புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

பெரு மதிப்புப் பெற்ற விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர்; ஆதரிக்குமாறு தமிழ்க் கூட்டமைப்பு வேண்டுகோள் 
வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரும் சமூகத்தின் பெருமதிப்பைப் பெற்றவருமான
சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறக்குவதற்கு தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.  மாகாண சபை வரலாற்றில் வடமாகாணத்திற்கு முதல் தடவையாக தனியாக இடம்பெறவுள்ள தேர்தலில் வட,கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் விக்னேஸ்வரனின் தெரிவை ஏகமனதாக அங்கீகரித்துள்ளன என்று யாழ். மாவட்ட கூட்டமைப்பு எம்.பி.யும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.  தமிழ்க் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு நேற்றுக்காலை பம்பலப்பிட்டியிலுள்ள அலுவலகத்தில் கூடி ஆராய்ந்து வடமாகாண சபைத் தேர்தலில் நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென ஒருமனதுடன் தீர்மானித்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை  முன்னணி சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பொதுச் செயலாளர் ஹென்றி மகேந்திரன், சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் தங்கையா ஆகியோர் பங்குபற்றினர்.  முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவை நியமிப்பதா? அல்லது முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமிப்பதா என கட்சிகள் மத்தியில் இழுபறி ஏற்பட்டிருந்த நிலையில் ஒருங்கிணைப்புக் குழு நான்கு தடவை கூடி ஆராய்ந்தும் முடிவு எட்டப்படாமலிருந்தது.  இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு கூடியபோது கட்சித் தலைமை எடுக்கும் முடிவை மறுக்காது ஏற்றுக்கொள்வோமென பங்காளிக் கட்சிகள் தெரிவித்ததாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்ததையடுத்து தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென கட்சி தீர்மானித்ததாக அறிவித்தார்.  இந்நிலையில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், கேம்பிரிஜ் டெரசிலுள்ள முன்னாள் நீதியரசரின் வீட்டுக்குச் சென்று போட்டியிடுமாறு சி.வி.விக்னேஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்தனர். அறிக்கை   வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; இலங்கை உயர் நீதிமன்றின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென ஏகமனதாக தீர்மானிகக்கப்பட்டுள்ளது. ஏனைய வேட்பாளர் நியமனம் தொடர்பாக உரிய வேளையில் தீர்மானிக்கப்படும். பொதுமக்களின் மதிப்பை பெற்றுள்ள விக்னேஸ்வரனை  மாகாண வாக்காளர்கள் முழுமனதுடன் ஆதரிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அத்துடன், தமிழ்க் கூட்டமைப்பால் நியமிக்கப்படும் ஏனைய வேட்பாளர்களையும் மனப்பூர்வமாக ஆதரிக்குமாறு கோருகிறோம்.   -

ad

ad