புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

சென்னை : பிரபல திரைப்பட பாடலாசிரியர் வாலி, சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 14,ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்தார் வாலி. அவருக்கு நுரையீரல் தொற்று பிரச்னை இருந்ததை கண்டறிந்த டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். 

பிறகு அவர் உடல்நிலை மீண்டும் மோசமானதை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. தகவல் வெளியானதும் ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் மருத்துவமனை வளாகத்தில் சோகத்துடன் குவிந்தனர். பின்னர் அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம், இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. மறைந்த வாலிக்கு, பாலாஜி என்ற மகன் உள்ளார். வாலியின் மனைவி ரமணத்திலகம் ஏற்கனவே இறந்துவிட்டார். 

காவியக் கவிஞர் வாலி திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த டி.எஸ்.ரங்கராஜன், வாலியானது சினிமாவுக்காக. கவிஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட அவர், ஓவியரும் கூட. தமிழ்த் திரையுலகில் கண்ணதாசன் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தானும் நுழைந்து சிறப்பான பாடல்கள் எழுதி தன்னை நிலைநிறுத்தியவர் வாலி. எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ரஜினி,கமல், விஜய்,அஜீத், தனுஷ், சிம்பு என பல தலைமுறை நடிகர்களுக்கு பாட்டு எழுதிய பெருமை கொண்டவர் வாலி. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுதியுள்ளார். 1958ல் ‘அழகர்மலை கள்ளன்’ என்ற படத்தில் பாடல் எழுத தொடங்கிய வாலி, கடைசியாக வசந்தபாலன் இயக்கும் ‘காவியத் தலைவன்‘ என்ற படத்துக்காக எழுதியுள்ளார்.

வாலியை சினிமாவுக்கு பாட்டு எழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். அவருக்கு தபால் கார்டில் வாலி எழுதி அனுப்பிய ‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்’ என்ற பாடலுக்கு டி.எம்.சவுந்தரராஜன் இசையமைத்து பாடியது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்

2007,ல் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது. 1970ல் ‘எங்கள் தங்கம்’, 79ல் ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’, 89ல் ‘வருஷம் 16’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’, 90ல் ‘கேளடி கண்மணி’, 2008ல் ‘தசாவதாரம்’ படங்களில் பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றார். தவிர, தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். ஆனால், 73ல் ‘பாரத விலாஸ்’ படத்தில் அவர் எழுதிய ‘இந்திய நாடு என்வீடு’ என்ற பாடலுக்கு மத்திய அரசு வழங்கிய தேசிய விருதை வாங்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நூல்கள்

வாலி ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார். ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற சுயசரிதையை எழுதினார். ‘அவதார புருஷன்’, ‘பாண்டவர் பூமி’, ‘ராமாநுஜ காவியம்’, ‘கிருஷ்ண விஜயம்’, ‘கலைஞர் காவியம்’, ‘கிருஷ்ண பக்தன்’, ‘வாலிப வாலி’, ‘அம்மா’, ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘நிஜ கோவிந்தம்’ போன்ற நூல்கள் வரவேற்பு பெற்றவை. சிறுகதை, கவிதை, உரைநடை கவிதை என வாலி ஆயிரக்கணக்கான படைப்புகளை வழங்கியுள்ளார். ‘கலியுக கண்ணன்’, ‘காரோட்டி கண்ணன்’, ‘ஒரு செடியின் இரு மலர்கள்‘, ‘சிட்டுக்குருவி’, ‘ஒரே ஒரு கிராமத்தில்’ உட்பட 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 

66,ல் ‘மணி மகுடம்’ படப்பிடிப்பில் கலைஞர் கருணாநிதியை சந்தித்துப் பேசியது முதல், தனது இறுதிக்காலம் வரை அவரது நெருங்கிய நண்பராக இருந்தார் வாலி. அவரை ‘என்ன ஆண்டவனே’ என்று எம்.ஜி.ஆரும், ‘என்ன வாத்தியாரே’ என்று சிவாஜியும் அன்புடன் அழைப்பார்கள். வாலி வீட்டின் தோசையும், மிளகாய்ப் பொடியும் சினிமா வட்டாரத்தில் பிரபலம். எம்.ஜி.ஆர் உட்பட பல பாடலாசிரியர்கள் அதற்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பல முன்னணி ஹீரோக்களுக்கு ‘ஓப்பனிங் சாங்’ எழுத வைப்பது பல இயக்குனர்களின் சென்டிமென்ட். இன்றைக்கும் இளமையான பாடல் வரிகளை எழுதியதால் அவர் எப்போதும் ‘வாலிபக் கவிஞர்’ என்றே அழைக்கப்பட்டார். 

பாஸ்போர்ட் இல்லா கவிஞர்

பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசியிருந்தாலும், இதுவரை வாலி வெளிநாடு சென்றதில்லை. அவரை, ‘பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்’ என்று சொல்வார்கள். ‘இந்த சினிமா வாழ்க்கை, எம்.எஸ்.வி போட்ட பிச்சை’ என்று அடிக்கடி நன்றி மறவாமல் குறிப்பிடுவார் வாலி. ‘மன்னன்‘ படத்துக்காக வாலி எழுதிய, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது என்று பாராட்டி, திருச்சியிலுள்ள ஒரு கோவிலில் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சக்கப் போடு போடு ராஜா

சிவாஜிக்காக வாலி எழுதிய, ‘இதோ எந்தன் தெய்வம்‘, ‘கல்யாண பொண்ணு கடைபக்கம் போனா‘, ‘மகராஜா ஒரு மகராணி‘, ‘அப்பப்பா நான் அப்பனில்லடா‘, ‘சக்கப் போடு போடுராஜா‘, ‘மாதவி பொன்மயிலாள்’ உட்பட பல பாடல்கள் எப்போதும் இனிப்பவை. சமீபத்தில் வெளியான ‘ஒஸ்தி‘ படத்தில் அவர் எழுதிய, ‘கலாசலா கலசலா கல்லாசா கலசலா‘ பாடலும், ‘தடையறத் தாக்க‘ படத்தில் இடம்பெற்ற ‘பூந்தமல்லிதான் நான் புஷ்பவல்லிதான்‘ என்ற பாடலும் ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஆணையிட்டால்...

எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய பாடல்கள் புகழ்பெற்றவை. ‘நான் ஆணையிட்டால்...’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்’, ‘ராஜாவின் பார்வை ராணி யின்பக்கம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’, ‘தரை மேல் பிறக்க வைத்தான்’, ‘காற்று வாங்க போனேன்’, ‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’, ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ உட்பட அனைத்து பாடல்களுமே முத்துகள்.

15 ஆயிரம் பாடல்கள் 

காதல், நகைச்சுவை, வாழ்க்கை தத்துவம், கலகலப்பு, காதல் தோல்வி, பக்தி என பல்வேறு நிலைகளில் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் வாலி. கிட்டதட்ட அரைநூற்றாண்டு காலமாக பாடல் எழுதிய வாலி, சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில், தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளால் ஊருக்குத் திரும்ப முயன்றபோது, ‘மயக்கமா, கலக்கமா‘ என்ற பாடலைக் கேட்டு, நம்பிக்கையோடு வீடு திரும்பினார். இயக்குனர் கே.பாலசந்தரும், கமலும் கேட்டுக்கொண்டதற்காக ‘பொய்க்கால் குதிரை‘, ‘சத்யா‘, ‘பார்த்தாலே பரவசம்‘, ‘ஹே ராம்‘ ஆகிய படங்களில் நடித்த வாலி, மாருதி ராவுடன் இணைந்து ‘வடை மாலை‘ என்ற படத்தை இயக்கினார்.
இதோ எந்தன் தெய்வம்‘, ‘கல்யாண பொண்ணு கடைபக்கம் போனா‘, ‘மகராஜா ஒரு மகராணி‘, ‘அப்பப்பா நான் அப்பனில்லடா‘, ‘சக்கப் போடு போடுராஜா‘, ‘மாதவி பொன்மயிலாள்’ 
‘கலாசலா கலசலா கல்லாசா கலசலா‘ ‘தடையறத் தாக்க‘ படத்தில் இடம்பெற்ற ‘பூந்தமல்லிதான் நான் புஷ்பவல்லிதான்‘ 
நான் ஆணையிட்டால்...’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்’, ‘ராஜாவின் பார்வை ராணி யின்பக்கம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’, ‘தரை மேல் பிறக்க வைத்தான்’, ‘காற்று வாங்க போனேன்’, ‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’, ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ 

ad

ad