இந்தியாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்: 40 பேர் உடல் சிதறியது!
சிவன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள ரயிலை நிறுத்தி ஏறுவதற்காக தண்டவாளத்தில் நின்றிருந்த பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில்
40 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஆத்திரமடைந்த மக்கள் ரயில் டிரைவரை அடித்து உதைத்து, ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தனர். பீகார் மாநிலத்தில் கத்யானி ஸ்தன் என்ற இடத்தில் பிரபலமான சிவன் கோயில் உள்ளது.
நமக்கு ஆடி மாதம் போல வட மாநிலங்களில் சிரவண மாதம் புனிதமாக கருதப்படுகிறது. நேற்று சிரவண மாத கடைசி திங்கட்கிழமை என்பதால், சிவன் கோயிலுக்கு ரயிலில் செல்ல ஏராளமான பக்தர்கள் ஒரு பாசஞ்சர் ரயில் மூலம் தமராகாட் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
அந்த வழியாக செல்லும் சகர்சா , பாட்னா ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் மூலம் கத்யானி ஸ்தன் செல்ல திட்டமிட்டனர்.
ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் அந்த நிலையத்தில் வழக்கமாக நிற்காது. இது பக்தர்களுக்கும் தெரியும். கூட்டமாக நின்று கையசைத்தால் டிரைவர் நிறுத்துவார் என நம்பினார்கள்.
இது ஸ்டேஷன் ஊழியர்களுக்கு தெரியாதா, அல்லது ரயிலை பார்த்ததும் பக்தர்கள் பயந்து தண்டவாளத்தை விட்டு விலகி விடு வார்கள் என நம்பினார் களா என்பது தெரியவில்லை. ரயில் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, நிற்காமல் செல்லலாம் என்பதை தெரிவிக்கும் வகை யில் ஸ்டேஷன் ஊழியர்கள் பச்சைக்கொடியை ஆட்டினர்.
இதனால் 80 கி.மீ வேகத் தில் வந்த ரயிலின் வேகம் சற்றும் குறையவில்லை. ஆனால் அடுத்த சில விநாடிகளில் தண்டவாளத்தில் நிறைய பக்தர்கள் நின்றபடி ரயிலை நிறுத்துமாறு கையசைத்ததை டிரைவர் பார்த்தார். அதிர்ச்சி அடைந்தார்.
உடனே எமர்ஜென்சி பிரேக்கை இயக்கினார். ஆனால் படுவேகமாக வந்து கொண்டிருந்த ரயில் உடனே நிற்கவில்லை. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியபடி தாண்டிச் சென்றது. வரிசையாக 35 பேர் உடல் சிதறி இறந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்த்தபின் 5 பேர் இறந்ததனர்.
தண்டவாளத்தின் இரு புறமும் உடல்கள் சிதறிக் கிடந்தன. காயம் அடைந்தவர்கள் மரண ஓலமிட்டனர். இந்த காட்சியை ரயில் நிலையத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.
உள்ளூர் மக்களும் ஓடிவந்தனர். சிறிது தூரம் ஓடி நின்றது ரயில். அதை நோக்கி ஆவேசமாக ஓடிய கூட்டம், ரயிலின் 2 டிரைவர்களையும் இழுத்துப் போட்டு அடித்து உதைத்தது.
ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கியது. ரயில் இன்ஜினுக்கும் பெட்டிகளுக்கும் தீ வைத்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மன்மோகனும் அதிர்ச்சியும் துயர மும் தெரிவித்துள்ளார்.