புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2019

விவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தேர்தல் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு

ஒரு விவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–


மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு சதி செய்து இந்த தேர்தலை நிறுத்திவிட்டதாக சொல்கிறார். வேண்டுமென்று நாங்களா தேர்தலை நிறுத்தினோம்? நீங்கள் மூட்டை, மூட்டையாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக பதுக்கிவைத்திருந்த பணத்தை வருமான வரித்துறை கண்டுபிடித்து, அதனால் நிறுத்தப்பட்டது தான் இந்த தேர்தல். நாம் சதி செய்துவிட்டோம் என்று பச்சை பொய் பேசுகிறார்.

அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் வீட்டில் நீங்கள் ஏன் சோதனை நடத்தவில்லை என்று கேட்கிறார். இருக்கும் இடத்தில்தானே சோதனை நடத்துவார்கள். வருமான வரித்துறையானாலும் சரி, தேர்தல் கமி‌ஷனானாலும் சரி, எங்கு புகார் வருகிறதோ அங்குதான் சோதனை நடத்துவார்கள். புகார் வந்தது, சோதனை நடத்தினார்கள், நீங்கள் பிடிபட்டீர்கள், தேர்தல் நின்றது, இதுதான் நடந்த உண்மை. இந்த நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரைக்கும், இந்த தேர்தல் தள்ளிவைப்பதற்கு முழுக்க, முழுக்க காரணம் தி.மு.க.தான் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

பொய் பேசுகிறார்

அ.தி.மு.க. எந்த காரணத்தை கொண்டும் தேர்தலை நிறுத்துகின்ற முயற்சியில் ஈடுபடவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால், மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை. உங்களுக்கு மடியிலே கனம் இருந்தது, வழியிலே பயம் இருந்தது, தேர்தல் நின்றுவிட்டது, இதுதான் உண்மை. எனவே, மு.க.ஸ்டாலின் உண்மை நிலையை அறிந்து பேச வேண்டும்.

கர்நாடகத்தில் நடந்ததை பற்றி பேசுகிறார், கர்நாடகத்தில் உங்கள் கூட்டணி ஆட்சிதானே நடந்தது. மு.க.ஸ்டாலின் ராசியானவர். உங்களுடன் சேர்ந்திருந்த காரணத்தினால் தான் அங்கேயும் ஆட்சி போச்சு. ஆட்சிக்கும் வரமுடியவில்லை, கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றதும் போய்விட்டது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார், மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று கூறி பொய்யை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விட்டார். அதை மக்கள் நம்பி வாக்களித்துவிட்டார்கள்.

பொறுத்துக்கொள்ள முடியவில்லை

ஒரு பொய்யை திருப்பி, திருப்பி சொல்கிறபோது, உண்மையாக இருக்குமோ என்று மக்கள் எண்ணக்கூடிய அளவிற்கு பொய்யை மாறி, மாறி எல்லா கூட்டத்திலும் சொல்லி, மக்கள் மனதில் பதியவைத்து அதனால் ஏமாற்றி பெற்ற வெற்றிதான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி, உண்மையான வெற்றி அல்ல. நாங்கள் மனசாட்சிப்படி மக்களை சந்தித்தோம். உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோம், இதனை செய்தோம், இதனை செய்யப்போகிறோம் என்று ஆணித்தரமாக சொன்னோம். அதனடிப்படையில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள்.

கிராமம் நிறைந்த பகுதி இந்த பகுதி. நானும் ஒரு விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயிக்கு ஒரு நாட்டை ஆளக்கூடிய தகுதி இல்லையா? விவசாயி வந்து உட்கார்ந்தால் அந்த நாற்காலி உடைந்தா போய்விடும்? விவசாயி கையெழுத்து போட்டால் செல்லாதா? மு.க.ஸ்டாலின் கையெழுத்து போட்டால் தான் செல்லுமா? ஒரு சாதாரண விவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்.

வீழ்த்த முடியாது

எதிர் அணியில் இருக்கின்றவர்கள் எந்த அளவிற்கு அராஜகம் செய்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நான் நினைத்திருந்தால் கலைத்திருப்பேன் என்று நீங்களா பேசுகிறீர்கள். ஒருக்காலும் அ.தி.மு.க.வையும், எங்கள் ஆட்சியையும் வீழ்த்த முடியாது. ஆட்சியை கலைக்க முடியாது, கட்சியை உடைக்க முடியாது. மு.க.ஸ்டாலின், நீங்கள் போடாத ஆட்டமா? எப்படியெல்லாம் ஆடினீர்கள், எப்படியெல்லாம் புத்தகத்தை வீசி எறிந்தீர்கள்? சபாநாயகர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர், அவரைக்கூட சபாநாயகர் என்று பாராமல், அவர் இருக்கையிலே இருந்து அவரை இழுத்து விட்டுவிட்டு, கீழே தள்ளி அந்த நாற்காலியில் அமர்ந்த காட்சி என் கண்முன் இப்பொழுதும் நிற்கிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், அந்த உயர்ந்த பதவியில் இருப்பதைக் கூட பொறுக்க முடியாதவர்கள் நீங்கள். அந்த பெருமைக்குரிய இருக்கையிலே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்தார்களா? இல்லையா? நீங்களா இந்த நாட்டை ஆள தகுதியானவர்கள்? அத்தனையும் மறைத்துவிட்டு, வெளியிலே வருகிறபோது சட்டையை கிழித்துக்கொண்டு வந்தீர்கள்.

முதல்–அமைச்சர் நாற்காலி

பாவம், நான் கூட நினைத்தேன், நன்றாக போயிருந்தால் பரவாயில்லை, வீதியில் சட்டையை கிழித்துக்கொண்டு சென்றால் என்ன நினைப்பார்கள் என்று நீங்களே யூகம் செய்து கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நிலைமைக்கு வந்து விட்டார் மு.க.ஸ்டாலின். அந்த பதவியின் மேல் அவ்வளவு வெறி, முதல்–அமைச்சர் நாற்காலி மேல் அவ்வளவு வெறி, நாங்களா வேண்டாம் என்று சொல்லுகிறோம். இங்குள்ள மக்கள் கொடுத்தால் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். எனக்கு அந்த நாற்காலி மேல் வெறி இல்லை..

ஜெயலலிதாவுக்கு மக்கள் கொடுத்தார்கள். ஜெயலலிதா மறைந்த பிறகு, ஒரு விவசாயி அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கின்றேன். உங்களைப்போல் பதவிக்காக நாங்கள் வெறி பிடித்து திரியவில்லை. மக்கள் கொடுத்த பதவி, அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் நான் என்ன செய்வது?. நீங்கள் நல்லதை நினைத்து நல்லது செய்திருந்தால் அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கும்.

உதயநிதி புகழ்பாடுகிறார்கள்

உங்கள் எண்ணமும் நல்லது கிடையாது, உங்கள் நினைப்பும் நல்லது கிடையாது, அதனால் உங்களுக்கு நல்லது நடக்காது. அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம். மு.க.ஸ்டாலின் கர்நாடகா போல் இங்கேயும் ஆகும் என்று சொன்னீர்கள், அதையும் செய்து பார்த்தீர்கள், எதுவும் நடக்கவில்லை. மு.க.ஸ்டாலின் கனவு ஒரு போதும் நடக்காது.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக சிறுபான்மையினத்தைச் சார்ந்த முகமதுஜான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான். அதே போன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தி.மு.க.வில் கட்சிக்காக உழைத்தவர்கள் யாரும் இல்லையா? கட்சி நலனுக்காக பணியாற்றியவர்கள் எவருமே இல்லையா? ஏன் அவர்களுக்கு பதவி வழங்கவில்லை. தனது மகனுக்கு மட்டும் பட்டாபிஷேகம் செய்ய மு.க.ஸ்டாலின் ஏன் துடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். சட்டமன்றத்திலே தி.மு.க. உறுப்பினர்கள் உதயநிதி புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், கட்சியில் இதுவரை உழைத்தவர்களுக்கு என்ன மரியாதை உள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரட்டை இலை சின்னத்தில்...

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட இடங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். கே.வி.குப்பம் கவசம்பட்டில் பாலாற்றின் குறுக்கே தரை தடுப்பணை அமைக்கப்படும். குடியாத்தம் தொகுதி தட்டபாறை மீனூர் இடையே கவுண்டன்யா நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும். இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் இந்த தொகுதியில் நிறைவேற்றிடும் வகையில் ஏ.சி. சண்முகத்திற்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

ad

ad