புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2013

மக்களின் எழுச்சிக்கும் விழிப்புக்கும் கலைஞர்கள் காத்திரமான பங்கினை ஆற்ற வேண்டும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சுதந்திர தமிழீழத்திற்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில், மக்களிடையே எழுச்சியினையும் விழிப்பினையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு, காத்திரமான பங்கினை கலைஞர்கள் ஆற்ற வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஈழவிடுதலைப் போராட்டம் புதியதொரு அக- புறச் சூழலை 2009ம் ஆண்டுக்கு பின்னர் எதிர்கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தினை வென்றடைவதற்கான வலுவானதொரு அரசியல் தளமாக புலம்பெயர் தமிழ்ச் சமூகம் உள்ள நிலையில் , அம்மக்களிடத்திலான போராட்ட எழுச்சிக்கும், அரசியல் விழிப்புக்கும் புலம்பெயர் ஈழத்துக் கலைஞர்களின் பங்கு மிகமுக்கியமானதென அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
தன் நடிப்பின்பால் புலம்பெயர் ஈழத்தவர் திரைவானின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் கலைஞர் பாஸ்கரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் பாரிசில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகமயப்படுத்தப்பட்ட இன்றைய உலக ஒழுங்கில் ஒவ்வொரு தேசிய இனங்களும் தன்னுடைய சமூக அரசியல் அடையாளங்களை தக்கவைப்பதற்கும், பேணிப்பாதுகாப்பதற்கும் போராடிக் கொண்டிருக்கின்றது.
நாடுகடந்த அரசியல் எனும் தற்கால புதிய உலக அசைவியக்கத்தில் நாடுகளைக் கடந்து வாழுகின்ற, அரசற்ற இனமாகவுள்ள ஈழத்தமிழினம், தனக்கான அரசினை அமைத்துக் கொள்வதற்கு, இந்த உலகசூழலுக்குள்ளேயே தனது போராட்டத்திற்கான மூலோபாயத்தினை வகுத்து நிற்கின்றது.
இம்மூலோபாயத்தினை வென்றடைவதற்கான தந்திரோபாயங்களில், புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் பிரதான பாத்திரம் வகிக்கின்றது. முறை-துறை சார்ரீதியில் தமிழ்சமூகத்தின் அனைத்து வளங்களையும் வலுப்படுத்துவதன் ஊடாக அனைத்துலக அரங்கில் தமிழர்களின் மென்வலுவினை நிறுவிக் கொள்ள முடியும்.
இம்மென்வலுவிற்கான துறைகளில் திரைத்துறையும் உள்ளதென்ற புரிதலின் அடிப்படையிலேயே புலம்பெயர் ஈழத்தவர்களினது திரைத்துறை சார் முயற்சிகளும் அமைய வேண்டும்.
இம்முயற்சிகளுக்கு புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் ஆதரவினை வழங்கவதோடு, நமக்கான தனித்துவ அடையாளர்களுடன் நட்சத்திரங்களை கொண்டாடுவதற்கும் , மகிழ்ச்சி கொள்வதற்கும் அனைவரும் முன்வரவேண்டும்.
இவ்வாறு தனதுரையினை வழங்கிய அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள், புலம்பெயர் ஈழத்தவர் திரைவானின் நம்பிக்கை நட்சத்திரமாக மதிப்பளிக்கப்பட்ட கலைஞர் பாஸ்கரன் அவர்கள் இருப்பதாக புகழாரம் சூட்டினார்.
எங்கள் சமூகத்துக்குள் இருந்து துளிர்விட்டுள்ள இவ்விதையினை எம் இனத்திற்கு நன்மை பகிரும்விருட்சமாக மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டெனவும் தெரிவித்தார்.

ad

ad