புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014


நதிகள் இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை: நரேந்திர மோடி உறுதி

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
சேலம் இரும்பாலையில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தேமுதிகவின் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடி பேசியது:
காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த போதிலும், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு கூட அவர்களால் தீர்வு காண முடியவில்லை. மாறாக பிரச்னைகளை அதிகப்படுத்திய அவர்கள், இப்போது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப் போவதாகக் கூறுகின்றனர்.
ஆனால், இந்தத் தேர்தல் வித்தியாசமானது. வாக்கு வங்கி அரசியல் இப்போது எடுபடாது. வெறுமனே வாக்குறுதிகள் கொடுப்பதைக் காட்டிலும் அவற்றை செயலில் காட்டுவதே மேலானது என்பதை மக்கள் விரும்புகின்றனர். ஊழலற்ற, சுத்தமான இந்தியா உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
சேலத்தில் 51 சதம் மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். மொத்த மக்களில் 73 சதம் பேர் மட்டுமே கல்வி அறிவு பெற்றுள்ளனர். ஆனால், நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்தச் சதவீதம் மிகவும் குறைவானது. மேலும், 65 சத மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. 55 சத வீடுகளுக்கு கழிவு நீர் வடிகால் வசதி இல்லை. ஆனால், நாங்கள் வாஜ்பாய் ஆட்சியில் முழு சுகாதாரத் திட்டம் கொண்டு வந்து, மக்களின் சுகாதார நலனுக்காக உழைத்தோம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யாத திட்டங்களை 60 மாதங்களில் செய்து முடிப்போம். வரும் 2022-ஆம் ஆண்டில் நாடு தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, அனைத்து மக்களுக்கும் வீடு, தடையற்ற மின்சாரம், அருகில் பள்ளிகள், சுகாதார வசதிகளைப் பெற்றிருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
சேலம் உருக்காலை உலக அளவில் புகழ் பெற்றது. மலேசியாவின் இரட்டைக் கோபுரம், மெல்போர்ன் மைதானம் போன்றவை சேலம் இரும்பைக் கொண்டுதான் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இரும்புத் தாது அதிக அளவில் உள்ளது. ஆனால், அவற்றை நாம் ஏற்றுமதி செய்துவிட்டு, இங்குள்ள ஆலைகளுக்கான மூலப் பொருளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.
இதனால், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிக்கிறது. எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு நமது உற்பத்தியை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. எனவே, இங்குள்ள மூலப் பொருள்களைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே இரும்பு தயாரித்து, அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், உருக்காலைகளை நவீனப்படுத்த வேண்டும்.
மரவள்ளி உற்பத்தியில் சேலம் உலகிலேயே முன்னிலையில் உள்ளது. ஆனால், மரவள்ளி விவசாயிகளோ பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தரமான விதைகள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கிடைப்பதில்லை. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் இதேபோல பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும். மேலும், நவீன வேளாண் உத்திகள், ஆங்காங்கே மண் பரிசோதனை மையங்கள், பயிர்க் காப்பீடுத் திட்டங்கள், உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் பெருக்கப்படும். இந்தியா முன்னேற வேண்டுமானால் விவசாயிகள் முதலில் முன்னேற்றம் பெற வேண்டும்.
தமிழகம் இப்போது மின் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதோடு, புதிய தொழில் வாய்ப்புகளும் மங்கியுள்ளன. எனவே, விவசாயிகளும், தொழில் முனைவோரும் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் மோடி.
பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சேலம் தொகுதி வேட்பாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ad

ad