ஏத்துமளவு அரிய பெரிய சாதனைகள் ஆற்றியோர் விஷயத்தில் அது கரும்புள்ளியல்ல, காற்புள்ளி. ஆம் அவர்கள் இறந்தும் இருக்கிறார்கள். குரலால் தேன்வார்த்த பி.பி.ஸ்ரீனிவாசுக்கும் விரலால் தேன்வார்த்த (விஸ்வநாதன்) ராமமூர்த்திக்கும் இது பொருந்தும்“ என மனம் உருகி எழுதியிருந்தார் வாலி.

காவியக் கவிஞர் வாலி(பனு)க்கும் இது சத்தியமாய் பொருந்தும். 
-ஈ.பா.பரமேஷ்

ad

ad